Tuesday, December 28, 2010

விளையாட்டுத் துறையின் எதிர்காலம்

ஒலிம்பிக் போட்டியானாலும், காமன்வெல்த் போட்டியென்றாலும் அல்லது ஆசிய விளையாட்டுகளானாலும் சரி, பதக்கப்பட்டியலில் முன்னணியில் வரும் நாடுகளை உலக அரங்கில் பிரமிப்போடு பார்ப்பது என்பது சகஜமான ஒன்றாகும். ஒரு நாட்டின் பொருளாதாரத் தகுதிநிலையை பதக்கங்களின் எண்ணிக்கை தீர்மானிப்பதில்லை என்றாலும்கூட, அந்த நாட்டின் கெüரவத்தை நிலைநிறுத்துகிற காரணியாக இது பார்க்கப்படுகிறது.

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் கிடைத்ததில் மகிழ்ச்சியும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆறாவது இடம் கிடைத்திருப்பதில் ஓரளவு மனநிறைவும் நமக்கு ஏற்பட்டுள்ளது.

இது 2012-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியை நம்பிக்கையோடு எதிர்நோக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.

ஒரு விளையாட்டு வீரனை உருவாக்குவதில் பல்வேறு காரணிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒரு குழந்தை வளரும் சூழலை சமூகமயமாதல் என்று சமூகவியலார் கூறுகின்றனர். ஓர் உயிரினமாக இவ்வுலகுக்கு வரும் மனிதனை மனிதனாக மாற்றுவது அவன் பிறந்து வளரும் குடும்பச் சூழலேயாகும். குடும்பம் எனும் சமூகநிறுவனத்தின் மூலமாகவே அவன் சில மனப்பான்மைகள், விழுமியங்கள், நம்பிக்கைகள் இவற்றைப் பெறுகிறான்.

தன்னம்பிக்கை, விடாமுயற்சி, அரவணைத்து அன்பு பாராட்டுதல், பெரியவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்தல் போன்ற தன்மைகள் குழந்தைகளுக்கு வளரும் பிராயத்தில் கிடைக்குமேயாயின் அவர்கள் சாதனையாளர்களாக மிளிர வாய்ப்புகள் அதிகம். தேவையற்ற பயஉணர்வு, எளிதில் மனந்தளர்தல், விரக்திமனப்பான்மை, எதிர்மறைச் சிந்தனைகள் போன்ற தன்மைகள் கொண்ட பெற்றோர்களின் குழந்தைகள் அவர்களைப் போலவே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சாதனை உணர்வு மற்றும் ஊக்கம் போன்றவை தன்னம்பிக்கைமிக்க குடும்பச் சூழலில் உருவாகும் ஒன்றாகும். இவ்வகைக் குடும்பங்களில் எப்படியாவது வென்றாக வேண்டும் எனும் உணர்வு குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்கப்படுகிறது. இந்த இயல்புகளின் பின்னணியில்தான் சிறந்த விளையாட்டு வீரர்கள் உருவாகிறார்கள். ஆண் குழந்தைகள் மட்டுமல்லாது பெண் குழந்தைகளும் விளையாட்டுப் போட்டிகளில் முழுமனதோடு பங்கேற்கும் நிலையை பள்ளிகள் உருவாக்க வேண்டும். பெண் குழந்தைகளைப் பொறுத்த அளவில் இந்த ஊக்குவிக்கும் முயற்சி மிகமிகக் குறைவாகவே உள்ளது.

சாதனையாளர் என்ற வகையில் ஒரு விளையாட்டு வீரனோ அல்லது வீராங்கனையோ வளரும் சூழலில் உளவியலின் பங்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பது புலனாகிறது. ஆங்கிலத்தில் இப்படியொரு பழமொழி உண்டு. Half the game is played in mind என்பதே அது. மனதளவில் ஒரு நிகழ்வுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதையும் வெற்றிக்குத் திட்டமிடுதலையுமே இப்பழமொழி உணர்த்துகிறது.

அடுத்ததாக ஒருவிளையாட்டு வீரனின் வாழ்க்கையில் ஊட்டச்சத்துள்ள உணவின் முக்கியத்துவத்தை யாரும் மறுக்க இயலாது. விளையாட்டில் வெல்வதற்கு மனவலிமை எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு உடல்வலிமையும் முக்கியமானது. திடகாத்திரமான உடல் இல்லாத மக்கள் எந்த அளவுக்கு, உடல்வலிமையைப் பயன்படுத்தி வெல்லவேண்டிய தடகளம், குத்துச்சண்டை, வட்டு எறிதல் போன்ற போட்டிகளில் துடிப்பாகப் பங்கேற்க இயலும்? உடல் வலிமைக்கு அடிப்படைக்காரணி ஊட்டச்சத்துமிக்க உணவாகும். இத்தகைய சூழலில் ஒரு நாளிதழில் வெளியான செய்தி நமது சிந்தனைக்கு உரிய ஒன்றாகிறது.

காமன்வெல்த் நாடுகளில் மிக அதிக எண்ணிக்கையில் எடை குறைந்த நிலையில் உள்ள குழந்தைகளைக் கொண்ட நாடு இந்தியா என்பதே அச்செய்தி. இந்தியக் குழந்தைகளில் 43 விழுக்காடு குழந்தைகள் குறைந்த எடையுடன் இருப்பதாகவும், 5 வயதுக்குள்பட்ட பல லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், எதிர்காலத்தில் காமன்வெல்த் விளையாட்டு போன்ற போட்டிகளில் பிரகாசிக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு எனவும் save the children எனும் அமைப்பின் தலைமை நிர்வாகி தாமஸ்சாண்டி கூறுவதாகச் செய்தியாளர் ஆர்த்தி தார் குறிப்பிடுகிறார்.

ஒரு விளையாட்டுப் போட்டியை உடல், உரம், திறமையின் வெளிப்பாடு என்று கொண்டாடுகிற அதேவேளையில் நம் குழந்தைகளின் இளம் பிராயத்தின் முதல் இரண்டு ஆண்டுகளில் சத்துள்ள உணவைக் கொடுக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் ஆர்த்தி தார். கரு உருவான காலத்திலிருந்து குழந்தையின் இரண்டாம் பிறந்தநாள் வரை ஏறத்தாழ முதல் 33 மாதங்கள்வரை சத்துக்குறைவான உணவு கொடுக்கப்படுமேயாயின் அது நிவர்த்திக்க இயலாத தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் இச்செய்தியாளர்.

கிராமப் பகுதிகளில் மட்டுமன்றி, நகரங்களிலும்கூட குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டிய சத்தான உணவு வகைகள், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள் அடங்கிய, குறைந்த விலையில் கிடைக்கும் உணவுப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நலிவுற்றோர் மற்றும் மத்தியதர வர்க்கத்தினரிடையே ஏற்படுத்தப்படும் இந்த விழிப்புணர்வு மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்தியாவில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பங்களிலிருந்துதான் பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் உருவாகின்றனர். நமது விளையாட்டு வீராங்கனைகள் குறித்து சமூக ஆராய்ச்சி மையத்தின் அஞ்சுதுபே பாண்டே என்பவர் வெளியிட்ட கருத்து குறிப்பிடத்தக்கது. ஆச்சரியப்படும் வகையில் பெரும்பாலான விளையாட்டு வீராங்கனைகள் மிகவும் சாதாரணமான பின்புலத்தைச் சார்ந்தவர்களென்றும், ஆனால் அவர்கள் பெற்ற வெற்றி அவர்களின் மனஉறுதி மற்றும் உண்மையான மகளிர் வலிமையின் வெளிப்பாடு எனவும் காமன்வெல்த் போட்டிகளில் வெற்றியடைந்த வீராங்கனைகளைப் பற்றி குறிப்பிடுகிறார் அஞ்சுதுபே பாண்டே. சர்வதேச அளவில் இந்தியப் பெண்கள் பெறும் வெற்றி, மீண்டும் மீண்டும் அவர்கள் வெளிப்படுத்தும் போட்டியுணர்வு ஆகியன மகளிர் மேம்பாட்டில் மூலதனம் செய்வதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது எனவும் கூறுகிறார். இச்சூழலில் பள்ளிகள் மற்றும் மாவட்ட, மாநில அளவில் விளையாட்டில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் உணவில் பெற்றோரும், வழிகாட்டிகளும், பயிற்றுநர்களும் கவனம் செலுத்தும்போது மிகப்பெரும் சாதனைகள் நம் வசப்படும் என்பது உறுதி.

மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் பேசக்கூடிய துறைசார்ந்த வல்லுநர்களை அழைத்து கருத்தரங்கங்கள், பயிலரங்கங்கள் இவற்றை நம்முடைய ஊரகங்களில் ஏற்பாடு செய்வதன் மூலமாகவும் நிச்சயமாக நல்ல விளைவுகளை எதிர்பார்க்க முடியும்.

பொதுமக்கள் கூடுமிடங்களான சமுதாயக் கூடங்கள் போன்றவற்றில் சத்துணவு உள்ளிட்ட செய்திகள் அடங்கிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம். நம்முடைய சூழலுக்கு ஏற்றவாறு கதையம்சத்துடன் கூடிய செய்திப்படங்கள், கேளிக்கைகளுடன்கூடிய செய்தி நாடகங்கள் இவைகள் மூலமாக ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவர இயலும். "மாதா ஊட்டாத சோற்றை மா ஊட்டும்' என்று சொல்வதைப்போல வார்த்தைகளால் மட்டுமே இயலாத ஒன்றைப் படங்களின் மூலமாகக் கொண்டு செல்ல இயலும். இதைத்தான் ஆங்கிலத்தில் A picture is worth thousand words என்று சொல்வார்கள். நம்பிக்கையோடு முயற்சிப்போம். விளையாட்டுத் துறையில் சாதிப்போம்!

வருமுன் காப்போம்!

ஆண்டுதோறும் மழைக்காலத்தின்போது தமிழகம் வெள்ளக்காடாவதும், மழை வெள்ளத்தில் விவசாயப் பயிர்களும், வீடுகளும் மூழ்கிச் சேதமடைவதும் வாடிக்கையாகிவிட்டது. வழக்கம்போல இந்த ஆண்டும் மழை வெள்ளத்தால் தமிழகமே மிதந்தது.

குறிப்பாக, சென்னை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. லட்சக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் குழு கணக்கிட்டு, நிவாரண உதவி வழங்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

கோடைகாலத்தில் வறட்சியில் சிக்கித் தவிப்பதும், மழைக்காலத்தில் வெள்ளத்தில் மூழ்குவதுமான நிலைமை, தமிழகம் போன்ற அருமையான புவியமைப்பைக் கொண்டுள்ள மாநிலத்துக்குத் தகுமா? இயற்கையின் சீற்றத்தைத் தணிக்காமல் மேலும் சீண்டிப் பார்க்கும் வேலையைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

ஒவ்வோராண்டும் மழைக்காலத்துக்குப் பின்னர் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புப் பணிகள் குறித்து அக்கறை காட்டும் அரசு, அதற்கு முன்னரே மழை வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து போதிய அக்கறை காட்டுவதில்லை. அதன் விளைவுதான் இப்படி ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளச் சேதம்.

தமிழகத்தில் நீண்டகாலப் புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், பருவமழைக் காலங்களில் அப்படியொன்றும் அபரிமிதமாக மழை பெய்துவிடவில்லை. ஆண்டுக்கு ஆண்டு மழைப் பொழிவு குறைந்து கொண்டுதான் வருகிறது. இந்த ஆண்டு கொட்டித் தீர்த்த மழைகூட வங்கக்கடலில் ஏற்பட்ட புயல் சின்னத்தால்தானே தவிர, முற்றிலும் பருவமழையன்று.

ஒருசில நாள்களே பெய்தாலும், இந்த மழையால் ஊரே வெள்ளக்காடானது எப்படி? தொலைநோக்குப் பார்வையின்றி நீர்நிலைகளைக் கவனிக்காமல் விட்டதே இதற்குக் காரணம். எங்கு பார்த்தாலும் குளங்கள், கண்மாய்கள், ஏரிகளுக்குத் தண்ணீர் செல்லும் வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கிக் கிடக்கின்றன. ஒன்று அமலைச் செடிகள், முட்புதர்கள் என இயற்கையான ஆக்கிரமிப்பு; மற்றொன்று மனிதர்களால் ஏற்படுத்தப்படும் ஆக்கிரமிப்பு. இதனால், தண்ணீரின் போக்கில் தடை ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது.

மொத்தத்தில் ஆக்கிரமிப்பே மழைச்சேதத்தை அதிகமாக்கிவிட்டது. மழைச்சேதம் குறித்து ஆய்வு செய்ய வந்த மாநில மற்றும் மத்திய அதிகாரிகள் குழுவிடம் மக்கள் முறையிட்டதும் இதைப்பற்றித்தான்.

ஒருவழியாகத் தண்ணீர் வந்து சேர்ந்த குளங்களும் ஆண்டுக்கணக்கில் தூர்வாரப்படாமல், கரை பலப்படுத்தப்படாமல் இருந்ததால் மணல் மேடிட்டு, எளிதில் உடைப்பும் ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. கால்வாய்களின் நிலையும் இப்படித்தான். ஒருநாள் மழைக்குத் தாக்குப்பிடிக்காமல் கால்வாய்க் கரைகள் உடைந்ததால் வெள்ளம் வயல்களுக்குள் பாய்ந்து பயிர்களை மூழ்கடித்துவிட்டது.

நகர்ப்பகுதிகளில் இப்போதெல்லாம் அழகுக்குத்தானே முக்கியம் தரப்படுகிறது? சிங்காரச் சென்னை என்று இனிக்க இனிக்கச் சொன்னால் போதுமா? பாலங்களும், சாலைகளும் அழகாக இருந்தால் ஆயிற்றா? நகரில் மழைநீரை வெளியேற்றும் வடிகால்கள், ஓடைகள் சீராக இருந்தால்தான் அந்த நகரில் அடிப்படை உள்கட்டமைப்பு நன்றாக இருப்பதாக அர்த்தம். ஆனால், நகர்ப்பகுதியில் மழைநீர் வடிகால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, குப்பைகளைக் கொட்டும் கிடங்காக மாற்றப்பட்டு இருப்பதால், தண்ணீர் செல்ல வழியின்றி வீடுகளுக்குள் புகுந்தது.

இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? அந்தந்த நேரத்துக்குப் பிரச்னையைத் தீர்க்கும் வழியை மட்டும் பார்க்காமல், நிரந்தரமான தீர்வு குறித்து அரசு ஆலோசனை செய்ய வேண்டும். ஆண்டுதோறும் மழைச்சேதம் ஏற்படுவது இயல்புதானே என வாளாவிருக்காமல், நிரந்தர வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீவிரமாக முயற்சிக்க வேண்டும். மக்களுக்கு இலவசமாக என்னவெல்லாம் தரலாம் என்று யோசிப்பதைத் தவிர்த்துவிட்டு, தொலைநோக்குச் சிந்தனையுடன் நீண்டகாலப் பயன்தரும் திட்டங்கள் குறித்துப் பரிசீலிக்க வேண்டும்.

மழைச்சேதத்துக்கு நிவாரணம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யும்போதே, நிரந்தர வெள்ளத் தடுப்புத் திட்டத்துக்கும் ஓரளவு நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மழைச்சேதம் குறித்து இரண்டே நாளில் ஆய்வு செய்த "மின்னல் வேகத்தைப்'போல் அல்லாமல், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இதுகுறித்து ஆய்வு செய்யலாம்.

அரசு நிலங்கள்தான் இப்போது எளிதில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன. ஆற்றையே ஆக்கிரமித்துக் கரையில் விவசாயம் செய்பவர்கள் வாழும் காலமிது. இந்த ஆக்கிரமிப்பு குறித்து எங்கிருந்தோ ஆய்வுக்கு வரும் அதிகாரிகளைவிட, உள்ளாட்சி நிர்வாகங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை விடுங்கள், கால்வாய்களையும், குளங்களையும் ஆக்கிரமிக்கும் செயலையாவது தடுத்து நிறுத்தலாம் அல்லவா? வெள்ளம் வெளியேறும் வழியை அடைத்துவிட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது என்று சொல்வது என்ன நியாயம்?

இப்போது ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், பெரும்பாலும் குளங்களைத் தூர்வாரும் பணிதான் மேற்கொள்ளப்படுகிறது. அந்தத் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களைப் பயன்படுத்தி இதுபோன்று ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள நீர் வரத்துக் கால்வாய்களைக் கண்டறிந்து தூர்வாரினால் மழைக்காலத்தின்போது மிகுந்த பயனளிக்கும். வந்த பின் துயருருவதைவிட வருமுன் காப்பதுதானே நலம்!

Monday, December 27, 2010

வின்ஸ்டன் சர்ச்சில் பார்வையில் காந்திஜி

சமகாலத்தில் வாழ்ந்த இரு தலைவர்களை ஒப்பிட்டுப் பார்ப்பது, சரித்திர ஆய்வாளர்களின் பழக்கம். பிரிட்டனின் போர்க்காலப் பிரதமராக இருந்த சர்ச்சிலையும், இந்திய தேசப்பிதா என்றழைக்கப்படும் காந்திஜியையும் ஒப்பிட்டுப் பார்ப்பது ஒரு சுவையான அனுபவம்.

÷சர்ச்சில் ஆயுத பலத்தை நம்பியவர்; அண்ணல் காந்தியோ அஹிம்சையை நம்பியவர். சர்ச்சில் அதிகார பலத்தால் இந்தியாவை அடக்கி ஆள நினைத்தவர்; அண்ணல் காந்தியோ அன்பால், சத்தியாக்கிரக வழியால் இந்திய விடுதலைக்குப் போராடியவர். சர்ச்சில் பொதுவாக இந்தியர்களையும், குறிப்பாகக் காந்தியையும் வெறுத்தவர்; இகழ்ந்தவர். அண்ணல் காந்தியோ இந்தியாவை அடக்கி ஆண்ட ஆங்கிலேயர்களையும் நேசித்தார்; ஏன் சர்ச்சிலையும் அன்போடு நேசித்தவர். இருவரும் தாங்கள் ஏற்றுக் கொண்ட லட்சியத்தால் வேறுபட்டு நின்றார்கள். உணவு, உடை, பழக்க வழக்கம், அரசியல் அணுகுமுறை ஆகிய அனைத்திலும் வேறுபட்டு நின்றார்கள். இருவரும் இரண்டு மாறுபட்ட துருவங்கள் என்றால் எப்படி ஒப்பிட முடியும்? வேறுபட்டு நிற்கும் இருவரின் குண வித்தியாசங்களை ஆய்வு செய்து பார்க்கலாமல்லவா!

÷"காந்தி' என்ற சொல்லே சர்ச்சிலுக்கு எரிச்சலை ஊட்டியது; கோபத்தை வரவழைத்தது. 23-2-1931-ல் நடைபெற்ற சிறிய தொழிலாளர் கூட்டமொன்றில் சர்ச்சில் பேசுகிறார்:

÷""காந்தி ஒரு சாதாரண வக்கீல்; கீழ் தேசத்தின் "பக்கிரி'யைப் போல் காட்சி அளிப்பவர்; தூர நின்று பார்த்தால் அவர் ஆடை எதுவும் அணிந்திருக்கிறாரா, இல்லையா? என்பதில் சந்தேகம் வரும்! சற்று உற்றுப் பார்த்தால், அவர் ஒரு அரை நிர்வாணப் பக்கிரி போல் தோற்றமளிப்பார்! அது பற்றிக் கூட நான் கவலைப்படவில்லை! அதே அரை நிர்வாண உடையுடன், பிரிட்டிஷ் சக்கரவர்த்தியின் பிரதிநிதி - வைஸ்ராய் - வாழும் மாளிகைக்குச் செல்கிறார்! அவருடன் சரிநிகர் சமமாக அமர்ந்து பேசுகிறார்: அவர் ஒரு ""ராஜ துரோகி''யாக இருக்கிறார். இதைத் தான் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை'' - என்கிறார்.

÷அதற்கு ஓராண்டுக்கு முன்புதான் - 1930-ல் அண்ணல் காந்தி உப்பு சத்தியாக்கிரகத்தை நடத்தினார்; அதன் பயனாக மக்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் பொங்கி எழுந்தார்கள்; அப்பொழுதுதான் வைஸ்ராய் லார்டு இர்வின், அண்ணல் காந்தியின் அரசியல் பலத்தை, மக்கள் செல்வாக்கை உணர்ந்தார். சிறையிலிருந்து விடுதலை செய்து, காந்திஜியைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அது கேட்டு சர்ச்சில் வெகுண்டெழுந்து பேசுகிறார்:

÷""காந்தியோடு பேசுவதையும், ஒப்பந்தம் செய்து கொள்வதையும் நான் எதிர்க்கிறேன்; பிரிட்டானியர்கள் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும்; பிரிட்டிஷ் வணிகமும் வெளியேற்றப்பட வேண்டும் என்கிறார் காந்தி. பிரிட்டிஷார் ஆட்சிக்குப் பதிலாக, இந்தியர்களின் ஆட்சியைக் கொண்டுவரப் பார்க்கிறார். காந்தியோடு நம்மால் ஒத்துப் போகவே முடியாது'' என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில்.

÷""அதிகார பலத்தாலும், உறுதியான செயல்பாட்டாலும் தான், நாம் உலகின் பெரும்பகுதியை ஆள்கிறோம்; ஆனால் வைஸ்ராய் இர்வின் பயந்தவராக, பலவீனமானவராக நடந்து கொள்கிறார். அப் பலவீனத்தை காந்தி நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்'' என்றார் சர்ச்சில்.

÷26.3.1931 அன்று அரசியல் நிர்ணயகுழுவில் பேசும்போது, தன்னை அறியாமல் அண்ணல் காந்தியைப் புகழ்ந்து விடுகிறார் சர்ச்சில். ஆம்!

÷""காந்தி இந்திய மக்களை முழுமையாக அறிந்தவர்; அவர்களைப் போலவே உடை அணிகிறார்; அவர்கள் உண்ணும் உணவையே தானும் உண்கிறார்; அவர்கள் மொழியிலேயே பேசுகிறார். இதுபற்றிக் கூட நான் கவலைப்படவில்லை. ஆனால் தனக்கு வேண்டிய உணவை, வைஸ்ராய் மாளிகைக்குக் கொண்டு வரச் சொல்லி, அவர் முன்னால் உணவருந்துகிறார்! இது பிரிட்டிஷ் சக்கரவர்த்தியின் பிரதிநிதியை மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரசையே அவமதிப்பதாகும்! அதன் மூலம் சாதாரண இந்திய மக்கள், பிரிட்டிஷ் அரசை எதிர்க்கும் துணிவைத் தூண்டி விடுகிறார் காந்தி'' என்கிறார் சர்ச்சில்.

÷ஒருமுறை ""காந்தியமும், அதன் அணுகுமுறையும் முழுமையாக நசுக்கப்பட வேண்டும்'' என்றார்.

÷இரண்டாவது உலகப் போரின்போது, பிரிட்டன் கூட்டணி அரசின் பிரதமராகப் பொறுப்பேற்றார் வின்ஸ்டன் சர்ச்சில். அப்பொழுது லேபர் கட்சியைச் சேர்ந்தவர்கள் காந்திஜியின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நம்பினார்கள். ஹிட்லர் முசோலினியின் சர்வாதிகாரத்துக்கு எதிராகவும், பிரிட்டனின் சுதந்திரத்துக்காகவும் போராடும் நாம், இந்தியாவின் சுதந்திரத்தை, காந்தியின் கோரிக்கையை எப்படி மறுக்க முடியும்? எனக் கேட்டார்கள். அந்த வாதத்தின் நியாயத்தையும் சர்ச்சில் ஏற்க மறுத்தார்.

÷வியக்கத்தக்க ஏன்? வருந்தத்தக்க தகவல் ஒன்றும் உண்டு! 1943-ல் காந்திஜி உண்ணா நோன்பு இருந்தபோது, அவர் இறந்துவிடுவார் என்றுகூட எதிர்பார்த்தாராம், நம்பினாராம் சர்ச்சில். எவ்வளவு ஆழ்ந்த வெறுப்பு, கோபம் காந்திஜியின் மீது சர்ச்சிலுக்கு!

÷1944-ம் ஆண்டு காந்திஜி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இங்கிலாந்து அரசு இந்தியாவிலிருந்து விலகிக் கொள்வதற்கான காலஅட்டவணை தயாரிப்பது தொடர்பாக, காந்திஜியுடன் கடிதப் போக்குவரத்து தொடங்கினார் வைஸ்ராய். அப்பொழுது வெகுண்டெழுந்த சர்ச்சில்:

÷""காந்தி ஒரு துரோகி: சிறையில் தள்ளப்பட வேண்டியவர் அவர். அவரோடு பேசுவதையும், கடிதப் பரிமாற்றம் செய்வதையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது'' என்று கடுமையாகவும், கண்டிப்பாகவும் பேசினார். இந்தியா பற்றி சர்ச்சில் எடுத்த நிலையை, பெரும்பாலான பிரிட்டன் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

÷2002 டிசம்பரில் வெளிவந்த ""நியூ ஸ்டேட்ஸ்மென்'' பத்திரிகை சர்ச்சில் பற்றி கீழ்க்கண்டவாறு எழுதுகிறது. ""பெரும்பாலான ஆங்கிலேயர்களிடமிருந்து மாறுபட்டு நிற்பவர் சர்ச்சில்; அவர் ஒரு மிக மோசமான பிரிட்டானியர்; மிக மிக மோசமான ராஜ விசுவாசி; இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தவர்; நிறவெறி பிடித்தவர்; காந்தியை வெறுத்தவர்.

÷அவரது குறிப்பிடத்தக்க சாதனைகள் இரண்டே தான். அவை: இரண்டாவது உலகப் போரின் போது, தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டிருந்த இங்கிலாந்தை, வெற்றிப் பாதைக்கு நடத்திச் சென்றது. அடுத்தது இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றது''.

÷அண்ணல் காந்தி ஆயுதம் தாங்கிய படை நடத்தவில்லை; அன்பால், சத்தியத்தால் மக்களை நல்வழிப்படுத்தினார். அண்ணல் காந்தி நோபல் பரிசு பெறவில்லை; ஆனால் அதைவிட உயர்ந்த சிம்மாசனம் ஆன ""மக்கள் இதயங்களில்'' இடம் பிடித்தார்; உலக அமைதிக்கு வழிவகுத்தார். இந்தியாவுக்கு அஹிம்சை வழியில் விடுதலை தேடித் தந்தார்; இலங்கையும், பிற ஆசிய ஆப்பிரிக்க நாடுகளும் விடுதலை பெற வழிவகுத்தார். மகான் புத்தரைப் போல், ஏசுநாதரைப் போல் மக்கள் நல்வழிப்படுத்தினார். தனக்காக வாழாமல் உலகுக்காக வாழும் உத்தமர் ஆனார். உலகம் போற்றும் ""மகாத்மா'' ஆனார்.

÷""காந்திஜி, சர்ச்சில் - இருவரில் எவர் பெரியவர் உயர்ந்தவர் என்ற ஆய்வு தொடங்கினால், காந்திஜியோடு போட்டியிடுவதற்கு எவ்விதத்திலும் தகுதியில்லாதவர் சர்ச்சில்'' என்கிறார் ஏ.ஏ. கில் என்ற ஆங்கில எழுத்தாளர்.

கனிந்து வரும் "மா'

உலகிலேயே அதிகளவு மாம்பழம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா மட்டுமே. ஆண்டுக்கு 125 லட்சம் டன் மாம்பழம் உற்பத்தியானபோதிலும், ஏற்றுமதி செய்யப்படும் அளவு 1 விழுக்காட்டுக்கும் குறைவு. இப்போது 83 ஆயிரம் டன்களாக இருக்கும் ஏற்றுமதி அளவு அடுத்த நிதியாண்டில் (2010-11) 90 ஆயிரம் டன்களாக உயரும் (அதாவது 8 விழுக்காடு அதிகமாக இருக்கும்) என்று அபேடா (வேளாண் பொருள்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி ஆணையம்) எதிர்பார்க்கிறது.

தமிழ்நாட்டில் 2001-02-ம் ஆண்டில் 1.10 லட்சம் ஹெக்டேரில் மாம்பழம் சாகுபடி செய்யப்பட்டு, ஆண்டுக்கு 4.38 லட்சம் டன்கள்தான் உற்பத்தியானது. 2006-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி 1.62 லட்சம் ஹெக்டேரில் 9 லட்சம் டன்கள்தான் உற்பத்தி செய்கிறோம். ஆனால் ஆந்திரமும், உத்தரப் பிரதேசமும் நம்மைவிட நான்கு மடங்கு உற்பத்தி செய்கின்றன.

தமிழகத்தைப் பொருத்தவரை முக்கனி என்று சொன்னால் அவை மா, பலா, வாழை. அந்த அளவுக்கு மாம்பழத்தின் புகழ் இருந்தாலும், இந்திய அளவில் தமிழகத்தின் உற்பத்தி என்ன என்று பார்த்தோமேயானால், முதல் 5 இடத்தில்கூட தமிழகம் இடம்பெற முடியவில்லை. ஏன் இந்த நிலை? என்றால் நம் பலத்தை நாம் அறியவில்லை அல்லது நம் தமிழர்களுக்கு அறிவிப்பார் யாருமில்லை.

பொங்கினால் புளி, மங்கினால் மாங்காய் என்பது தமிழர் வழக்கம். அதாவது மழை மிக அதிகமாகப் பெய்தால் புளி அதிகமாகக் காய்க்கும். வெயில் அதிகமாக இருந்தால் மாங்காய் மற்றும் மாம்பழ விளைச்சல் அதிகமாக இருக்கும். இந்த அளவுக்கு அனுபவ ஞானம் இருந்தாலும்கூட, மாம்பழத்துக்கான சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தவும், தானே முன்னின்று செயல்படுத்தவும் தமிழக அரசு இத்தனை காலம் தயங்கி நின்றதால் தமிழகத்திலிருந்து மாம்பழ ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் எடுபடாமலேயே போய்விட்டன.

உலகச் சந்தையில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில். உணவு மேசையில் வைக்கக்கூடிய சுவையான பழங்களில் மாம்பழமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்போது தமிழக அரசு ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதாவது இஸ்ரேல் நாட்டின் வேளாண் துறையின் பழமரங்கள் துறை அதிகாரிகளை சேலத்துக்கு அழைத்து வந்து, அவர்களது தொழில்நுட்பத்தைச் சொல்லித் தரும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இப்போதாகிலும் இப்படியொரு முயற்சி செய்யப்பட்டுள்ளதே என்பதற்காக தமிழக அரசைப் பாராட்டத்தான் வேண்டும்.

இஸ்ரேல் நாட்டின் வல்லுநர்கள் சேலம் மட்டுமன்றி மாம்பழம் எங்கெல்லாம் தமிழகத்தில் சாகுபடி செய்யப்படுகிறதோ அந்த இடங்களுக்குச் சென்று, விவசாயிகளிடம் இஸ்ரேலிய தொழில்நுட்ப அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்கள். இதன் மூலம் ஒரு ஹெக்டேருக்கு விளையும் மாம்பழத்தின் டன் அளவு அதிகரிக்கும். இப்போது தமிழ்நாட்டில் ஒரு ஹெக்டேருக்கு 5.52 டன் மாம்பழ விளைச்சல்தான் உள்ளது. இது சராசரி இந்திய அளவான ஒரு ஹெக்டேருக்கு 6.2 டன் என்பதைவிட குறைவு. இதற்குக் காரணம், மாம்பழச் சாகுபடியில் நாம் புதிய சாகுபடி முறைகளைக் கையாளத் தவறிவிட்டோம் என்பதுதான்.

இஸ்ரேலில் மொத்தம் சுமார் 2,000 ஹெக்டேரில்தான் மாம்பழச் சாகுபடி நடைபெறுகிறது என்பதும், அங்கே ஒரு ஹெக்டேருக்கு 25 முதல் 30 டன்கள் வரை மாம்பழம் விளைகிறது என்பதையும் இஸ்ரேலிய நாட்டின் வேளாண் அலுவலர்கள் சொல்லும்போது நமக்கு வியப்பாக இருக்கிறது.

அதே அளவுக்கு உற்பத்தி தமிழ் மண்ணிலும் கிடைக்கும் என்பது உறுதியில்லை. ஆனால், ஒரு ஹெக்டேருக்கு சில டன்கள் விளைச்சல் அதிகரித்தாலும்கூட, மிகப்பெரும் பொருளாதார வளர்ச்சியை மாம்பழ வியாபாரிகள் பெற முடியும். மேலும், இந்த மண்ணில் விளையும் பழங்களுக்கு அரிய சுவையும் மணமும் உள்ளது என்பதுதான் சிறப்பு. இந்தச் சிறப்பை இழக்காமல், விளைச்சலை மட்டும் மேம்படுத்தும் தொழில்நுட்பத்தைத் தேர்வு செய்யவேண்டும். மேலை நாடுகளில் உரம்போடாத மரங்களில் விளையும் பழங்களுக்குக் கூடுதல் விலை கிடைக்கும் என்பதால் அத்தகைய பூச்சிமருந்து இல்லா மாம்பழ உற்பத்திக்கும் ஊக்கப்படுத்த வேண்டும்.

உத்தரப் பிரதேசத்தில் விளையும் துஷேரி ரக மாம்பழம் உலக அளவில் அங்கீகாரம் பெற்றிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் அத்தகைய ஓர் அடையாளத்தை ஏற்படுத்துவதில் நாம் பின்தங்கிவிட்டோமோ என்றே தோன்றுகிறது.

உ.பி., பிகார் மாநிலங்களில் சில கிராமங்களில் இப்போதும்கூட ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்தவுடன் ஒரு மா மரம் நடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். 15 ஆண்டுகளில் அந்த மரத்தில் மாம்பழம் கிடைக்கத் தொடங்கிவிடும். அந்தப் பணத்தை அப்படியே சேமிப்பாக வைத்து, அப்பெண் குழந்தையின் கல்யாணத்தை முடித்துவிடுவதால், அந்தக் கிராமங்களில் பெண்குழந்தைகள் பிறந்தால் யாரும் கவலைப்படுவதே இல்லை என்ற செய்தியைப் படிக்கும்போது, நம் கிராமங்களில்-ஏன் இந்த நிலைமை ஏற்படவில்லை என்று எண்ணத் தோன்றுகிறது.

மாங்காயை மிக மலிவாக வாங்கி அவற்றை ரசாயனக் கல் வைத்துப் பழுக்க வைத்து சந்தையில் விற்கும் பேராசை வியாபாரிகளிடம் சிக்கியுள்ள மா சாகுபடியாளர்களுக்கு, பழமாக விற்கவும், பிரத்யேகமான பழ மரங்களைச் சாகுபடி செய்யவும் ஊக்கப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. இப்போது புதிய தொழில்நுட்பத்தைக் கைக்கொள்ளும் விவசாயிகள் பலனைக் காண்பதற்கு 10 ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அதற்குள்ளாக மாம்பழ ஏற்றுமதி, மாம்பழக்கூழ் தொழில்கள் பற்றிய அறிவை நம் மா சாகுபடியாளர்களிடம் ஏற்படுத்தவும் வேண்டும்.

தோல்விக்குப் பின்னால்...

செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட் பாதை மாறியதால், அது மண்ணில் விழுந்து யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக வானிலேயே வெடித்துச் சிதறும்படிச் செய்தனர் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆண்டு இரண்டாவது முறையாக ஜிஎஸ்எல்வி ராக்கெட் அனுப்புவதில் தோல்வியடைந்திருக்கிறோம்.

1979-ம் ஆண்டு முதலாக 7 முறை செயற்கைக் கோளுடன் ராக்கெட் ஏவப்பட்டு, நான்கு முறை தோல்வி அடைந்திருக்கிறோம். இத்தகைய தோல்விகள் வளர்ந்த நாடுகளிலும் ஏற்படுவது உண்டு. ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இது பெரிய இழப்பு. தற்போது விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டின் மதிப்பு ரூ. 125 கோடி. சென்ற ஏப்ரல் மாதம், பாதை தவறி கடலில் விழுந்த ராக்கெட்டின் மதிப்பு ரூ. 150 கோடி.

இதற்காக நம்பிக்கை இழந்து செயற்கைக்கோள்களை அனுப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதல்ல அர்த்தம். இத்தகைய முயற்சிகளை நாம் நிறுத்த முடியாது, நிறுத்தவும் கூடாது. இத்தகைய அறிவியல் சாதனைகள்தான் நம்மை உலக அரங்கில் தலைநிமிர வைக்கும். பொருளாதார வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும் இத்தகைய அறிவியல் வளர்ச்சிதான் ஒரு வளரும் நாட்டுக்கு முக்கிய அடையாளம் என்பதை மறுக்க முடியாது.

ஏன் மீண்டும் மீண்டும் இத்தகைய தோல்வியை இந்தியா சந்திக்க நேர்கிறது என்பதை மிகத் துல்லியமாக, நுட்பமாக ஆய்வு செய்து கண்டறிய வேண்டியது மிகமிக அவசியம். இதற்காக இரண்டொரு நாளில் ஒரு குழுவை அமைத்து, ஆய்வு செய்யப்படவுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். கடந்த ஏப்ரல் 15-ம் தேதி ராக்கெட் விண்ணுக்குச் செலுத்தியபோதும் இத்தகைய குழு அமைக்கப்பட்டு அதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டன. இருப்பினும்கூட இப்போது புதிதாக ஒரு தவறு ஏற்பட்டு, அதன் காரணமாக ஜிஎஸ்எல்வி ராக்கெட் செலுத்த முடியாமல் போயுள்ளது.

கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் நாம் தேவையான முன்னேற்றம் காணவில்லை என்பது வெளிப்படை. தற்போது நாம் விண்ணில் செலுத்திக்கொண்டிருக்கும் ராக்கெட்டுகளில் ரஷியாவிடம் பெற்ற கிரையோஜெனிக் இன்ஜின்கள் தான் பொருத்தப்பட்டிருந்தன. புவியீர்ப்பு விசையை மீறி, சுமார் 2000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏந்திச்செல்ல வேண்டுமானால், மண்ணிலிருந்து புறப்படும் வேகம் மிகமிக அதிகமாகவும், வீரியமாகவும் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற தொழில்நுட்பமாக கிரையோஜெனிக் இன்ஜின் அமைந்துள்ளது. இந்த முறையும் கிரையோஜெனிக் இன்ஜினை முடுக்கிவிடுவதில் ஏற்பட்ட கோளாறுதான் ராக்கெட் தோல்வியடைந்ததற்கு அடிப்படைக் காரணம் என்று கூறப்படுகிறது. சரியாக எந்த இடத்தில் தவறு நடந்துள்ளது என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை.

தற்போது ஜிஎஸ்எல்வி ராக்கெட் தோல்வி ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிந்தாலும்கூட, முக்கியமான மூன்று விஷயங்களில் இந்தியாவுக்கு காலத்தால் பின்னடைவு நேர்ந்து கொண்டிருக்கிறது என்பதைக் கருத்தில்கொண்டு, இந்த பிரச்னையை அணுக வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது.

முதலாவதாக, ஆராய்ச்சியாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பொறியியல் மாணவர்கள் எல்லோரையும் சம்பாதிக்கும் இயந்திரங்களாகத்தான் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் மாற்றுகின்றன. நல்ல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் கல்வியை அளிப்பது இல்லை. இதையும் மீறி நல்ல ஆராய்ச்சியாளர்கள் உருவானால் அவர்களை ஊக்கப்படுத்தவும் ஆளில்லை.

கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் எங்கள் மாணவர் ஆண்டுக்கு இத்தனை லட்சம் ரூபாய் சம்பளத்துக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்று விளம்பரம் செய்யும் அவலம்தான் கடந்த பத்து ஆண்டுகளில் உருவெடுத்திருக்கிறது. எங்கள் மாணவர் இஸ்ரோவில் சேர்ந்திருக்கிறார் என்றோ, டிஆர்டிஓ-வில் ஆராய்ச்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்றோ, கல்லூரி விரிவுரையாளராகச் சேர்ந்திருக்கிறார் என்றோ சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்வதில்லை. கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் மட்டுமல்ல, அரசும் அடிப்படை விஞ்ஞான ஆராய்ச்சிக்கு முன்னுரிமை கொடுப்பதை நிறுத்திவிட்டது.

இரண்டாவதாக, ஆராய்ச்சியாளர்களைவிட அரசியல்வாதிகள் முக்கியத்துவம் பெறுவது எல்லா நிலைகளிலும் ஏற்பட்டுவிட்டது. ஆராய்ச்சியாளர் நியமனங்களில்கூட, அமைச்சருக்கும் ஆட்சியாளர்களுக்கும் வேண்டியவர், தகுதியில் சற்று பின்தங்கியிருந்தாலும்கூட தேர்ந்தெடுக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இவ்வாறு தேர்வு செய்யப்படும் இவர்கள்தான் சில ஆண்டுகளில் பதவி உயர்வு பெற்று, பொறுப்பான பதவிகளில் அமர்கிறார்கள். அப்போது இவர்களது திறமைக்குறைவு எல்லாவற்றின் மீதும் படிகிறது.

மூன்றாவதாக, ராக்கெட்டுகளை விண்ணில் ஏவும் இஸ்ரோ என்றாலும், புதிய பீரங்கிகளை உருவாக்கும் ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமானாலும் (டிஆர்டிஓ) தங்களுக்குத் தேவையான மிகச் சிறு கருவிகளையும் வெளியில் உள்ள பல்வேறு நிறுவனங்களிடம் அயல்பணி ஒப்பந்தம் மூலமாகவே பெறுகின்றன. இத்தகைய அயல்பணி ஒப்பந்தங்களில் ஈடுபடுத்தப்படும் ஒரு தொழிற்கூடம், தரத்தில் சிறிதும் சமரசம் செய்து கொள்ளாத நேர்மையான தொழிற்கூடமாக இருந்தால் மட்டுமே, ஒட்டுமொத்த ஆராய்ச்சியும் பயனுறும். இதில் ஒரு சிறிய பாகத்தை தரக்குறைவான தொழிற்கூடத்திடம், அரசியல் நிர்பந்தம் அல்லது மேலதிகாரியாக இருக்கும் ஆராய்ச்சியாளரின் நிர்பந்தம் காரணமாக ஒப்பந்தம் கொடுத்து, செய்து வாங்கினால், இத்தகைய தோல்விகள் ஏற்படவே செய்யும்.

லாடம் சரியில்லாவிட்டால் குதிரை சரியாக ஓடாது. குதிரை சரியாக ஓடாவிட்டால் அதன் மீது அமர்ந்துள்ள ராணுவ வீரன் சரியாக சண்டையிட முடியாது. வீரன் சண்டையிட முடியாவிட்டால், போரில் தோல்வி தவிர்க்க முடியாதது. தரத்துக்கும் அறிவுக்கும் முன்னுரிமை தரப்படாவிட்டால் இதுபோன்ற தோல்விகளைத் தவிர்க்க இயலாது.

Wednesday, December 22, 2010

வளர்ச்சி முக்கியமாயிற்றே!

புவிவெப்பமாதல் தடுப்பு நடவடிக்கையில், முதல்முறையாக இந்தியா தனது உறுதியான முடிவை அறிவித்துள்ளது. மெக்ஸிகோ, கான்குன் நகரில் நடைபெறும் ஐ.நா. புவிவெப்ப தடுப்பு நடவடிக்கை மாநாட்டில் பேசிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், வளிமண்டலத்தை மாசுபடுத்தும் வாயுக்களின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் சட்டப்படியான நிபந்தனைகளுக்கு கட்டுப்பட மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் இந்தியா, சுற்றுச்சூழலுக்கு எதிரான நடவடிக்கையை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்றோ, புவிவெப்பம் அதிகரிப்பதன் தீவிரத்தை உணர்ந்துகொள்ளவில்லை என்றோ சொல்லிவிட முடியாது. இருப்பினும் இத்தகைய முடிவுக்கு, இந்தியாவில் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் தர வேண்டியிருப்பதே காரணம்.

இவ்வளவு வெளிப்படையாக உலக அரங்கில் பேச வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது என்றால், அதற்கு மிக முக்கியமான காரணம் சீனா. அண்டை நாடான சீனா, வளிமண்டல மாசுக்கான வாயுக்களைக் கட்டுப்படுத்துவதில் யாரும் தன்னை நிர்பந்திக்க முடியாது என்பதை ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. சர்வதேச அரங்கில், இந்தியாவுக்கு இணையான தொழில்போட்டியில் உள்ள சீனா இத்தகைய நிலைப்பாட்டை மேற்கொண்டுவிட்ட பிறகு, அதேபோன்ற நிலைப்பாட்டை ஏற்றால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சியில் பெருந்தடைகள் ஏற்படாமல் இருக்கும். ஆகவே, சீனாவுக்கு இணையான காய் நகர்த்தல் என்றே இந்த முடிவை நாம் ஏற்கவேண்டியுள்ளது.

புவி வெப்பமடைதலால் ஏற்படும் தீமைகளைத் தடுக்க வேண்டுமானால், புவிவெப்பம் அதிகபட்சமாக 1.5 டிகிரி செல்சியஸýக்கு மேலாக உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கையில் அனைத்து நாடுகளும் ஈடுபட வேண்டும் என்றும் கியோட்டோ தீர்மானத்திலும், அதன்பின்னர் கோபன்ஹேகனில் நடைபெற்ற மாநாட்டிலும் பேசப்பட்டன.

இந்த இலக்கை அடைவதற்கு மிக அடிப்படையான தேவை தொழில் மாசுக் கட்டுப்பாடுதான். தொழிற்சாலைகள் கரியமில வாயு உள்ளிட்ட வளிமாசு வாயுக்களை வெளியேற்றும் பழைய தொழில்நுட்ப நடைமுறைகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். நவீன தொழில்நுட்பத்துக்கு மாறியாக வேண்டும். இத்தகைய நவீன தொழில்நுட்பத்துக்கு மாறுவதென்பது அமெரிக்காவுக்குச் சாத்தியமானது என்றாலும், வளரும் நாடுகளுக்கு மிகப் பெரும் பொருள்செலவைத் தரக்கூடியது. இத்தகைய மாறுதல்களைப் புகுத்தும்போது சில தொழில்களில் ஆள்கள் குறைக்கப்பட நேரும். வேலையிழப்பு ஏற்படும். சில தொழில்கூடங்களை முற்றிலுமாக இழுத்து மூடவேண்டிய நிலையும் ஏற்படலாம். இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாட்டில் இத்தகைய முடிவுகளைப் படிப்படியாகத்தான் செய்ய முடியும். தடாலடியாகப் புகுத்தினால் குழப்பமும், தொழிலாளர் வாழ்க்கைச்சீரழிவும்தான் எதிர்வினையாக முடியும்.

இத்தனை ஆண்டுகளாக வளிமண்டல மாசுக்கு அடிப்படைக் காரணமாகிய அமெரிக்கா இன்று நல்லபிள்ளை நானே என்று கூறிக்கொண்டாலும், தன் நாட்டில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட முன்வருவதில்லை. வளரும் நாடுகளால்தான் அதிக மாசு என்று கூறி, அவர்களுக்குப் புத்தி சொல்கிறது. நிதி தருகிறேன் தொழில்நுட்பத்தை மாற்றுங்கள் என்று சொல்கிறது. இந்தியாவுக்கு இவர்கள் தருவதாகச் சொல்லும் நிதியுதவி வெறும் வழிச்செலவு மட்டுமே.

குதிரை கீழே தள்ளியதோடு குழியும் பறித்த கதையாக, இந்த நிதியைப் பெறும் நாடுகளில் வளிமண்டல வாயு வெளியேற்றம் கட்டுக்குள் இருக்கிறதா என்று சட்டப்படியாக கண்காணிப்போம் என்கிற நிபந்தனையையும் விதிக்கிறார்கள். இது ஒரு மறைமுகமான நெருக்கடி ஆகும். சீனா போன்ற வளரும் நாடுகளுக்கு இணையாக தொழில் போட்டியை நடத்த முடியாமல் பின்தங்கிப் போகும் சூழலுக்கு இட்டுச்செல்லும் என்கிற அச்சத்தால்தான் இத்தகைய முடிவை இந்தியா மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் உள்ள அனைத்துத் தொழிற்கூடங்களையும் நவீனப்படுத்த போதுமான நிதி நம்மிடம் இல்லை. மேலும், இதற்காக தொழில் மேம்பாட்டுநிதி ஏற்படுத்தினாலும், அதைத் தின்பவர்கள் வழக்கமான போலிகளும், ஊழல் பேர்வழிகளாகவுமே இருப்பார்கள். இன்றைய சூழல் அப்படியாக இருக்கிறது. இந்தியாவில் இயல்பான தொழில்நுட்ப மாற்றத்தை நிகழ்த்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி, தொழில்துறைக்கு சக்தி தந்து, அவர்கள் மாறும்படிச் செய்யும்நடைமுறைக்குச் சில ஆண்டுகள் அவகாசம் தேவை. புவி வெப்பமாதல் மிகமுக்கியமான பிரச்னை என்றாலும், இந்தியாவின் வளர்ச்சியும் மிகவும் முக்கியமானது. இங்குள்ள மக்கள் தொழில்வாய்ப்பை இழக்காமல் இருப்பதும் முக்கியம்.

உலகச்சுற்றுச்சூழல்மீது இந்தியாவுக்கும் கவலையும் கரிசனமும் இருக்கவே செய்கிறது. ஆனால், இதனை எங்கள்மீது மட்டும் திணிக்காதீர்கள் என்பதுதான் இந்த வெளிப்படையான அறிவிப்பின் பொருள்.