Sunday, January 16, 2011

தேவை, நீதித்துறை சீர்திருத்தம்!

சமுதாயத்தில் எல்லா தரப்பினர் மீதும் அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கும் நிலைமை. சத்தியம், நேர்மை, தர்மம் என்பதை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, வெற்றிக்கு ஒரே அளவுகோல் பணம் மட்டுமே என்கிற மேல்நாட்டுச் சிந்தனை நம்மை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நிலைமையில் சற்று ஆறுதலும் நம்பிக்கையும் அளிப்பதாக இருப்பது நீதித்துறையின் நல்ல சில தீர்ப்புகளும், உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடும்தான். இப்போது அதையும் கேள்விக்குறியாக்கி, நமக்கிருக்கும் ஒரே நம்பிக்கையையும் சிதைக்கும் விதத்திலான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

"கடந்த 16-ம் தேதியன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளில் 8 பேர் லஞ்சப் பேர்வழிகள்' என்கிற குற்றச்சாட்டைமுன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்திபூஷண் முன்வைத்தபோது, நாடே அதிர்ந்தது. இது நீதிமன்ற அவமதிப்பாகாதா என்று சாதாரணப் பொதுஜனம்கூட வியந்தனர். வேறு யாராவது இப்படி ஒரு குற்றச்சாட்டைக் கூறியிருந்தால், நீதிபதிகள் கொதித்தெழுந்திருப்பார்கள். நீதிமன்ற அவமதிப்புக்காக அவர் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டனையும் வழங்கப்பட்டிருக்கும்.

குற்றம் சுமத்தியவர் விவரமில்லாதவர் அல்ல. அவரைக் கூண்டில் ஏற்றினால், என்னென்ன பூதங்கள் கிளம்புமோ? உச்ச நீதிமன்றம் மௌனம் சாதித்தது. உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்குத் தொடுத்தார். சாந்திபூஷணை மன்னிப்புக் கடிதம் கொடுக்கச் சொல்லுங்களேன் என்று நீதிபதியே வேண்டுகோள் விடுக்கிறார். மொத்தத்தில், குற்றச்சாட்டில் ஏதோ உண்மை இருக்கத்தான் செய்கிறது என்பது தெரிகிறது. இன்னும் பிரச்னை நீறுபூத்த நெருப்பாய் கனன்று கொண்டுதான் இருக்கிறது.

இப்போது நீதித்துறையைக் களங்கப்படுத்தும் இன்னொரு விஷயம் வெளிவந்திருக்கிறது. முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும் இப்போது தேசிய மனித உரிமைக் கமிஷனின் தலைவருமான கே.ஜி. பாலகிருஷ்ணனின் உறவினர்கள் வாங்கிக் குவித்திருக்கும் சொத்துகள்தான் இதற்கெல்லாம் காரணம்.

நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் சகோதரர் கே.ஜி. பாஸ்கரன், கேரள அரசின் சிறப்பு அரசு வழக்குரைஞராகக் கேரள உயர் நீதிமன்றத்தில் இருந்தவர். இவர், கே.ஜி. பாலகிருஷ்ணன் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த மூன்றரை ஆண்டு காலத்தில் தமிழகத்திலும், கேரளத்திலும் வாங்கிக்குவித்த அசையாச் சொத்துகள் பற்றிய விவரம் சமீபத்தில் வெளிவந்திருக்கிறது. வேறு வழியில்லாமல், தனது வருமானத்துக்கும் அதிகமான சொத்து சேர்த்த பிரச்னையால் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் சகோதரர்.

பிரச்னை இதோடு முடிந்துவிடவில்லை. நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் மூத்த மருமகன் பி.வி.ஸ்ரீநிஜன். இவர் கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞரும்கூட. இவர் மீதும் கடந்த 5 ஆண்டுகளில் வருவாய்க்குப் பொருத்தமின்றி சொத்து சேர்த்த குற்றச்சாட்டு பத்திரிகைகளில் வெளியாகியது. திடீர் கோடீஸ்வரரானது இவர் மட்டுமல்ல, முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் இளைய மகளின் கணவரான பின்னியும்தான்.

2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மனித உரிமைக் கமிஷனின் இப்போதைய தலைவர் கே.ஜி. பாலகிருஷ்ணனின் மூத்த மருமகன் ஸ்ரீநிஜன் போட்டியிடும்போது, அவரது மொத்த சொத்து மதிப்பு வெறும் ரூ. 25,000 மட்டுமே. இது அவரே கொடுத்திருக்கும் வாக்குமூலம். இப்போது கோடிகளில் அவர் சொத்து சேர்த்தது எப்படி என்கிற நியாயமான கேள்வி எழுகிறது.

பிரச்னை பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்த நிலையில், புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன். இவர்கள் தங்களது மாமனார் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் பெயரையும், உதவியையும் பயன்படுத்தித்தான் சொத்து சேர்த்தார்களா என்பதை விசாரிக்க வேண்டும் என்று ஒருவரும், தனது மருமகன்கள் தனது பெயரைப் பயன்படுத்திச் சொத்து சேர்க்க முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அனுமதித்தாரா என்பதை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனை தேசிய மனித உரிமைக் கமிஷனின் தலைவர் பதவியிலிருந்து விலக்கக்கோரி பல பார் அசோசியேஷன்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றன.

எனது மருமகன்கள் எப்படிச் சொத்து சேர்த்தார்கள் என்பதை அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும் என்றும், தனக்கு அதில் தொடர்பே இல்லை என்பது போலவும் அறிக்கை வெளியிட்டுத் தப்பித்துக் கொள்ள முயல்கிறார் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன். சட்டப்படி, அவரது கூற்றில் நியாயமிருக்கலாம். ஆனால், மனசாட்சிப்படி அவர் தனக்கு இதைப்பற்றி எதுவுமே தெரியாது என்று கூறுவாரேயானால், உச்ச நீதிமன்றத்தின் தலைமைப் பொறுப்பில் நாம் ஒரு பொய்யரை அமர்த்தி அழகு பார்த்திருக்கிறோம் என்று தலைகுனிந்து வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் நீதிபதிகளைப் பற்றிய, குறிப்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பற்றிய விவரங்களைத் தரவேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டவர் அன்றைய தலைமை நீதிபதியான கே.ஜி. பாலகிருஷ்ணன். நீதிபதிகள் தங்கள் சொத்துக் கணக்கை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றுகூறி நிராகரித்தவர் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன். இப்போதல்லவா தெரிகிறது, அதன் பின்னணியும் காரணமும்!

சாந்திபூஷண் குறிப்பிட்ட 8 ஊழல் தலைமை நீதிபதிகளில் ஒருவர் யார் என்பது தெரிந்துவிட்டது. மீதி 7 பேர் யார்யார் என்பதும் வெளியாகக்கூடும். அதுவல்ல முக்கியம். நீதித்துறை களங்கப்படுகிறது. அதன் மீதான நம்பிக்கை தகர்கிறது. இது தேசத்துக்கு நல்லதல்ல.

நீதிபதிகள் நியமனத்தில் தொடங்கி, தவறிழைக்கும் நீதிபதிகளை விசாரிப்பது, பதவி நீக்கம் செய்வது வரை பல மாற்றங்கள் உடனடியாகச் செய்யப்பட்டால் மட்டுமே, நீதித்துறையில் நேர்மையையும், நீதித்துறையின் நன்மதிப்பையும் நிலைநிறுத்த முடியும். உடனடியாக, நீதித்துறைச் சீர்திருத்தத்துக்கு வழிகோலுவதற்கு நீதித்துறை சீர்திருத்தக் கமிஷன் அமைக்கப்படுவதுதான் ஒரே தீர்வு. அப்படி அமைக்கப்படும் கமிஷனுக்கு, நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் போன்றவர்களைத் தலைவராக நியமித்துவிடாமல் இருக்க வேண்டுமே என்பதுதான் நமது அடுத்த கவலை!

Monday, January 3, 2011

சில்லறை வணிகம் - மாறுபட்ட கோணத்தில்!

உலகில் சந்தை வியாபார அமைப்பை உருவாக்கிய முன்னோடி சமூகங்களில் ஒன்று இந்திய சமூகம். நம்முடைய வர்த்தக அமைப்பு எல்லா காலகட்டங்களிலும் அமைப்புசாரா சில்லறை வியாபாரக் கட்டமைப்பாகவே இருந்திருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகத்தில் தொடங்கி வரலாற்றின் எந்தப் பகுதியிலும் இதற்கான சான்றுகளை நம்மால் பார்க்க முடியும். சங்க காலத் தமிழ் இலக்கியமான "மதுரைக்காஞ்சி'யில் வரும் ஒரு பாடல் வீதிகளில் பலவகைப் பொருள்கள் விற்போரும், ஒருவர் காலோடு ஒருவர் கால் பொருந்துமாறு நெருக்கமாக நின்று விற்பனையில் ஈடுபட்டிருந்ததைக் குறிப்பிடுகிறது. இன்றளவும் அந்த மரபு நீடிக்கிறது.

விவசாயத்துக்கு அடுத்த நிலையில் } ஏறத்தாழ 5 கோடிப் பேருக்கு } வேலை அளிக்கும் களமாக அமைப்புசாரா சில்லறை வியாபாரத் துறையே இருக்கிறது. சுமார் | 1.5 லட்சம் கோடி புரளும் இத்துறை, இந்திய வர்த்தகத்தில் 95 சதவீதத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதில் முறைசார் வியாபாரத்தின் பங்கு வெறும் 3 சதவீதம்தான். ஆனால், இந்த வரலாறு எல்லாம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும்?

நாம் இப்போது சில்லறை வியாபாரத்தில் வேர்விடும் பெருநிறுவனங்களை விமர்சிக்கிறோம். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்று புதிய பொருளாதாரக் கொள்கையின் கேடுகளைத் திரும்பத்திரும்பப் பேசுகிறோம். ஆனால், புதிய பொருளாதாரக் கொள்கை அமலாக்கப்பட்டதற்குப் பின் பிறந்த ஒரு தலைமுறை இப்போது வளர்ந்துவிட்டது. அடுத்த சில ஆண்டுகளில் நாட்டின் அடுத்தகட்டத்தைத் தீர்மானிக்கும் அளவுக்கு அது தயாராகிக் கொண்டிருக்கிறது. நாம் ஏன் இதைக் கவனிக்கவில்லை?

ஆமாம், நம்முடைய புதிய பொருளாதாரக் கொள்கைக்கு வயதாகிவிட்டது. இப்போது அது வெறும் கொள்கை அல்ல; அது ஒரு சமூக அறிவியலாக வளர்ந்து நிற்கிறது. இனியும் நாம் அதைப் "புதிய' என்று குறிப்பிடுவதும் "கொள்கை' என்ற அளவிலுமே பார்ப்பது அபத்தமானது. நாம் பின்தங்கிக் கொண்டிருக்கிறோம் அல்லது அது நம்மைக் கடந்து கொண்டிருக்கிறது. இனியும், நாம் நம்முடைய பாரம்பரிய வணிக அமைப்பையும் பொருளாதாரத்தையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் நாம் நம்மைத் தயாராக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

சுதேசி உணர்வுடைய நம்மில் பலர் பெருநிறுவனக் கடைகளை வெறும் கடைகளாகப் பார்ப்பதில்லை. நமக்குப் பிடிக்காத பொருளாதாரக் கொள்கையின் நேரடிச் சின்னங்களில் ஒன்றாகவே பார்க்கிறோம். அதனாலேயே அவற்றைப் புறக்கணிக்கிறோம். பொருள்களின் விலை கொஞ்சம் அதிகம் என்றாலும், சற்றுக் கூடுதல் தொலைவாக இருந்தாலும், பொருள்களின் தரம் முன்பின் இருந்தாலும் சிறு வியாபாரிகளைத் தேடுவதை நம்மில் பலர் ஓர் ஒழுக்கமாகவும் கடைப்பிடிக்கிறோம். சரி, நாம் இப்படி இருக்கிறோம்; நாளை நம் பிள்ளைகள்?

நம்முடைய பாரம்பரிய வணிக அமைப்பையும் பொருளாதாரத்தையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று பேசுவோர் யாவரும் ஒரு பெரிய தவறைச் செய்கிறோம்; நம்முடைய பழைய அமைப்பில் உள்ள பலகீனங்களைப் பேச மறுக்கிறோம். மறைமுகமாக தரத்தில் சமரசம் பேசும் உத்தி இது. நுகர்வோரின் தரப்பிலிருந்து பார்க்கும்போது இது அநீதியும்கூட.

யோசித்துப் பாருங்கள். சந்தையில் நிற்கும் சில்லறை வியாபாரிகள் எவரிடமாவது நம்மால் கால் கிலோவுக்குக் குறைந்து காய், கனிகளை வாங்க முடிகிறதா? அப்படிக் கேட்போருக்கு சில்லறை வியாபாரிகள் கொடுக்கும் மரியாதை எப்படி இருக்கிறது? சுத்தம், சுகாதாரத்தில் நம்முடைய சிறு வியாபாரிகளின் அக்கறை என்ன? தெருவோர உணவகங்களில் குடிக்கக் கொடுக்கப்படும் தண்ணீரின் தரம் எப்படி இருக்கிறது?

யோசித்துப் பாருங்கள், நீண்டகாலம் பால் வியாபாரம் சில்லறை வியாபாரிகளான பால்காரர்கள் கைகளில்தான் இருந்தது. இப்போதோ கிராமங்களில்கூட கறவைப் பால் அரிது. காரணம் என்ன? மக்கள் எல்லோரும் ஏன் "பாக்கெட்' பாலுக்கு மாறினார்கள்? காரணம் பொருளாதாரக் கொள்கையும் பெருநிறுவனங்களும் மட்டும்தானா? பால்காரர்களின் தண்ணீர் கலப்படமும் அதற்கு ஒரு காரணம் இல்லையா?

யோசித்துப் பாருங்கள். இன்றைக்கு மீன் வியாபாரம் முழுமையாக சில்லறை வியாபாரிகளிடமே இருக்கிறது. மீன் வாங்கத் தெரியாத ஒரு நுகர்வோர் நல்ல மீன்களை சந்தையில் வாங்கி வருவது சாத்தியமானதாகத்தான் இருக்கிறதா? முதல் நாள் பிடிக்கப்பட்டு மறுநாள் காலையில் கெட்டுவிடும் மீன்கள், திறந்த நிலையிலேயே சந்தையில் மாலை வரை விற்கப்படுகின்றனவே இது சரிதானா? நாளை மீன் வியாபாரத்தையும் பெருநிறுவனங்கள் சுருட்டினால் அதற்குப் பொருளாதாரக் கொள்கையும் பெருநிறுவனங்களும் மட்டுமே காரணமாக இருக்குமா?

இந்த நாட்டில் எந்தத் துறையினரிடமும் இன்றைக்கு அறவுணர்வு கிடையாது. விளிம்பு நிலையிலிருக்கும் சில்லறை வியாபாரிகளிடம் மட்டும் அதை எதிர்பார்ப்பது அநீதியாக இருக்கலாம். ஆனால், தரமும் வாடிக்கையாளர் அணுகுமுறையும் அப்படி அல்ல. அவை வியாபாரத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான காரணிகளாக மாறிக்கொண்டிருக்கின்றன.

சில்லறை வியாபாரத்தில் பெருநிறுவனங்கள் வளர்ந்தால், நாளை நாட்டின் வேளாண்மையையும் விலைவாசியையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக அந்நிறுவனங்கள் உருவெடுக்கும். சரிதான். ஆனால், மளிகைச் சாமான்கள் வாங்கச் செல்லும் ஒரு சாதாரண நுகர்வோர் இதையெல்லாம் யோசித்துப் பெருநிறுவனங்களைப் புறக்கணிப்பார் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். போட்டிக்கு நாமும் தயாராக வேண்டும்.

சரியாகச் சொல்வதானால், நம்முடைய பாரம்பரிய வணிக அமைப்பையும் பொருளாதாரத்தையும் தக்கவைத்துக்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதுவரை நாம் நுகர்வோரிடம் பேசிக்கொண்டிருந்தோம். இனி, வியாபாரிகளிடமும் பேசுவதே பொருத்தமானதாக இருக்கும்!