Monday, February 28, 2011

மத்திய பட்ஜெட் 2011 : முழு விபரம்

2011-12 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார் இதன் விபரம் வருமாறு : நாட்டின் உணவு பணவீக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது; வேளாண்மை துறை தேவைகளை அதிகரிக்கவும் திட்டமிட்டப்பட்டுள்ளது; நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 % ஆக உள்ளது; பொருளாதார நெருக்கடியும் சரி செய்யப்படும்; விவசாய துறையும் 5.4% வளர்ச்சி பெற்றுள்ளது; தொழில்துறை 8.1%, சேவை துறை 9.6 % வளர்ச்சி பெற்றுள்ளது; அரசு துறை வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.6000 கோடி நிதி வழங்க அனுமதி வழங்கப்படும்; மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்; வேளாண் துறையில் புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும்; கைத்தறி நெசவாளர்களுக்கு நபார்டு வங்கிளுக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு; புதிய திட்டங்களின் மூலம் 3 லட்சம் ‌நெசவாளர்கள் பயன் பெறுவர்; விவசாயத்தை மேம்படுத்த கூடுதலாக ரூ.7860 கோடி ஒதுக்கீடு; வேளாண்துறையில் தனியார் முதலீடுகளை அதிகப்படுத்த புதிய திட்டங்கள்; உணவு பணவீக்கத்தை கட்டுப்படுத்த உணவு பதப்படும் திட்டங்கள் ஊக்குவிக்கப்படும்; நாட்டின் மேற்கு பகுதியில் பசுமை புரட்சியை அதிகரிக்க கூடுதலாக ரூ.400 கோடி ஒதுக்கீடு; குறிப்பிட்ட தேதிக்குள் கடன்களை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு கடனில் 3 சதவீதம் விலக்கு அளிக்கப்படும்; எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்; உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களுக்கு வரி விலக்கு; வீட்டு கடன் தொலை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக அதிகரிக்கப்படும்; விவசாயிகளுக்கு கூடுதல் கடன் திட்டங்கள்; உணவு பாதுகாப்பு மசோதா இவ்வாண்டு முதல் அமல்படுத்தப்படும்; பாரத் நிர்மாண் திட்டங்களுக்கு ரூ.58 ஆயிரம் கோடி ஒதுக்கீடு; கல்வி திட்டங்கள் 24 % அதிகரிக்கப்படும்; பொதுத்துறை திட்டங்களும் அதிகரிக்கப்படும்; 9 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்பு தொகை அதிகப்படுத்தப்படும்; கல்வித்துறைக்கு ரூ.52 ஆயிரம் கோடி ஒதுக்கீடு; வெளிநாடுகளில் இருக்கும் கறுப்பு பணத்தை மீட்க 5 அம்ச திட்டம் அறிமுகம்; சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கு ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு; கிராமப்புற தொலைத்தொடர்பு திட்டங்களுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு; பிபிஎல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வயது வரம்பு தளர்த்தப்படும்; நதிகளை சுத்தம் செய்ய சிறப்பு நிதி ஒதுக்கீடு; அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியம் ரூ.1500 லிருந்து ரூ.3000 ஆக உயர்வு; முதியோர் ஓய்வூதிய வயது வரம்பு 65 லிருந்து 60 ஆக குறைப்பு; பழங்குடி மக்களுக்கான நிதி ரூ.244 கோடியாக அதிகரிப்பு; புதிய நீதிமன்ற கட்டிடங்களுக்கு ரூ.1000 கோடி நிதி வழங்கப்படும்; இலக்கிய துறைகளுக்கு ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு; 80 வயதிற்கு மேற்பட்ட ஏழைகளுக்கு ஓய்வூதிய தொகை ரூ.500 உயர்வு; நக்சலைட்டு பாதிப்புகளுக்கு உள்ளான பகுதிகளின் மேம்பாட்டிற்கு ரூ.55 கோடி ஒதுக்கீடு; புதிய உர கொள்ளை திட்டங்கள் அறிமுகம்; தனிநபர் வருமானவரி உச்சவரம்பு ரூ.1.6 லட்சத்திலிருந்து ரூ.1.8 லட்சமாக உயர்வு; மூத்த குடிமக்கள் தகுதி பெறுவதற்கான வயது வரம்பு ரூ.60 ஆக குறைப்பு; சேவை வரி மற்றும் சுங்க வரியில் மாற்றம் இல்லை; உள்ளூர் மற்றும் வெளியூர் பயணத்திற்கான சேவை வரி 10% அதிகரிப்பு; உணவு மற்றும் எரிபொருட்களுக்கான சுங்க வரி நீடிக்கும்; அடிப்படை சுங்க வரி 5% உயர்வு; பெண்களுக்கான புதிய வரிவிலக்கு ஏதும் இல்லை; விமான பயணத்திற்கான சேவை வரி உயர்வு;

Thursday, February 3, 2011

இந்திய - அமெரிக்க உறவில் அடுத்த வளர்ச்சிக்கு ஏற்பாடு

இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்துவதற்காக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், வரும் ஏப்ரல் முதல் வாரத்தில், இந்தியா வருகிறார்.

அதேபோல், இந்திய உயர் அதிகாரிகள் பலரும், வரும் நாட்களில், அடுத்தடுத்து, அமெரிக்க பயணம் மேற்கொள்ள உள்ளனர்.அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, கடந்த நவம்பரில் இந்தியா வந்தார். அப்போது, இந்திய - அமெரிக்க உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பல முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், கடந்த வாரம் வாஷிங்டன் சென்றார். கடந்த 27ம் தேதி துவங்கிய மூன்று நாள் பயணத்தின் போது, அதிபர் ஒபாமா, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலான் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது உட்பட பல விஷயங்கள் குறித்து அவர்களுடன் ஆலோசித்தார்.

மேனனின் இந்தப் பயணத்தைத் தொடர்ந்து, வரும் 13, 14ம் தேதிகளில் வெளியுறவு செயலர் நிருபமா ராவ், அமெரிக்கப் பயணம் மேற்கொள்கிறார். அப்போது, அமெரிக்க வெளியுறவு செயலர் வில்லியம் பர்ன்ஸ் உட்பட, அந்நாட்டின் உயர் அதிகாரிகள் பலரைச் சந்திக்கிறார்.இதன்பின், மார்ச் 2 முதல், 6 வரை, இந்திய ராணுவச் செயலர், வாஷிங்டன் பயணம் மேற்கொள்கிறார். அங்கு, ராணுவ கொள்கை தொடர்பான கூட்டம் உட்பட, பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இவரைத் தொடர்ந்து இந்திய ராணுவத் தளபதி, மார்ச் 7 முதல், 13 வரை, அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்

.அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், ஏப்ரல் முதல் வாரத்தில், இந்தியா வருகிறார். அப்போது, இரு நாடுகள் இடையேயான உறவுகளை ஆக்கப்பூர்வமான வகையில் மேம்படுத்துவது உட்பட, பல விஷயங்கள் குறித்து, வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா உட்பட, இந்திய தலைவர்களுடன் விவாதிக்கிறார்.அதே நேரத்தில், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கிக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக ஏப்ரலில் வாஷிங்டன் செல்கிறார். இருநாட்டுத் தலைவர்களின் இந்தப் பயணத்தால், பயங்கரவாத ஒழிப்பு உட்பட, பல விஷயங்களில் இந்தியா - அமெரிக்கா இடையே ஒத்துழைப்பு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

எகிப்து எழுப்பும் எச்சரிக்கை!

நான்கு நாள்களாக எகிப்து ஒரு மிகப்பெரிய மக்கள் புரட்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக இரும்புக் கரம் கொண்டு மக்களின் பேச்சுரிமையையும், சுதந்திரத்தையும் அடக்கி வைத்து ஒரு சர்வாதிகார ஆட்சிக்குத் தலைமை தாங்கி வந்த அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்திருக்கிறது.

ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் தெருவில் இறங்கி எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் மட்டுமல்லாமல் அலெக்சாண்டீரியா உள்ளிட்ட எல்லா நகரங்களின் மையப் பகுதிகளையும் தங்கள் வசப்படுத்தி இருக்கிறார்கள். ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியின் அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. அரசு அலுவலகங்கள், அரசு தொலைக்காட்சி நிலையங்கள், ஏன், அரசுக்கு ஆதரவான பத்திரிகை அலுவலகங்கள் அனைத்துமே தாக்கப்படுகின்றன.

ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர்ப்புகை வீச்சிலும், தடியடிப் பிரயோகங்களிலும் காயமடைந்திருக்கிறார்கள். இணையதளம், செல்பேசி போன்றவை அரசால் முடக்கப்பட்ட நிலையிலும் போராட்டம் வலுத்து வருகிறதே தவிரக் குறைவதாகத் தெரியவில்லை.

இதற்கு முன்பு இதுபோன்ற மக்கள் போராட்டம் ஒன்று 1977-ல் எகிப்தை ஸ்தம்பிக்க வைத்தது. அதற்கு "ரொட்டிக் கலவரம்' என்று பெயர் சூட்டப்பட்டது. உணவுப் பஞ்சம்தான் அந்தக் கலவரத்துக்குக் காரணம். அன்றைய அதிபர் அன்வர் சதத்தின் ஆட்சியைப் பலவீனப்படுத்தி, ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலிய அந்தக் கலவரத்தைப் போலவே, இந்த மக்கள் புரட்சியும் ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலக்கூடும்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி தரும் தகவல்களும், அல் ஜஸீரா தொலைக்காட்சி சேனலின் முனைப்புடன் கூடிய மக்கள் புரட்சிக்கு ஆதரவான செய்திகளும், எகிப்தில் ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சிக்கு வலு சேர்த்திருக்கின்றன என்பது தெளிவு.

மக்கள் வெகுண்டெழுந்து தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கி இருக்கிறார்கள் என்றால் காரணம் இல்லாமல் இல்லை. கட்டுக்கடங்காத விலைவாசி; சராசரி எகிப்து குடிமகனின் கைக்கெட்டாத உணவுப் பொருள்களின் விலையும் தட்டுப்பாடும்; பரவலாகக் காணப்படும் லஞ்ச ஊழல்; அரசின் வேவுத் துறையினரின் அட்டகாசம்; வேலையில்லாத் திண்டாட்டம் என்று உலகின் வேறு பல நாடுகளிலும் காணப்படும் அதே நிலைமைதான் எகிப்திலும்!

எட்டு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் கூடிய எகிப்துதான் வட ஆப்பிரிக்காவிலும் மேற்கு ஆசியாவிலும் பெரிய நாடு. போதாக் குறைக்கு, உலகின் கிழக்குப் பகுதியையும், மேற்குப் பகுதியையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் எகிப்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எகிப்தில் புரட்சி, எகிப்தில் ஆட்சிக் குழப்பம் என்றால் அது நிச்சயமாக உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.

இந்த முறை எகிப்தில் ஏற்பட்டிருக்கும் இந்தப் புரட்சியில் தனித்தன்மைகள் பல. எகிப்து நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் 25 வயதுக்கும் குறைவான இளைஞர்கள். அவர்கள்தான் இந்த மக்கள் கிளர்ச்சிக்கு வித்திட்டு, முன்னின்று நடத்தி வருகிறார்கள். எதிர்க்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம், போராட்டம் வலுத்தபிறகு வந்து சேர்ந்து கொண்டிருக்கிறதே தவிர, இந்தக் கிளர்ச்சியில் அதற்கு முக்கியப் பங்கு கிடையாது.

இளைஞர்கள் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கியபோது, அதுவரை மெளனமாக எல்லா அநீதிகளையும் சகித்துக் கொண்டிருந்த சாதாரணப் பொதுமக்கள் அவர்களுடன் தங்களை இணைத்துக்கொண்டு விட்டார்கள். சாதாரணக் கிளர்ச்சி மக்கள் போராட்டமாக வெடித்து விட்டிருக்கிறது.

இதில், அதிசயம் என்னவென்றால், இதுபோன்ற போராட்டங்கள் இஸ்லாமிய நாடுகளில் வெடிக்கும்போது, மதத் தீவிரவாதிகளின் கரம் ஓங்குவது வழக்கம். எகிப்தில் நேர்மாறாக "அல்லாஹ் அக்பர்' கோஷம் எழுப்பப்படவில்லை. "ஆட்சி மாற்றம் தேவை' என்கிற கோரிக்கைதான் எழுப்பப்படுகிறது. போராட்டத்தில் களமிறங்கி இருக்கும் எகிப்து மக்கள் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் தலையீடை விரும்பாதவர்கள். ஆனால், அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பவில்லை.

எகிப்தில் ஏற்பட்டிருக்கும் மக்கள் புரட்சியில் இன்னொரு விசித்திரம்கூட அரங்கேறி இருக்கிறது. போராட்டத்தை அடக்க ராணுவத்துக்குக் கட்டளையிட்டால், நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் மக்கள் இயக்கத்தின் மீது அடக்குமுறையை ஏவிவிட நாங்கள் தயாராக இல்லை என்று ராணுவம் மறுக்கிறது. பேச்சுரிமையும், ஜனநாயகமும் கேட்டுப் போராடும் எந்தக் கிளர்ச்சிக்கும் இதுவரை எந்த நாட்டிலும் ராணுவம் ஆதரவு கொடுத்ததாக சரித்திரம் இல்லை. எகிப்தில் அந்த அதிசயம் அரங்கேறி இருக்கிறது.

அதிபர் பராக் ஒபாமா கடந்த ஜூன் மாதம் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பேசும்போது, கூறிய வார்த்தைகள் இவை - ""உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் மக்கள் சுதந்திரமாகத் தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையையும் தாங்கள் யாரால், எப்படி ஆட்சி செய்யப்பட வேண்டும் என்கிற உரிமையையும் விரும்புகிறார்கள் என்பது எனது கருத்து!''.

இப்படி அறிவித்த அமெரிக்க அதிபர், சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக, நல்லாட்சி கோரி, மக்களாட்சி கேட்டு நடைபெறும் எகிப்து இளைஞர்களின் புரட்சிக்கு ஆதரவு தெரிவிக்காதது ஏன்? அந்த இளைஞர்கள் தேசியக் கொடியைக் கைகளில் ஏந்தியபடி சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோருகிறார்களே அவர்களை அமெரிக்கா மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் ஆதரிப்பதுதானே நியாயம்!

சிறிது நாள்களுக்கு முன்னர் துனிசியாவில் மக்கள் எழுச்சி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்போது சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக எகிப்து, யேமன், ஜோர்டான் நாடுகளில் மக்கள் தெருவில் இறங்கிப் போராட முற்பட்டிருக்கிறார்கள். அரபு நாடுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட இருப்பதை இந்தக் கிளர்ச்சிகள் கட்டியம் கூறுகின்றன. அரபு நாடுகளில் மட்டுமா? உலகம் முழுவதும் ஆட்சியாளர்கள் நல்லாட்சி தராமல் போனால் இதுதான் அரங்கேற இருக்கும் காட்சியாக இருக்கும்!