Friday, August 2, 2019

‘சந்திரயான்-2’

நிலவுக்கு இந்தியா அனுப்பிய ‘சந்திரயான்-1’ விண்கலத்துக்கு ஒரு தசாப்தத்துக்குப் பிறகு அதன் தொடர்ச்சியான ‘சந்திரயான்-2’ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் வெற்றிகரமாக ஏவப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனா ஒரு விண்கலத்தை நிலவின் மறுபக்கத்தில் முதன்முறையாக இறங்கச் செய்து வெற்றி கண்டது. தற்போது அதுபோன்ற வேறொரு முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டிருக்கிறது. ஆம், ‘சந்திரயான்-2’ விண்கலத்தின் பிரக்ஞான் உலாவியை நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கச் செய்யும் முயற்சிதான் அது. நிலவு நடுக்கோட்டில்தான் இதுவரை உலவிகள் தரையிறங்கி ஆய்வுகள் மேற்கொண்டிருக்கின்றன என்பதைப் பார்க்கும்போது, இதுவரைக்கும் யாராலும் மேற்கொள்ளப்படாத முயற்சி என்பதில் நாம் பெருமிதம் கொள்ளலாம்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ஜிஎஸ்எல்வி மார்க்-3’ ஏவுகலத்தைக் கொண்டு முதன்முறையாக விண்கலம் அனுப்பப்பட்டிருக்கிறது என்பதையும் இதன் மூலம் நான்கு டன் வரை அனுப்ப முடியும் என்பதைப் பார்க்கும்போது இந்த ஏவலே பெரும் சாதனைதான். சுற்றுப்பாதைக் கலம், தரையிறங்கு கலம் (விக்ரம்) உலாவி (பிரக்ஞான்) எல்லாம் சேர்த்து 3.87 டன் எடை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. புவியின் நிலைநிறுத்தல் சுற்றுப்பாதையை அடைந்தவுடன் ‘சந்திரயான்-2’ கலத்தின் சுற்றுப்பாதை ஐந்து நிலைகளில் வரும் 22 நாட்களில் உயர்த்தப்படும். உச்ச எல்லையை அடைந்தவுடன் புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபடுவதற்கான திசைவேகத்தைப் பெற்று நிலவை நோக்கிய நீண்ட பயணத்தை ‘சந்திரயான்-2’ தொடங்கும். ஆகஸ்ட் 20 அன்று நிலவு ஈர்ப்புவிசையின் பிடிக்குள் ‘சந்திரயான்-2’ செல்லும். அடுத்த 13 நாட்களில் ‘சந்திரயான்-2’ சுற்றுப்பாதை பல்வேறு படிகளாகக் குறைந்துகொண்டே வந்து, நிலவின் தரையிலிருந்து 100 கிமீ உயரம் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றும். அடுத்த முக்கியமான கட்டம், சுற்றுப்பாதைக் கலத்திலிருந்து தரையிறங்கு கலத்தையும் உலாவியையும் பிரிப்பது. இதையடுத்து, தரையிறங்கு கலமும் உலாவியும் மென்முறை தரையிறங்குதலை செப்டம்பர் 7 அதிகாலையில் மேற்கொள்ளும்.
2008-ல் அனுப்பப்பட்ட ‘சந்திரயான்-1’ விண்கலத்தின் நிலவு மோதல் துழாவியைப் போல வன்தரையிறங்குதலாக இல்லாமல், இந்த முறை முதன்முறையாக இஸ்ரோ மென்தரையிறங்குதலை முயன்றிருக்கிறது. மணிக்கு 6,000 கிமீ வேகத்தில் இறங்கும் விக்ரம் தரையிறங்கு கலத்தின் வேகத்தைக் குறைத்து, மெதுவாகத் தரையிறங்குவதற்கு அடுக்கடுக்கான வேகத்தடுப்பு இயங்குமுறைகள் தேவைப்படும். நிலவில் நீரின் இருப்பை ‘சந்திரயான்-1’ மூலம் கண்டறிந்தோம். தற்போதைய சுற்றுப்பாதைக் கலத்திலுள்ள அகச்சிவப்பு நிறமாலைமானியானது நீரின் இருப்பை உறுதிசெய்யும் தடயங்களைத் தேடும். கூடவே, நிலவின் வெப்பநிலை மாற்றம், நிலவு மேற்பரப்பின் வெப்பக் கடத்துதிறன், நிலவுநடுக்கம் போன்றவை முதல் முறையாக ஆராயப்படும். ‘சந்திரயான்-1’, ‘மங்கல்யான்’ போன்றவற்றின் வெற்றி இஸ்ரோவுக்கு மகத்தான புகழைத் தேடித்தந்திருக்கிறது. ‘சந்திரயான்-2’ வெற்றி விண்வெளித் திட்டங்களில் தொழில்நுட்பங்களைப் பரிசோதித்துப் பார்ப்பதில் மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Source:Tamil Hindu

செபியின் தன்னாட்சி நீடிப்பது அவசியம்

இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) உபரி நிதியில் 75%-ஐ மத்திய அரசின் தொகுப்பு நிதியில் சேர்த்துவிட நிதி மசோதாவில் வகைசெய்யப்பட்டிருக்கிறது; இந்த நிதி மிகவும் கணிசமானது அல்ல. இந்த நிதியைக் கொண்டு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிதிப் பற்றாக்குறையைக் குறைத்துவிட முடியாது. பிறகு ஏன் இந்த முயற்சி என்றால், ‘செபி’ அமைப்பைக் கட்டுக்குள் வைப்பதற்காகத்தான் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது. ‘உபரி நிதியை மத்திய அரசு கேட்டுப் பெறுவதால் எங்கள் அமைப்பின் சுயேச்சையான செயல்பாடு பெரிதும் பாதிக்கப்படும்’ என்று ‘செபி’ தலைவர் அஜய் தியாகி மத்திய அரசுக்கு ஜூலை 10-ல் கடிதம் எழுதியிருக்கிறார்.

மேலும், ‘செபி’ அமைப்பின் வருடாந்திர வரவு-செலவுகளுக்குப் பிறகு எஞ்சும் உபரி நிதியில் 25% தன்னுடைய கையிருப்பு நிதியுடன் சேர்த்துவிட்டு, எஞ்சிய 75%-ஐ மத்திய அரசின் தொகுப்பு நிதியில் சேர்த்துவிட, நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ‘செபி’ தன்னுடைய மூலதனச் செலவுகளுக்கு மத்திய அரசிடம் முன்கூட்டியே ஒப்புதல் பெற வேண்டும் என்றும் ‘செபி’ சட்டத்துக்குத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒரு ஒழுங்காற்று முகமை இப்படி தனது நிதித் தேவைக்காகவும் நிர்வாக நடவடிக்கைகளுக்காகவும் அரசின் கையையும் ஒப்புதலையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலை வந்தால், அதனால் சுயேச்சையாகச் செயல்பட முடியாது. சட்டபூர்வமான அமைப்பான செபியின் சுதந்திரத்தில் அரசு கை வைப்பது ‘செபி’ அமைப்பை மட்டுமல்ல, அது கண்காணிக்கும் நிதிச் சந்தையையும் பாதிக்கும் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. பங்கு வெளியீட்டாளர்களையும் நிறுவனங்களையும் கண்காணிக்க வேண்டிய ‘செபி’ அமைப்பே இன்னொரு அமைப்புக்கு நேரடியாகக் கட்டுப்பட நேரும்போது அதனால் திறமையாகவும் நடுநிலையாகவும் செயல்படுவது கடினம்.

பங்குச் சந்தைகளில் நடைபெறும் தில்லுமுல்லுகளைத் தடுக்கவும் முதலீட்டாளர்களின் நலனைக் காக்கவும் பங்குச் சந்தை மீது நம்பகத்தன்மை அதிகரிக்கவும்தான் ‘செபி’ அமைப்பே உருவாக்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியிடமும் நிதி அமைச்சகம் உபரி நிதியைக் கேட்டு, தொடர்ந்து வலியுறுத்துவதையும் இத்துடன் இணைத்துப் பார்ப்பது அவசியமாகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி, தேசிய மாதிரி கணக்கெடுப்பு முகமை ஆகியவற்றின் சுதந்திரத் தன்மையை மதிக்காமல், அவை அரசுக்குக் கட்டுப்பட்டவைதான் என்பதை நிலைநாட்டும் முயற்சிகளாகவும் இவற்றைப் பார்க்க வேண்டியிருக்கிறது. செபி போன்ற அமைப்புகளுக்கு முழு அதிகாரத்தை அளிக்க வேண்டும், அதேசமயம் அவற்றின் சொத்துகள், உபரி நிதி போன்றவற்றை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மாறாக, இத்தகு அமைப்புகளின் அதிகாரங்களையெல்லாம் எடுத்துக்கொண்டுவிட்டால் கூடுதல் நிர்வாகத்துக்கு உதவும் என்று அரசு நினைத்தால் அம்முயற்சி பெரும் ஆபத்தில்தான் போய் முடியும்.

Source: Tamil Hindu

தடுமாறுகிறதா சீனப் பொருளாதாரம்?

குறைந்த ஊதியத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களையும் அதிக அளவிலான ஏற்றுமதியையும் அடிப்படையாகக் கொண்டு நீண்ட காலம் செழித்துக்கொண்டிருந்த சீனாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது தடுமாற ஆரம்பித்திருக்கிறது. ஆண்டின் இரண்டாவது பாதியில், சீனாவின் பொருளாதாரம் 6.2% மட்டுமே வளர்ச்சியடைந்திருப்பதாக சீனாவின் தேசிய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டிருக்கும் தரவுகள் தெரிவிக்கின்றன. 27 ஆண்டுகளில் குறைவான வளர்ச்சி இது என்பதுதான் இந்தத் தரவை முக்கியத்துவப்படுத்துகிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 6.4% ஆகவும், 2018 முழுவதுமாக 6.6% ஆகவும் வளர்ச்சி இருந்தது என்பதைப் பார்க்க வேண்டும்.

தற்போதைய மந்தத்துக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போய்க்கொண்டிருக்கும் வர்த்தகப் போர் காரணமாக ஜூன் மாதம் ஏற்பட்ட மந்தநிலை முதல் காரணம். அடுத்ததாக, முதலீட்டாளர்களின் நம்பிக்கைக் குறைவு காரணமாகக் கட்டிடத் துறையில் ஏற்பட்டிருக்கும் சரிவு. வருகிற காலாண்டுகளில் நிலைமை மேலும் மோசமாகும் என்றும் பெரும்பாலான பொருளியலாளர்கள் கருதுகிறார்கள்.

வளர்ச்சி தடுமாறிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், அதிக ஏற்றுமதி வரிகள் காரணமாக வீழ்ச்சியடைந்திருக்கும் சீன ஏற்றுமதியை உள்நாட்டுத் தேவைகள் ஈடுகட்டிக்கொண்டிருக்கின்றன என்று தரவுகள் கூறுகின்றன. ஆனால், ஏற்றுமதியையே சீனா பெரிதும் நம்பியிருப்பதாலும், அமெரிக்காவுடனான அதன் வர்த்தகப் போருக்கு முடிவு ஏதும் கண்ணுக்கு எட்டிய தொலைவில் தெரியவில்லை என்பதாலும், சீனாவின் வளர்ச்சி மீதான நெருக்கடி இன்னும் சில காலத்துக்கு இருக்கவே செய்யும்.

சீனாவின் முன் பெரிய சவால்கள் பல இருக்கின்றன. அதில் முக்கியமானது சீனப் பொருளாதாரத்தையே மறுகட்டமைப்பு செய்வது. அரசை மையப்படுத்திய முதலீடுகள், ஏற்றுமதிகள் போன்றவற்றிலிருந்து சந்தைமையப்படுத்தியதாகப் பொருளாதாரம் மாற வேண்டும். பொருளாதாரத்தில் சீன வளர்ச்சியின் வசந்த காலம் அந்த அரசால் தாராளமாகக் கொடுக்கப்பட்ட நிதியாலும் மாபெரும் தொழிலாளர் திரளாலும், குறிப்பாக குறைந்த ஊதியத்துக்கு உழைப்பைச் செலுத்திய அந்தத் திரளாலும், சாத்தியமானது. இதனால்தான், ஏற்றுமதியில் உலக அளவில் பெரும் சாம்ராஜ்யமாக சீனா உருவெடுத்திருந்தது.

வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்ட சீனாவின் வளர்ச்சி மாதிரியானது, தடம் மாறி முதலீடுகளும் வற்றிப்போன நிலையில், சீனாவானது இதைவிட நீடிப்புத்தன்மை கொண்ட ஒரு மாதிரியை உருவாக்க வேண்டியிருக்கும். இல்லையென்றால், எதிர்காலத்தில் சீனா உருவாக்க உத்தேசித்திருக்கும் இரட்டை இலக்க வளர்ச்சி குறித்த நம்பிக்கைகளை இழக்க நேரிடும்.

தற்போது சீன அதிகாரத் தரப்பானது இந்தப் பிரச்சினையை ஆழமாக நோக்கி எந்த மாற்றங்களையும் செய்யும் முனைப்பில் இருப்பதாகத் தெரியவில்லை. பெரிய அளவிலான பொருளாதார மாற்றங்களைக்கூட செய்யத் தேவையில்லை. ஆனால், உள்நாட்டு நுகர்வை அதிகப்படுத்தாமலும் ஏற்றுமதியை அளவுக்கதிகமாக நம்பியும் இருந்தால் சீனாவின் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடரவே செய்யும்.

Source:Tamil Hindu