Thursday, February 3, 2011

இந்திய - அமெரிக்க உறவில் அடுத்த வளர்ச்சிக்கு ஏற்பாடு

இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்துவதற்காக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், வரும் ஏப்ரல் முதல் வாரத்தில், இந்தியா வருகிறார்.

அதேபோல், இந்திய உயர் அதிகாரிகள் பலரும், வரும் நாட்களில், அடுத்தடுத்து, அமெரிக்க பயணம் மேற்கொள்ள உள்ளனர்.அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, கடந்த நவம்பரில் இந்தியா வந்தார். அப்போது, இந்திய - அமெரிக்க உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பல முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், கடந்த வாரம் வாஷிங்டன் சென்றார். கடந்த 27ம் தேதி துவங்கிய மூன்று நாள் பயணத்தின் போது, அதிபர் ஒபாமா, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலான் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது உட்பட பல விஷயங்கள் குறித்து அவர்களுடன் ஆலோசித்தார்.

மேனனின் இந்தப் பயணத்தைத் தொடர்ந்து, வரும் 13, 14ம் தேதிகளில் வெளியுறவு செயலர் நிருபமா ராவ், அமெரிக்கப் பயணம் மேற்கொள்கிறார். அப்போது, அமெரிக்க வெளியுறவு செயலர் வில்லியம் பர்ன்ஸ் உட்பட, அந்நாட்டின் உயர் அதிகாரிகள் பலரைச் சந்திக்கிறார்.இதன்பின், மார்ச் 2 முதல், 6 வரை, இந்திய ராணுவச் செயலர், வாஷிங்டன் பயணம் மேற்கொள்கிறார். அங்கு, ராணுவ கொள்கை தொடர்பான கூட்டம் உட்பட, பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இவரைத் தொடர்ந்து இந்திய ராணுவத் தளபதி, மார்ச் 7 முதல், 13 வரை, அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்

.அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், ஏப்ரல் முதல் வாரத்தில், இந்தியா வருகிறார். அப்போது, இரு நாடுகள் இடையேயான உறவுகளை ஆக்கப்பூர்வமான வகையில் மேம்படுத்துவது உட்பட, பல விஷயங்கள் குறித்து, வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா உட்பட, இந்திய தலைவர்களுடன் விவாதிக்கிறார்.அதே நேரத்தில், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கிக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக ஏப்ரலில் வாஷிங்டன் செல்கிறார். இருநாட்டுத் தலைவர்களின் இந்தப் பயணத்தால், பயங்கரவாத ஒழிப்பு உட்பட, பல விஷயங்களில் இந்தியா - அமெரிக்கா இடையே ஒத்துழைப்பு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment