Friday, March 7, 2014

மரண தண்டனைக்கு மரணம்

கொடுங் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை அமலில் உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் கழகம் மரணதண்டனை ஒழிக்கப்ட வேண்டும் என்று 1948இல் இருந்தே வலியுறுத்தி வருகிறது.

அப்போது ஆறு நாடுகள் மரண தண்டனை இல்லாதவையாக இருந்தது. இப்போது 195 உலக நாடுகளில் 40 நாடுகளில் மட்டுமே மரண தண்டனை சட்டத்தில் அமலில் உள்ளது. கடைசியாக 2013இல் மரண தண்டனையை விலக்கிய நாடு லாட்வியா.

பொருளாதார முன்னேற்றம் அடைந்த நாடுகளில் அமெரிக்காவைத்தவிர மற்ற நாடுகள் மரண தண்டனையை விலக்கிவிட்டன. பின் தங்கிய நாடுகளைக் கொண்ட ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில்தான் மரணதண்டனை அதிகம். 2012இல் உலக நாடுகளில் விதிக்கப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை 1,722. இது 2011இல் விதிக்கப்பட்ட 1,923 தண்டனைகளை விட சற்று குறைவு.

2007-12 ஐந்து வருடங்களில் சீனாவில் சுமார் 4,000 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இரானில் 1,663, சவுதி அரேபியாவில் 423, அமெரிக்காவில் 220, பாகிஸ்தானில் 171, இந்த கணக்கு "ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்' வெளியிட்ட தகவலின் அடிப்படையில். தோராயமாக இருந்தாலும் மறுப்பதற்கில்லை. நமது நாட்டில் கசாப், அப்சல் குரு இருவர் தூக்கிலிடப்பட்டனர்.

தமிழ் நாட்டில் 1947இல் இருந்து இதுவரை 292 குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். கடைசி தூக்கு ஆட்டோ சங்கர், வருடம் 1995, சேலம் மத்திய சிறையில். இப்போது சுமார் 8 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிலுவையில் உள்ளது.

மக்களின் வியர்வையால் செதுக்கப்பட்ட கற்களால் சிறை எழுப்பி அவர்களையே சிறையிலிட்டார்கள் ஆட்சியாளர்கள் என்ற அந்த கால அடக்குமுறை மாறி, சிறைச்சாலைகள் அறச்சாலைகளாகவும் சீர்திருத்தும் மையங்களாகவும் மாறவேண்டும் என்ற குறிக்கோள் முன்வைக்கப்பட்டுள்ளது. சிறைச் சுவர்கள் சட்டம் என்ற கற்களால் செதுக்கப்பட்டவை. மனித உரிமைகள் சிறையில் ஊடுருவ சிறைக் கதவுகள் தடையல்ல என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் மரணதண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்த தீர்ப்பிற்குப் பிறகு, மரண தண்டனை சட்டத்தில் இடம் பெற வேண்டுமா என்பது விவாதத்திற்கு வந்துள்ளது.

இந்தியாவில் 111 மத்திய சிறைகள் உள்ளன. எல்லா மத்திய சிறைகளிலும் தூக்கு மேடை இருக்கும். மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களை குற்றவியில் சட்டம் 366(2)இன் படி சிறை அதிகாரிகள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, அவர்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும். சட்டப்படி சாகடிக்கப்படுவதற்காக இந்தியாவில் பிறந்த ஜார்ஜ் ஆர்வெல் என்ற பிரசித்தி பெற்ற எழுத்தாளர் தூக்கிலிடப்படும் சடங்கை தத்ரூபமாக விவரிக்கிறார்.

தூக்கிலிடப்படும் நாள் குறிக்கப்பட்டவுடன் சிறையில் ஒரு சோகம் படர்ந்து விடும். எல்லாரையும் ஒரு பயம் பிடித்துக் கொள்ளும். மரண தண்டனைக்கு உரித்தான எந்த குற்றமாக இருந்தாலும், அதை மறந்து இறக்கப் போகிறவன் மீது ஒரு பாசம் ஏற்பட்டு விடும். நன்றாகத்தானே இருக்கிறான் அவனது அங்கங்கள், உள் உறுப்புகள் நன்றாக இயங்குகின்றன நோய் நொடியில்லை, ஏன் அவனை வலிய கொல்ல வேண்டும் என்ற உணர்வு வரும்.

தூக்கிலிடும் நாளுக்கு முன் முழுமையான மருத்துவ பரிசோதனை செய்யப்படும். எடை உயரம் அளவு எடுத்து, அந்த எடையின் ஈடாக ஒரு மூட்டையை வைத்து தூக்கு மேடையில் ஒத்திகை நடத்தப்படும். அவனது எடையை தாங்க வல்லதாக எந்த அளவுக்கு சுருக்குக் கயிறு இருக்க வேண்டும், எந்த உயரத்தில் இருந்து கயிறு தொங்கப்பட வேண்டும் போன்றவை நிர்ணயிக்கப்படும்.

தூக்கு மேடைக்கு தண்டனை பெற்றவரை அழைத்துச் செல்லும் வழி தனி வழி. அன்று மட்டும் அந்த வழியில் கதவு திறக்கப்பட்டு மூடப்படும். கடைசி நாள் அவருக்கு விருப்பமான உணவு வழங்கப்படும். நிறைவேற்றக் கூடிய விருப்பங்கள் விதிகளுக்குட்பட்டு நிறைவேற்றி வைக்கப்படும்.

பகத்சிங் தூக்கிலிடுவதற்கு முன்பு வரை லெனில் எழுதிய "அரசும் புரட்சியும்' புத்தகத்தை தீவிரமாக படித்து முடித்துவிட்டு, தனது கடைசி உணவாக சிறையை துப்புரவு செய்யும் துப்புரவாளர் கையால் செய்த சப்பாத்தி வேண்டும் என்று கேட்டு சாப்பிட்டார் என்ற பதிவு உள்ளது. அதுதான் எத்தகைய உயர்ந்த உள்ளம்?

எவ்வளவுதான் மனதை தேற்றிக் கொண்டு தைரியமாக இருந்தாலும் கடைசி நாள் குற்றவாளிக்கு தூக்கம் வராது; மனம் அலைபாயும். அதிகாலையில் தூக்கிலிடும் சடங்கு துவங்கப்படும். தூக்கிலிடப்படுபவர் "சாலிட்டரி கன்ஃபைன்மென்ட்' என்ற தனி அறையில் வைக்கப்படுவார்.

காலையில் குளியல், பிறகு விருப்பமான உணவு உண்ட பிறகு சிறைக்காவலர்கள் அவரை "எஸ்கார்ட்' செய்ய வருவார்கள். ஆனால் அழைத்துக் செல்வது மிக சிரமம். சிறைக் கம்பிகளை பிடித்துக் கொண்டு போக மறுப்பார். நல்லதனமாக பேசி தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

மேடையில் நெம்புகோலால் இயக்கக்கூடிய இரும்பு தரையில் நிற்க வைத்து முகத்தை முதலில் துணியால் மூடி பிறகு கயிற்றை கழுத்தில் கட்டுவார்கள். அப்படிக் கட்டும்போது உடம்பு விறைக்கும், மூச்சிறைக்கும். தானாகவே கடவுள் நாமத்தை ஜபிப்பார்கள் முனகுவார்கள் அல்லது கூக்குரலிடுவார்கள்.

சிறை கண்காணிப்பாளர் தலைமையில் சிறைப் பணியாளர்கள், நெம்புகோலை இயக்குபவர், மருத்துவர் ஆஜரில் இருப்பார்கள். சிறைக் கண்காணிப்பாளர் கடிகாரத்தைப் பார்த்து எந்த நேரத்தில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று உத்தரவில் குறிக்கப்பட்டிருக்கிறதோ, கடிகாரமுள் அந்த நேரத்திற்கு வரும் வரை காத்திருப்பார்.

கடிகார முள் நெருங்க நெருங்க சாவை எதிர் கொள்ள முடியாது, தண்டனையாளரின் கூக்குரல் அதிகரிக்கும். எல்லார் மனதிலும் கவலை, சோகம், குற்ற உணர்வு கலந்த நிலை. மனிதர்கள் தானே. ஏதோ கடமை என்று இருந்து விடமுடியாது.

சிறை அதிகாரி கை அசைத்தவுடன் நியமிக்கப்பட்ட சிறை அலுவலர் நெம்பு கோலை மன உறுதியோடு இயக்க வேண்டும். தண்டனையாளி நின்று கொண்டிருக்கும் இரும்புத் தளம் விலக, அவர் முழுமையாக உடம்பின் பளுவில் தொங்க, கழுத்தில் கயிறு இறுக்கமாவதில் உயிர் போகும். நொடிப் பொழுதில் உயிருள்ள உடம்பு சடலமாகும்.

மருத்துவ அதிகாரி பரிசோதனை செய்து உயிர் பிரிந்து விட்டது என்று சான்றிதழ் அளிக்க வேண்டும். உயிரோடு சிறைக்கு வந்தவர் தண்டனை பெற்று சடலமாக வெளியில் அனுப்பப்படுவார். சடலம் வெளியேறுவதற்கும் பிரத்யேகமான தனிவழி. மற்ற நேரத்தில் உபயோகப்படுத்துவதில்லை.

சடங்கு முடிந்த பிறகு சிறையில் ஒரு மயான அமைதி. அதற்குப்பிறகுதான் அடுப்பில் உலைவைப்பார்கள். எல்லா கைதிகளும் குளித்தவுடன் உணவு கொடுக்கப்படும். சிலர் வருந்துவார்கள், சிலருக்கு விரக்தி, மற்றவர்க்கு எப்போது எல்லாம் முடியும் சாப்பாடு எப்போது கிடைக்கும் என்ற யதார்த்தம்.

தமிழ் மக்களின் உணர்வைப் புரிந்து கொண்டு மனிதாபிமான அடிப்படையில் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு தமிழக அரசு தண்டனையைத் தளர்த்தி ஆணை கொடுத்துள்ளது. சட்டத்தைப் புரிந்து கொள்ளாமலும், புரிந்ததை திரித்தும் காழ்ப்புணர்ச்சியால் விதண்டாவாதத்தில் சிலர் இறங்கியுள்ளது வருந்தத்தக்கது. வாதம் என்று வந்தால் இலங்கைத் தமிழர் பிரச்னையை முழுமையாக ஆராய வேண்டும். இந்த தண்டனை தளர்ச்சியை மட்டும் தனியே பார்க்கலாகாது.

1970, 80களில் நடந்த இனப்படுகொலைகள், அதற்குப் பிறகு தமிழகம் வந்த அகதிகள், அமைதிகாக்க என்று இந்திய ராணுவம் அனுப்பியதின் விளைவுகள், இலங்கை தமிழர் விடுதலை இயக்கங்களின் நடவடிக்கைகள், அவர்களை சுய ஆதாய நோக்கோடு ஆதரித்தவர்களின் பின்னணி, சமீபத்திய இனப்படுகொலைகளின் தாக்கம், இந்தியாவின் கண்ணோட்டம், கொள்கை, நிலைப்பாடு என்று கணக்கிலடங்காத வாதங்கள் இருக்கின்றன.

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முடிவின்றி காலதாமதம் ஏற்பட்டால் அதுவே மரணதண்டனையை தளர்ப்பதற்கான காரணமாகும் என்று உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் மரண தண்டனையை ரத்து செய்துள்ளது.

பல வருடங்களுக்கு முன்னால் தமிழகத்தை உலுக்கிய விஷ ஊசி வழக்கைவிட கொடுமையான குற்றத்தை நினைத்துப்பார்க்க முடியாது. அதில் தாமதம் காரணமாக மரணதண்டனை ரத்தானது.

மரண தண்டனைப் பற்றி காந்திஜி கூறுகிறார். "எந்த ஒரு குற்றவாளியையும் கழு வேற்றுவதற்கு எனது மனசாட்சி எந்த நிலையிலும் இடம் கொடுக்காது. கடவுள் கொடுத்த உயிரை இயற்கைக்குத்தான் எடுக்க உரிமை உள்ளது'.

மரண தண்டனை சட்டத்திலிருந்து நீக்குவது தான் நாட்டின் ஒருமித்த முடிவாக இருக்க முடியும் என்று அம்பேத்கரும், மரண தண்டனை குற்றங்களுக்கு தீர்வு அல்ல என்று ஜெயப் பிரகாஷ் நாராயணனும் அறிவுறுத்தியுள்ளார்கள்.

மரண தண்டனை கழுவேற்றப்பட வேண்டும்.

Source:Dina Mani

வீணாகும் விளைபொருள்கள்


நம் நாட்டில் 2005 முதல் 2013 வரையிலான எட்டாண்டு காலத்தில் 1.94 லட்சம் டன் உணவு தானியம் வீணாகியுள்ளதாக, இந்திய உணவுக் கழகம் வெளியிட்டுள்ள ஒரு தகவல் கூறுகிறது. நாட்டின் 23 பகுதிகளில் எவ்வளவு டன் உணவு தானியம் வீணடிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை இக்கழகம் வெளியிட்டுள்ளது. இதில் அரிசியும், கோதுமையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கோதுமை உற்பத்தியின் கேந்திரமாக விளங்கும் பஞ்சாப் மாநிலத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த உணவு தானியத்தில் பாதியளவுக்கு வீணாகியுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார், கடந்த ஆண்டில் 255 மில்லியன் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி, நடப்பு ஆண்டில் 263 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது என தெரிவித்திருக்கிறார். ஆனால், விளையும் தானியத்தை முறையாகச் சேகரித்து, பொதுமக்களுக்கு முறையாக கொண்டு சேர்க்கும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.

அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாததே அதிக அளவில் தானியம் வீணாவதற்கு காரணம். மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. தற்போதைய உணவு தானிய உற்பத்தி 263 மில்லியன் டன். 2030-ல் இதன் தேவை 345 மில்லியன் டன்னாக இருக்கும். அதாவது, இப்போதிருந்தே ஆண்டுக்கு சுமார் 5.5 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

ஒரு பொருள், விளைநிலத்திலிருந்து வியாபாரியின் கைக்கு சென்று, அங்கிருந்து அது நுகர்வோரின் கைக்கு மாறும்போது, சுமார் 50 சதவீத அளவுக்கு வீணாகிறது என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதாவது, உற்பத்தி நிலை, பதப்படுத்துதல், விற்பனை மையம் என சங்கிலித் தொடர் நடவடிக்கையில் ஒவ்வொரு இடத்திலும் பொருள் வீணாவது தவிர்க்க முடியாதது என ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

வளரும் நாடுகளில், உற்பத்தி நிலையிலேயே விளைபொருள்கள் வீணாகின்றன என்றும், வளர்ந்த நாடுகளில் தயாரிக்கப்பட்ட நிலையில் அவை அதிகம் வீணாகின்றன என்றும் தெரிவிக்கின்றனர். தயாரிக்கப்பட்ட உணவுப் பொருளை பேக்கிங் செய்து விற்பனைக்காக குளிர்சாதனப் பெட்டிகளில் மாதக் கணக்கில் வைக்கின்றனர். அவை விற்பனையாகாத நிலையில் வீணாகின்றன.

மேலும், பயிர்களை அறுவடை செய்ய இயந்திரங்களை பயன்படுத்துவதாலும், தானியங்கள் வீணாவதாகக் கூறப்படுகிறது. தானியங்களை மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றி, தரமானதாக வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டுமானால், சேதாரம் தவிர்க்க முடியாது என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக அளவில் ஆண்டுக்கு 1.3 பில்லியன் டன் உணவு தானியம் வீணாகிறது. இதில் வளர்ந்த நாடுகளில் வீணாகும் அளவு சற்றுக் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் உணவு தானிய உற்பத்தி எப்படி இருக்கும் என்பதை வேளாண் துறையினர் கணிக்கின்றனர். ஆனால்,உற்பத்தி அதிகரித்தால், அந்த தானியங்களை முறையாகச் சேமிக்க உரிய வழிவகை நம்மிடம் இல்லை.

உற்பத்தி செய்த பொருளை ஏற்றுமதி செய்யலாம் என்றால், அரசின் வர்த்தகக் கொள்கைகள் முட்டுக்கட்டையாக உள்ளன. இப் பிரச்னை விரைவில் களையப்பட வேண்டும்.

நாட்டில் உணவு பதப்படுத்துதல் துறை பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. சுமார் 66 லட்சம் பேர் இத் துறையில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும், உற்பத்தியாகும் உணவு தானியங்கள், காய்கறி, பழங்கள், இறைச்சி, பால் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, பதப்படுத்தும் அளவு குறைவாகவே உள்ளது. இதை அதிகப்படுத்தினால், வீணாவதைத் தடுக்கலாம்.

மேலும், விளைந்த பொருள்களை சேமிக்க உரிய கிடங்கு வசதிகளை நவீன தொழில்நுட்பத்துடன் அந்தந்த பகுதியில் ஏற்படுத்த வேண்டியது அவசியம். ஒவ்வோர் ஆண்டும் நிதிநிலை அறிக்கையில், நவீன சேமிப்புக் கிடங்குகள் அமைக்க இத்தனை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கிறார்களே தவிர, அது செயல்பாட்டுக்கு வருவதில்லை.

மத்திய, மாநில அரசுகள் சார்பில் செயல்படும் தானியக் கிடங்குகள் பலவும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. கிடங்கு வசதி இல்லாததால், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் தானியங்கள் மழையிலும், வெயிலும் கிடந்து வீணாகின்றன. இதனால், போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் போராட்டம் நடத்த நேரிடுகிறது.

விலையை அதிகரிக்கும் நோக்கில், பொருள்களைச் சேமித்து, சந்தையில் தேவையை உருவாக்கி, அதிக விலைக்கு விற்கும் கலாசாரமும் அதிகரித்து வருகிறது. இதுவும் தடுக்கப்பட வேண்டும்.

மழையின்றி, அதனால் உரிய நீரின்றி கருகும் பயிரைக் கண்டு கண் கலங்கி நிற்கும் விவசாயி, ஏதோ கொஞ்சம் விளைந்ததை சந்தைக்கு அனுப்பும்போது, அவையும் வீணானால்...?

Source:Dina Mani