Friday, March 7, 2014

வீணாகும் விளைபொருள்கள்


நம் நாட்டில் 2005 முதல் 2013 வரையிலான எட்டாண்டு காலத்தில் 1.94 லட்சம் டன் உணவு தானியம் வீணாகியுள்ளதாக, இந்திய உணவுக் கழகம் வெளியிட்டுள்ள ஒரு தகவல் கூறுகிறது. நாட்டின் 23 பகுதிகளில் எவ்வளவு டன் உணவு தானியம் வீணடிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை இக்கழகம் வெளியிட்டுள்ளது. இதில் அரிசியும், கோதுமையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கோதுமை உற்பத்தியின் கேந்திரமாக விளங்கும் பஞ்சாப் மாநிலத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த உணவு தானியத்தில் பாதியளவுக்கு வீணாகியுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார், கடந்த ஆண்டில் 255 மில்லியன் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி, நடப்பு ஆண்டில் 263 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது என தெரிவித்திருக்கிறார். ஆனால், விளையும் தானியத்தை முறையாகச் சேகரித்து, பொதுமக்களுக்கு முறையாக கொண்டு சேர்க்கும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.

அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாததே அதிக அளவில் தானியம் வீணாவதற்கு காரணம். மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. தற்போதைய உணவு தானிய உற்பத்தி 263 மில்லியன் டன். 2030-ல் இதன் தேவை 345 மில்லியன் டன்னாக இருக்கும். அதாவது, இப்போதிருந்தே ஆண்டுக்கு சுமார் 5.5 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

ஒரு பொருள், விளைநிலத்திலிருந்து வியாபாரியின் கைக்கு சென்று, அங்கிருந்து அது நுகர்வோரின் கைக்கு மாறும்போது, சுமார் 50 சதவீத அளவுக்கு வீணாகிறது என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதாவது, உற்பத்தி நிலை, பதப்படுத்துதல், விற்பனை மையம் என சங்கிலித் தொடர் நடவடிக்கையில் ஒவ்வொரு இடத்திலும் பொருள் வீணாவது தவிர்க்க முடியாதது என ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

வளரும் நாடுகளில், உற்பத்தி நிலையிலேயே விளைபொருள்கள் வீணாகின்றன என்றும், வளர்ந்த நாடுகளில் தயாரிக்கப்பட்ட நிலையில் அவை அதிகம் வீணாகின்றன என்றும் தெரிவிக்கின்றனர். தயாரிக்கப்பட்ட உணவுப் பொருளை பேக்கிங் செய்து விற்பனைக்காக குளிர்சாதனப் பெட்டிகளில் மாதக் கணக்கில் வைக்கின்றனர். அவை விற்பனையாகாத நிலையில் வீணாகின்றன.

மேலும், பயிர்களை அறுவடை செய்ய இயந்திரங்களை பயன்படுத்துவதாலும், தானியங்கள் வீணாவதாகக் கூறப்படுகிறது. தானியங்களை மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றி, தரமானதாக வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டுமானால், சேதாரம் தவிர்க்க முடியாது என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக அளவில் ஆண்டுக்கு 1.3 பில்லியன் டன் உணவு தானியம் வீணாகிறது. இதில் வளர்ந்த நாடுகளில் வீணாகும் அளவு சற்றுக் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் உணவு தானிய உற்பத்தி எப்படி இருக்கும் என்பதை வேளாண் துறையினர் கணிக்கின்றனர். ஆனால்,உற்பத்தி அதிகரித்தால், அந்த தானியங்களை முறையாகச் சேமிக்க உரிய வழிவகை நம்மிடம் இல்லை.

உற்பத்தி செய்த பொருளை ஏற்றுமதி செய்யலாம் என்றால், அரசின் வர்த்தகக் கொள்கைகள் முட்டுக்கட்டையாக உள்ளன. இப் பிரச்னை விரைவில் களையப்பட வேண்டும்.

நாட்டில் உணவு பதப்படுத்துதல் துறை பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. சுமார் 66 லட்சம் பேர் இத் துறையில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும், உற்பத்தியாகும் உணவு தானியங்கள், காய்கறி, பழங்கள், இறைச்சி, பால் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, பதப்படுத்தும் அளவு குறைவாகவே உள்ளது. இதை அதிகப்படுத்தினால், வீணாவதைத் தடுக்கலாம்.

மேலும், விளைந்த பொருள்களை சேமிக்க உரிய கிடங்கு வசதிகளை நவீன தொழில்நுட்பத்துடன் அந்தந்த பகுதியில் ஏற்படுத்த வேண்டியது அவசியம். ஒவ்வோர் ஆண்டும் நிதிநிலை அறிக்கையில், நவீன சேமிப்புக் கிடங்குகள் அமைக்க இத்தனை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கிறார்களே தவிர, அது செயல்பாட்டுக்கு வருவதில்லை.

மத்திய, மாநில அரசுகள் சார்பில் செயல்படும் தானியக் கிடங்குகள் பலவும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. கிடங்கு வசதி இல்லாததால், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் தானியங்கள் மழையிலும், வெயிலும் கிடந்து வீணாகின்றன. இதனால், போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் போராட்டம் நடத்த நேரிடுகிறது.

விலையை அதிகரிக்கும் நோக்கில், பொருள்களைச் சேமித்து, சந்தையில் தேவையை உருவாக்கி, அதிக விலைக்கு விற்கும் கலாசாரமும் அதிகரித்து வருகிறது. இதுவும் தடுக்கப்பட வேண்டும்.

மழையின்றி, அதனால் உரிய நீரின்றி கருகும் பயிரைக் கண்டு கண் கலங்கி நிற்கும் விவசாயி, ஏதோ கொஞ்சம் விளைந்ததை சந்தைக்கு அனுப்பும்போது, அவையும் வீணானால்...?

Source:Dina Mani

No comments:

Post a Comment