Thursday, December 20, 2012

கேள்விக்குறியாகும் பொது சுகாதாரம்

இந்தியாவில் பொது சுகாதாரம் தேய்ந்துகொண்டே வருவது அதிர்ச்சி அளிக்கிறது என மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் தெரிவித்துள்ளார். பொது சுகாதாரம் பேணாத காரணத்தால் ஏற்படும் விளைவுகளை நாம் அனுபவித்து வருகிறோம்.

பொது சுகாதாரத்தில் பிரதான பங்கு வகிப்பது பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், குப்பை அள்ளுதல், கழிவுநீர் செல்ல வாய்க்கால்கள் அமைப்பது போன்றவை, கழிப்பறை வசதிகளைச்செய்து தரவது. இதனை உள்ளாட்சி அமைப்புகள் சரியாகச் செய்தால்தான் மக்கள் நலமுடன் வாழலாம். மக்களுக்கான குடிநீர், சுகாதாரம், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் ஏதேனும் ஒன்று கிடைக்காத நிலை உருவானாலும் அது மக்களை வெகுவாகப் பாதிக்கிறது. நீராதாரம் உள்ள பகுதியில் குடிநீர்த் திட்டங்களை உருவாக்கி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகள் முறையாக குடிநீர்த் திட்டங்களைப் பராமரிக்காத

காரணத்தால்தான் மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் கிருமிகள் கலந்து நோய்கள் பரவக் காரணமாகிறது என சுகாதாரத் துறையினர் புகார் தெரிவிக்கின்றனர்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகள் போன்றவற்றுக்கு மக்களுடைய அடிப்படைத் தேவைகளைக் கண்காணித்து வழங்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளன. சமீபகாலமாக குப்பைகளை அள்ளுவது, கழிவுநீர்ப் பாதைகளைப் பராமரிப்பது, பொதுக் கழிப்பிடங்களில் போதிய தண்ணீர் வசதியை ஏற்படுத்தி சுத்தமாகப் பராமரிப்பது ஆகியவற்றில் பரவலாக அக்கறை அற்ற போக்கே காணப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப துப்புரவுப் பணிக்கு, பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுடன் ஒப்பிட்டால், கிராம ஊராட்சிகளில் துப்புரவுப் பணியாளர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பணி செய்கின்றனர். உதாரணமாக 7,000 பேர் வசிக்கும் ஊராட்சியில் துப்புரவுப் பணியாளர்கள் 3 பேர்தான் உள்ளனர்.

கிராமப்புறங்களில் சாலையோரங்களில் குப்பைகள், கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன. மக்களுக்கு வழங்கும் குடிநீரும் நிறம் மாறி விநியோகிக்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது.

மக்களிடையே மாறிவரும் வாழ்க்கை முறையால் சுகாதாரச் சீர்கேடுகளும் பெருமளவில் அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் எளிதில் பாதிக்கப்பட்டு நோய்கள் பரவுகின்றன.

கிராம ஊராட்சிகளில் பணி செய்யும் துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ. 1,500 சம்பளம் வழங்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை என்பதால் அவர்கள் பணியில் ஆர்வத்துடன் கவனம் செலுத்துவதில்லை.

இதுவே சுகாதாரச் சீர்கேடுகள் அதிகரிக்க வழிவகுக்கிறது. ஊராட்சிகளில் புதிதாக துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு 20 ஆண்டுகளாகின்றன.

மக்கள்தொகைக்கு ஏற்ப கூடுதலான துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்ட பணியாளர்களைக் கொண்டுதான் கிராமங்களில் சுகாதாரத்தைப் பராமரிக்க வேண்டிய நிலை உள்ளது.

இப்போது மக்களை டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்றவை அச்சுறுத்தி வருகின்றன. இக் காய்ச்சல் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போன்ற விழிப்புணர்வு முகாம்கள் நடத்திப் பலனில்லை. இதுபோன்ற கூட்டங்களில் குறைந்த நபர்களே பங்கேற்பதால் அவை பலன் தருவதில்லை.

பொது சுகாதாரத்தைப் பேணுவதில் மக்களின் பங்களிப்பும் அவசியமாகிறது. நம்மைச் சுற்றி உருவாகும் சுகாதாரச் சீர்கேடுகளைத் தவிர்க்க வேண்டும். அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மத்திய, மாநில அரசுகளும் மக்களுக்கான சுகாதாரத்தைப் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Source:Dinamani

No comments:

Post a Comment