Thursday, November 12, 2015

தங்கமான முதலீட்டுத் திட்டங்கள்

வெகு காலமாக யோசனையாகத் தெரிவிக்கப்பட்டு, மத்திய அரசாலும் பரிசீலிக்கப்பட்டு, செயல்வடிவில் நிறைவேற்றப்படாமல் இருந்த தங்க முதலீட்டுத் திட்டம் இப்போது அமலுக்கு வரத் தொடங்கியிருக்கிறது. தங்கத்தை நாணயமாக விற்பது, வீட்டில் சும்மா வைத்திருக்கும் நகைகளைப் பண மதிப்புக்கு மாற்றிக்கொள்வது, தங்கம் வாங்குவதற்குப் பதில் சேமிப்புப் பத்திரமாகவே வாங்கிக்கொள்வது என்ற 3 திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார்.

அரசுடமை வங்கிகளும் தபால் அலுவலகங்களும் இந்த விற்பனையை இனி மேற்கொள்ளும். ஆண்டுதோறும் சுமார் 1,000 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக அரிய அந்நியச் செலாவணியை ஆண்டுதோறும் இழப்பதைத் தடுக்கவும் கையிருப்பில் உள்ள தங்க நகைகளை மறு சுழற்சி மூலம் தேவைப்படுவோருக்கு விற்கவும் இது நல்லதொரு ஏற்பாடு.

மகாத்மா காந்தி, அசோகச் சக்கரம் உருவங்கள் பதித்த தங்க நாணயங்கள் 5 கிராம், 10 கிராம் எடையில் விற்கப்படவுள்ளன. விரைவில் 20 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளும் விற்கப்படும். தேவைப்படும்போது இதை உருக்கி நகைகளாகச் செய்துகொள்ளலாம் அல்லது எடை மதிப்புக்குப் புதிய தங்கம் வாங்கிக்கொள்ளலாம். அவசரத் தேவைக்கு அன்றைய சந்தை விலைக்கேற்ப விற்றுப் பணம் பெற்றுக்கொள்ளலாம்.

வீட்டில் வாங்கி வைத்திருக்கும் நகைகளைக் கனிம, உலோக வர்த்தகக் கழகம் (எம்.எம்.டி.சி.) நாடு முழுவதும் திறக்கவுள்ள 125 விற்பனை நிலையங்களில் கொடுத்து உருக்கி, தங்க மதிப்புக்கேற்ப சான்றிதழை வாங்கிக்கொள்ளலாம். குறிப்பிட்ட காலத்துக்கு அதை முதலீடு செய்து ஆண்டுதோறும் 2.5% வட்டி பெறலாம். தேவைப்படும்போது இதைத் தங்கமாகவோ, அன்றைய விலை நிலவரப்படி பணமாகவோ மாற்றிக்கொள்ளலாம்.

புதிதாகத் தங்கம் வாங்குவதற்குப் பதில், நாம் வாங்க நினைக்கும் தங்க எடைக்கு நிகரான தங்கப் பத்திரத்தை வாங்கலாம். இதற்கு ஆண்டுக்கு 2.75% வட்டி கிடைக்கும். இந்த தங்கப் பத்திரத்தை யாராவது களவாடினால்கூட அவர்களால் அதைப் பணமாக்கிக் கொள்ள முடியாது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அதே எடைக்குத் தங்கமாகவோ பணமாகவோ மாற்றிக்கொள்ளலாம். வாங்கிய சில காலத்துக்குப் பிறகு இதை வங்கியில் அடமானம் வைத்துக் கடனும் வாங்கிக்கொள்ளலாம், விற்கவும் செய்யலாம்.

வீடுகள், கோயில்கள், அறக்கட்டளைகள் போன்றவற்றில் இருக்கும் தங்கத்தின் அளவு தோராயமாக 20,000 டன்கள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்குத் தங்கம் அரசுக்குக் கிடைத்தால், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதைக் குறைத்துக்கொள்ளலாம். இறக்குமதிக்குத் தேவைப்படும் அந்நியச் செலாவணியை வேறு பயனுள்ள நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தலாம். வெளிவர்த்தகப் பற்று வரவும் கணிசமாகக் குறையும்.

அனைத்து அரசியல் கட்சிகள், சமூகக் குழுக்கள், தங்க வியாபாரிகள், பொற்கொல்லர்கள் என்று இதில் தொடர்புள்ள அனைத்துப் பிரிவினரின் கருத்துகளையும் கேட்பது இத்திட்டத்தில் உள்ள குறைகளைக் களைந்து முன்னேற்றம் காண உதவும். கருப்புப் பணத்தைத் தங்கமாக மாற்றி மேலும் லாபம் சம்பாதிக்க நினைப்போருக்கு இடம் தரக் கூடாது. இந்தத் திட்டம் வெற்றி பெற வட்டி வீதத்தை மேலும் உயர்த்த வேண்டும். வருமான வரி விதிப்பை 5 அல்லது 10 ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட வேண்டும். மக்கள் இத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் அரசு செயல்பட வேண்டும்.

Source:Tamil Hindu

No comments:

Post a Comment