உயர் நீதிமன்றங்களில் தற்போது 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கிக் கிடப்பதாகவும், காலியாகவுள்ள நீதிபதிகளின் பணியிடங்கள் 43 சதவீதமாக அதிகரித்து இருப்பதாகவும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் தலைமையிலான அமர்வு வெள்ளிக்கிழமை பொது நல வழக்கு விசாரணையின் போது சுட்டிக் காட்டியுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட தேர்வுக் குழு (கொலீஜியம்) 75 பேர் கொண்ட பட்டியலை அளித்துப் பல மாதங்களாகியும் மத்திய அரசு அதற்கான உத்தரவை இன்னும் பிறப்பிக்காதது குறித்து இந்த அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது.
நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2015, மார்ச் நிலவரப்படி உச்ச நீதிமன்றத்தில் 61,300 வழக்குகளும், 24 உயர் நீதிமன்றங்களில் சுமார் 44.5 லட்சம் வழக்குகளும், கீழமை நீதிமன்றங்களில் ஏறத்தாழ 2.6 கோடி வழக்குகளும் தேங்கிக் கிடக்கின்றன. வழக்குகளை விரைவாக விசாரித்து, தீர்ப்புகளை தாமதமின்றி வழங்க "லோக் அதாலத்' உள்ளிட்ட வழிமுறைகளை அவ்வப்போது உச்ச நீதிமன்றம் அறிவித்த போதிலும், வழக்குகளின் எண்ணிக்கையைப் பெரிய அளவில் குறைக்க முடியவில்லை
இந்த நிலையில், எந்த விஷயமானாலும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் போக்கு வழக்கு நடத்துபவர்களின் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனால், நிலுவையில் உள்ள வழக்கு
களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, அரசியல் சட்ட விவகாரங்கள் மற்றும் பொது முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் மட்டுமே அதிகக் கவனம் செலுத்த வேண்டிய உச்ச நீதிமன்றம் அதன் தனித்தன்மையை இழந்து வருவதாக நீதிபதிகள் அனில் தவே, ஆதர்ஷ் குமார் கோயல் ஆகியோரைக் கொண்ட அமர்வு அண்மையில் ஒரு வழக்கு விசாரணையின் போது கவலை தெரிவித்தது.
உயர் நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகளை எதிர்த்து செல்வாக்குமிக்க தனிநபர்களும், பணபலமிக்க நிறுவனங்களும் உச்ச நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தேசிய, பொது முக்கியத்துவம் இல்லாத இதுபோன்ற மேல்முறையீடுகளைத் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து, அதுதொடர்பான அறிக்கையை ஓராண்டுக்குள் தாக்கல் செய்யுமாறு சட்ட ஆணையத்துக்கு இந்த அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும், நீதித் துறை சீரமைப்பு தொடர்பாகச் சட்ட ஆணையம் ஏற்கெனவே தெரிவித்துள்ள பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இந்த அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அடுத்த ஆண்டு, நவம்பர் மாதம் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று நீதிபதிகள் தவே, கோயல் தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 31-ஆக உயர்ந்துள்ள போதிலும், பொது முக்கியத்துவம் இல்லாத, வழக்கமான மேல் முறையீட்டு மனுக்களை விசாரிப்பதிலேயே அவர்களது நேரம் விரயமாகிறது. இதனால், அரசியல் சட்ட விவகாரங்கள் தொடர்பான வழக்குகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன.
"உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு உயர் நீதிமன்றத்தின் அனுமதிச் சான்றிதழ் பெறப்பட வேண்டும் என்ற நடைமுறையை வழக்கு நடத்துபவர்கள் கடைபிடிப்பதில்லை. விதி
விலக்காக, ஒரு சில விவகாரங்களில் மட்டுமே உயர் நீதிமன்றத்தின் அனுமதிச் சான்றிதழ் இல்லாமலேயே மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்கலாம் என்பதுதான் வழக்கம். ஆனால், இந்த விதிவிலக்கே இன்று வழக்கமான ஒன்றாகிவிட்டது.
இதனால், உயர் நீதிமன்றத்தின் அனுமதிச் சான்றிதழ் இல்லாமலேயே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது' என உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே. செலமேஸ்வர் கடந்த 2014-ஆம் ஆண்டு பேசியதையும் நீதிபதிகள் தவே, கோயல் ஆகியோர் தங்களது உத்தரவில் சுட்டிக் காட்டியுள்ளனர். இதையும் சட்ட ஆணையமும், மத்திய அரசும் கவனத்தில் கொண்டு, இதுவிஷயத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் அதிகரித்துக் கொண்டே செல்வதற்கு எதற்கெடுத்தாலும் மேல்முறையீடு செய்வது மட்டுமல்லாது, பல்வேறு நடுவர் மன்றங்களின் (டிரிபியூனல்) தீர்ப்புகளுக்கு எதிராக நேரடியாகவே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்ற சட்டப்பூர்வ அனுமதியும் காரணமாக உள்ளது. உதாரணமாக, மின்சார சட்டம் 2003, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய திருத்தச் சட்டம் 2000 ஆகியவை நடுவர் மன்றங்களின் தீர்ப்புகளுக்கு எதிராக நேரடியாகவே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு வழிவகை செய்கின்றன. இதுபோன்ற சட்டங்கள் குறித்தும் சட்ட ஆணையம் முழுமையாக ஆராய்ந்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தேங்குவதைக் குறைக்க வழிவகை காண வேண்டும்.
தில்லியில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வையும், சென்னை, மும்பை உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களின் தலைநகரங்களில் உச்ச நீதிமன்றக் கிளைகளையும் அமைக்கலாம் என சட்ட ஆணையம் ஏற்கெனவே தனது 229-ஆவது அறிக்கையில் யோசனை தெரிவித்துள்ளது. இந்த யோசனையையும் கவனத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றத்தின் தனித் தன்மை, முக்கியத்துவத்தைப் பாதுகாக்கவும், நாட்டின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேல்முறையீட்டுக்காக தில்லி வரை செல்ல வேண்டிய சிரமத்தைப் போக்கவும் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
SOURCE:DINAMANI

No comments:
Post a Comment