Sunday, July 31, 2016

தேவைதான் இந்த அனுமதி!

தாயின் உயிருக்கு ஆபத்து என்கின்ற நிலையில் 24 வாரங்கள் கடந்த நிலையிலும், கருக்கலைப்பு செய்வதில் தவறில்லை என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு தற்போது அமலில் உள்ள கருக்கலைப்பு சட்டத்தின் உட்பிரிவுகள் அனுமதிக்கும் விதிவிலக்குக்கு உட்பட்டே அமைந்துள்ளது.

நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, 20 வாரங்களுக்கு மேல் வளர்ச்சியடைந்த கருவைக் கலைக்க முடியாது. இருப்பினும், இதே சட்ட விதிகளின் உட்பிரிவின்படி, "தாயின் உயிருக்கு வளரும் கருவினால் ஆபத்து' என்றால், தாய் உயிருக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும். அக்கரு 20 வாரங்கள் கடந்திருந்தாலும் கருக்கலைப்பு செய்யலாம் என்று அரசுத் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டதால், உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

இப்படித் தீர்ப்பு வழங்கப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே ஓர் இளம்பெண், குஜராத் நீதிமன்றத்தில் தனக்கு வல்லுறவால் உருவான 25 வாரக் கருவைக் கலைக்க அனுமதி வேண்டும் என்று வழக்கு தொடுத்து, அவருக்கு "சிறப்பு நேர்வாக" அனுமதி அளிக்கப்பட்டது. தற்போதைய வழக்கில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இன்னொரு வழக்கு தில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவும்கூட வல்லுறவினால் உண்டான கருவைக் கலைக்கக் கோரும் மனுதான். தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் இதே தீர்ப்பை தில்லி உயர்நீதிமன்றமும் வழங்கக்கூடும்.

ஒரு தாயின் உயிரைக் காப்பதற்காக 20 வாரங்களைக் கடந்த நிலையிலும், மருத்துவர் அறிக்கையை ஏற்று, கருக்கலைப்பு செய்வதில் எந்தவிதத் தவறும் இல்லை. ஆனால், கருக்கலைப்பை சட்டப்படி செய்வதானாலும், அதற்கு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்கிற கேள்வியை எழுப்பினால், அதற்கான பதில் "இல்லை" என்பதாகவே முடியும்.

12 வாரங்களுக்கு மிகாத கருவை ஒரு தனி மருத்துவர் எடுக்கும் முடிவின்படி, அந்தப் பெண்ணின் சம்மதத்துடன் கருக்கலைப்பு செய்வதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால், 12 வாரங்களுக்கு மேற்பட்ட 20 வாரங்களுக்குட்பட்ட கருவைக் கலைக்க வேண்டுமானால் இரண்டு மருத்துவர்களின் சான்றறிக்கை தேவை.

கரு விபரீதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்றோ அல்லது அந்தக் கருவினால் தாயின் உயிருக்கு ஆபத்து என்றோ அல்லது அந்தக் கருவின் வளர்ச்சி முழுமையற்றதாக இருப்பதால் குழந்தை ஊனமாக அல்லது மூளைவளர்ச்சி குன்றியதாக பிறக்கலாம் என்றோ மருத்துவர்கள் சான்றளிக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் இவ்வாறாக, 12 வாரங்களுக்கு மேற்பட்ட கருக்கலைப்பு தகுந்த சான்றறிக்கையுடன் நடைபெறுவதே இல்லை.

ஊனமாகப் பிறக்க வாய்ப்புள்ள நிலையில், வல்லுறவில் கரு உருவாகியிருந்தால், கருவைச் சுமக்கும் பெண்ணுக்கு அந்தக் கருவினால் உடல், உயிர், மனநிலைக்குப் பாதிப்பு ஏற்படும் நிலைமை காணப்பட்டால், கருவுற்ற பெண் மனநிலை குன்றியவராக இருந்தால், ஏற்கெனவே கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்திருந்தும்கூட கருவுற்றிருத்தல் உள்ளிட்ட சூழல்களில் கருக்கலைப்பை அனுமதிக்கலாம் என்கிறது சட்டம்.

ஆனால், பல நேர்வுகளில் 12 வாரங்களுக்கு உட்பட்ட கரு என்றே பதிவு செய்து கருக்கலைப்பு செய்துவிடும் போக்கு காணப்படுகிறது. இதற்குக் காரணம், 90 விழுக்காடு சம்பவங்களில், மணமாகாத நிலையில் கருவுறுதல், காதலித்ததால் கருவுறுதல், வல்லுறவினால் கருவுறுதல், சிறுமி கருவுறுதல் ஆகியவைதான் கருக்கலைப்புக்கான காரணங்களாக இருக்கின்றன. இன்றைய நவீன வாழ்க்கை முறை, தகவல் தொழில்நுட்பம், மாறும் சமூக வழக்கம் அனைத்தும் இத்தகைய கருவுறுதலை அதிகப்படுத்தியுள்ளது.

பல சம்பவங்களில் வல்லுறவுக்குக் காரணமான அல்லது காதலித்து கருவுறச் செய்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்தி, திருமணத்துக்கு சம்மதிக்க வைப்பதில் ஏற்படும் காலதாமதத்தில் கரு வளர்ந்துவிடுகிறது. சிறுமிகள் இந்த விவகாரத்தை பெற்றோரிடம் தெரிவிக்க அச்சப்படுவதாலும் காலதாமதம் ஏற்படுகிறது. பெண்ணின் எதிர்கால வாழ்க்கை, குடும்ப கெளரவம் போன்ற காரணங்களால் பெண்ணின் பெற்றோர் இதனை பதிவு செய்யாமலேயே அல்லது 12 வாரங்களுக்கு உட்பட்ட கருவாக பதிவு செய்து கலைத்துவிடுவதையே விரும்புகிறார்கள்.

தற்போது 24 வாரங்களுக்கு மேற்பட்ட கருவைக் கலைக்க அனுமதி கோரிய வழக்கில்கூட, அந்தப் பெண் காதலித்தபோது கருவுற்று, காதலன் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ததால் அவர் மீது வல்லுறவு வழக்கு நடைபெற்று வருகிறது. தில்லியில் நிலுவையில் உள்ள இளம்பெண் விவகாரத்தில், அவர் வல்லுறவினால் கருவுற்றதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் யார் மீதும் இன்னும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு பொதுவான வழிகாட்டுதலை அறிவித்திருக்கலாம். அதாவது, வல்லுறவுக்கு ஆளான, காதலித்தவரால் ஏமாற்றப்பட்ட பெண், 18 வயது நிரம்பாத ஒரு பெண், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தாலே போதுமானது, அவர் 20 வாரங்களை கடந்த கருவை, பாதுகாப்பான மருத்துவ முறைப்படி கலைத்துக்கொள்ளலாம் என்று பொதுவான வழிகாட்டுதலை அறிவித்திருக்கலாம். அப்படி ஏன் செய்யாமல் விட்டார்கள் என்று புரியவில்லை.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பாகத்தான் கருக்கலைப்பு நடைபெறுகிறது என்பதை அரசு உறுதிப்படுத்தியாக வேண்டும். சமூக கேலிக்கு ஆளாகி விடுவமோ என்கிற பயத்தில் பலரும் முறையான மருத்துவ முன்னேற்பாடுகளுடன் கருக்கலைப்பை செய்ய முற்படுவதில்லை. இந்த நிலைமையிலும் மாற்றம் ஏற்பட்டாக வேண்டும்!


Source:Dinamani

No comments:

Post a Comment