Friday, July 29, 2016

விபத்து அல்ல பாடம்!


வான் பரப்பில் காணாமல்போன இந்திய விமானப் படையின் ராணுவ விமானம் ஏ.என்.32 இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரை கிடைத்த சிறு சிறு துப்புகளும்கூட தவறானதாகவே முடிந்துள்ளன

என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்திருப்பதைப் பார்க்கும்போது, இந்த விமானம் கண்டுபிடிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும், அதில் பயணம் செய்தோர் உயிருடன்

மீட்கப்படும் வாய்ப்புகளும் மிகமிக அரிதாகிக்கொண்டே வருகின்றன.

தாம்பரம் ராணுவ தளத்திலிருந்து அந்தமான் தீவுக்கு (போர்ட் பிளேர்) புறப்பட்டுச் சென்ற ஏ.என்.32 விமானம் 270 கி.மீ. தொலைவுவரை கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்துள்ளது. அதன் பிறகு

அந்த விமானம் காணாமல் போய்விட்டது. ஆறு விமானப் பணியாளர்கள் உள்பட 29 பேர் நிலைமை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

கடல்நீரில் விமானம் விழுந்தால் உயிர்பிழைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று பொதுவாக கருதப்பட்டாலும், அது உண்மையல்ல. அதற்கு எதிரான வாய்ப்புகளே அதிகமாக உள்ளன. 23,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் விமானம் கடலைத் தொடும்போது எந்தக் கோணத்தில் அமைகிறது என்பதும், மிதவை உடைகள் மற்றும் கடலின் அப்போதைய குளிர்ச்சி அளவு, அந்தப் பகுதியில் சுறாமீன்கள் இருக்கின்றவா என்பதையெல்லாம் பொருத்தே உயிர் பிழைக்கும் வாய்ப்பு அமையும்.

சுறா மீன்கள் இல்லாமல் இருந்து மிதவை உடைகள் இருக்குமேயானால் விமானத்தில் பயணித்தவர்கள் குறைந்தது சில நாள்கள் உயிருடன் மிதக்க வாய்ப்பு உண்டு. அந்த சில நாள்களுக்குள் கண்டுபிடிக்கப்பட வேண்டுமானால், விபத்துக்குள்ளான இடம் நிர்ணயிக்கப்படுவதும், அவர்களது உடை, உடைமைகளின் வண்ணங்களும் மிக முக்கியமாகின்றன. பல நிகழ்வுகளில் விமான பயணிகள் இதுபோன்ற விபத்தில் காப்பாற்றப்படுவது இவை மூலம்தான்.

நடுவானில் பழுதடைந்திருந்தால் அனைத்துப் பயணிகளும் மிதவை உடை அணிந்திருக்க வேண்டும். தற்போது இரவிலும் ஊடுருவிப் படம்பிடிக்கும் ரேடார் செயற்கைக்கோள் மூலம் இடத்தை தேடும்

பணிகள் நடைபெற்றாலும் விமானத்தை கண்டுபிடிக்க இயலவில்லை. மோரீஷஸ் தீவிலிருந்து சாகர்நிதி கப்பல் அழைக்கப்பட்டுள்ளது. காற்று மற்றும் அலைகளால் நகர்ந்து இடம்மாறாமல் இருக்கும்

தொழில்நுட்பம் கொண்ட இந்தக் கப்பல் வந்தால், கடலில் விழுந்துள்ள விமானத்தின் சமிக்ஞைகளை துல்லியமாக கணக்கிட முடியும் என்கிறார்கள்.

ஏ.என்.32 விமானம் விபத்துகளை ஏற்படுத்தியதில்லை என்றும் சிறப்பாகச் செயல்படுவது என்றும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டபோதிலும், விமான விபத்துக்கான காரணங்களில் ஒன்றைக்கூட

இதுவரை ஊகிக்க முடியவில்லை. நமது தொழில்நுட்பங்கள் அனைத்துமே ஒரு எல்லைக்கு உட்பட்டவை என்பதையே மீண்டும் மீண்டும் இத்தகைய சம்பவங்கள் உணர்த்திக்கொண்டு இருக்கின்றன.

என்றாலும், இந்த விவகாரத்தைப் பொருத்தவரை, இன்னும் நாம் சரியான தொழில்நுட்பங்களைக்கூட கொண்டிருக்கவில்லை என்பது தெரிகிறது. விமானம் எந்த இடத்தில் விழுந்திருக்கலாம் என்பதை

ஊகிக்கவும் செயற்கைக் கோள் படங்களைக் கொண்டு அதனைக் கண்டறியவும் நம்மால் முடியவில்லை.

அண்மையில் மலேசிய விமானம் காணாமல் போனபோது, அது கடலில் விழுந்ததற்கான அடையாளங்களை மட்டுமே காண முடிந்தது. ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு நபரின் சடலம்கூட கிடைக்கவில்லை. தற்போது நடந்திருப்பதும் அதேபோன்றதொரு விபத்துதான் என்றாலும் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. ராணுவ விமானம் என்பது எதிரிகளால் தாக்குதலுக்கு உள்ளாகவும், திசை திருப்பிக் கொண்டு போகவும் வாய்ப்பு இருக்கிறது.

அதனால் பாதுகாப்பு உணர்வுடன் கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாக ராணுவ விமானங்கள் அமைக்கப்பட வேண்டும். ராணுவ விமானமும் சாதாரண பயணிகள் விமானம் போலத்தான் இருக்கும்

என்றால், அதனால் என்ன பயன்?

நடுவானில் வெடித்துச் சிதறியிருந்தால், செயற்கைக்கோளில் அது பதிவாகியிருக்கும் வாய்ப்புகள் உண்டு. கடந்த நான்கு நாள்களில் அத்தகைய பதிவுகள் ஏதும் தெரியவரவில்லை.

கடலோரக் காவல்படையின் டோர்னியர் விமானம், மூன்று வீரர்களுடன் காணாமல் போனது. அதனை தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. சில தினங்களுக்குப் பிறகு அந்த வீரர்களின் உடல்பாகங்களும்

பயன்படுத்திய சில பொருள்களும் கரை ஒதுங்கின. அதைக் கொண்டே இதை விபத்தாகக் கருதி, முடித்துவைத்தனர்.

இந்திய விமானப்படையில் இதேபோன்றதொரு சம்பவம் 1968-லும் நேர்ந்தது. சண்டீகரிலிருந்து லே விமான தளத்துக்கு 98 பேருடன் பறந்து சென்ற விமானம், மோசமான வானிலை காரணமாக மீண்டும்

சண்டீகருக்கே திரும்பிச் செல்ல பணிக்கப்பட்டது. ஆனால் அந்த விமானம் சண்டீகருக்குச் சென்று சேரவில்லை. 35 ஆண்டுகளுக்குப் பிறகு, வடஇமாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சடலம், அந்த

விமானத்தில் பயணம் செய்த நபருடையது என்பது தெரிந்தது. அங்கே சோதனை நடத்தி மேலும் பல சடலங்களை மீட்டதோடு, அந்த சம்பவம் ஒரு விபத்து என்றும் முடிவு செய்தனர்.

ஒரு விமானம், விபத்து, தாக்குதல், கடத்தலுக்கு இலக்காகும்போது பயணிகள் அல்லது ஒரு பயணியின் எத்தகைய செயல்கள் கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டுசேர்க்கும் என்கிற செயலிகளை நாம்

இன்னும் உருவாக்காமல் இருக்கிறோம். ஒரு விமானம் தரையில் அல்லது கடலில் விழுந்தாலும் ஒளிஉமிழ் பாகங்களை சிதறவிடுவதான உத்திகள், அல்லது காந்தஅலைகளை வெளியிட்டு

இருப்பிடம்காட்டும் உத்திகள் இவை இன்னமும் உருவாக்கப்படவில்லை என்பதை இந்த விமான விபத்து உலகுக்கு உணர்த்துகிறது.

Source:Dinamani

No comments:

Post a Comment