Sunday, July 17, 2016

கொந்தளிப்பும் காரணமும்!- KASHMIR ISSUE

கடந்த ஒரு வார காலமாகக் காஷ்மீர் பள்ளத்தாக்கு மிக மோசமான சட்டம் ஒழுங்கு சீர்குலைவைச் சந்தித்து வருகிறது. இதற்குக் காரணம் இஸ்புல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பின் இளந்தலைவர் பர்ஹான் முசாபர் வானி, ஜம்மு - காஷ்மீர் மாநில போலீஸ் மற்றும் ராணுவத்தின் கூட்டு நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதுதான்.

2010-ஆம் ஆண்டு முதல் இஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் செயல்பட்ட 22 வயதான வானி, கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். இளைஞர்கள் விரும்பிப் பார்க்கும் அனைத்து சமூக வலைத்தள செயலிகள் மூலமாகவும் இளைஞர்களுக்குத் தன்னையும் தனது நோக்கத்தையும் தெரிவித்துக் கொண்டிருந்தவர். "போஸ்டர் பாய்' என்று கொண்டாடும் அளவுக்கு அவர் பிரபலம்.

1989-90 கால கட்டங்களில், இந்தியாவுக்கு எதிரான உணர்வுகள் தூண்டிவிடப்பட்டு, காஷ்மீர் இளைஞர்களை வெறுப்பும் தனிமையும் கவ்வியது. அதே நிலைமைதான் இப்போது பர்ஹான் வானியால் சமூக வலைதளங்களின் மூலம் உருவாக்கப்பட்டது.

வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பர்ஹான் வானி, ஏனைய பயங்கரவாதத் தலைவர்களைப் போலல்லாமல், சமூக வலைதளங்களின் மூலம் இளம் காஷ்மீரிகளை அரசுக்கும், ராணுவத்துக்கும் எதிராகத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தவர் என்பதும், முஸ்லிம் இளைஞர்களை மதத்தின் பெயரால் மூளைச்சலவை செய்து பயங்கரவாத உணர்வைத் தூண்டிவந்தார் என்பதும் உண்மை. பர்ஹான் வானியின் கனவு இந்தியாவிலிருந்து காஷ்மீரத்துக்கு விடுதலை பெற்றுத் தருவது மட்டுமல்ல. இந்தியாவில் இஸ்லாமியக் கொடி பறக்க வேண்டும் என்பதுதான் அவர் சமூக வலைதளங்களின் மூலம் தொடர்ந்து பரப்பிக் கொண்டிருந்த கருத்து. முந்தைய காஷ்மீர் பயங்கரவாத இயக்கத்தினர் "காஷ்மீரியாட்' என்கிற முழக்கத்தை முன்வைத்துப் போராடினார்கள் என்றால், வானியின் அறைகூவல்கள் "இஸ்லாமியாட்' என்பதாகத்தான் இருந்தது. இதுதான் பல இளைஞர்களைக் கவர்ந்ததன் காரணம். ÷

இவரது நடவடிக்கைகள் மிகவும் மோசமான பிறகே, அவரைக் கைது செய்வதற்காக சுற்றி வளைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடைசியாக, மாநில போலீஸýம் ராணுவமும் நடத்திய கூட்டுத் தாக்குலில் வானி பலியானார். சுட்டுக் கொல்லப்படும் சம்பவத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பாக, வலைதள விடியோ பதிவேற்றத்தில் வானி உரைநிகழ்த்தி, தங்களை ஆதரிக்காத போலீஸார், ஊடகம், சமூக அமைப்புகள் தாக்குதலுக்கு ஆளாவர் என்று பகிரங்கமாக எச்சரித்தார். அடுத்த நடவடிக்கையாக காஷ்மீர் போலீஸார் பலர் கொல்லப்படும் சம்பவங்கள் நடந்ததால், இந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஒரு பயங்ரவாத அமைப்பில் இருந்த வானிக்காக இந்த அளவுக்கு வன்முறை வெடிக்கும் என்றால் அதற்குக் காரணம் அவரது ஆளுமை என்பதைவிட, சமூகவலைதளங்களின் கட்டற்ற அனுமதியும் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தியின் மெத்தனமும்தான். சமூக வலைதளங்களில் ஒரு பயங்கரவாத இயக்கம் தனது கருத்தை தெரிவித்து ஒவ்வொரு நாளும் புதிதாகப் பதிவிடும் செயல்பாட்டை முடக்க மத்திய - மாநில அரசுகள் தவறிவிட்டன. வானி இந்த அளவுக்குப் பிரபலமாவதை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க வேண்டும். அப்போதே அவர் கைது செய்யப்பட்டு, அவரது செயல்பாடுகளை முடக்கி இருக்க வேண்டும்.

மாநில அரசு இதில் அக்கறை காட்டவில்லை. மாறாக, 2010 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில், போலீஸ் மற்றும் ராணுவத்தினர் மீது கல்லெறிந்த குற்றச் சம்பவங்கள் தொடர்பான 104 வழக்குகளை காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி திரும்பப் பெற்றார். 634 பேரை வழக்கிலிருந்து விடுவித்தார். இப்போது, அப்படி விடுதலையானவர்களின் தலைமையில் காஷ்மீர் இளைஞர்கள் பலரும் மீண்டும் தெருவில் இறங்கி கல்லெறிந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கலவரத்தின் மூலம் காஷ்மீர் போராட்டத்தை அங்குள்ள அனைவரும் ஆதரிக்கிறார்கள் என்கிற தோற்றத்தை ஏற்படுத்த முனைகிறார்கள்.

அமர்நாத் யாத்திரை சென்றுள்ளவர்களை அச்சத்தில் வைத்திருக்கவும், இனி யாரும் அமர்நாத் யாத்திரையை நினைத்தும் பார்க்கக்கூடாது என்பதற்காகவும் இந்த அசாதாரண சூழலை பயன்படுத்திக்கொள்ள காஷ்மீர் பயங்ரவாத அமைப்புகள் விரும்புகின்றன. அமர்நாத் யாத்திரையை இந்தியர்கள் மறக்கும்படி செய்துவிட்டால், அவர்களுக்குக் காஷ்மீர் மீதான பிடிப்பு இல்லாமல் போகும் என்கிற எண்ணமே இதற்குக் காரணம்.

காஷ்மீரில் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களுக்கு மத்திய அரசைக் காட்டிலும் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்திக்கு அதிக பொறுப்பு உள்ளது. முந்தைய ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைமையிலான ஆட்சியும் சரி, இப்போதைய மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைமையிலான ஆட்சியும் சரி, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பற்றிக் சற்றும் கவலைப்படாமல், உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுவதை ஊக்குவிக்காமல் இருப்பதுதான் பயங்கரவாதம் இந்த அளவுக்கு உயிர்த்தெழுந்திருப்பதற்குக் காரணம்.

பர்ஹான் வானியின் மரணமும் அதைத் தொடர்ந்து காஷ்மீரத்தில் வெடித்திருக்கும் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டமும் உண்மை. அதே நேரத்தில், பாதுகாப்புப் படைகள் வானியைச் சுட்டுக்கொன்றது தவறு என்றும் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது தவறு என்றும் கூறுவது தவறு. பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லாத வன்முறைக் கும்பல், அரசு அலுவலகங்களையும், பொதுச் சொத்துகளையும் சூறையாடுவதை வேடிக்கை பார்க்க வேண்டும் என்று சொல்வது அபத்தம்.

No comments:

Post a Comment