Saturday, July 16, 2016

சவாலை எதிர்கொள்ளும் பிரிட்டன்!


ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் விலகுவது என்கிற கருத்து வாக்கெடுப்பு முடிவு வெளிவந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு, கடந்த புதன்கிழமை பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கான போட்டி முடிவுக்கு வந்திருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், நான் நீ என்று பிரதமர் பதவிக்குப் போட்டி நிலவாமல், நான் இல்லை, நான் இல்லை என்று பலரும் களத்திலிருந்து விலகிய அசாதாரண சூழல் ஏற்பட்டது என்பதுதான்.

பிரதமர் பதவி என்பது, பிரிட்டிஷ் உள்துறைச் செயலாளராக இருக்கும் தெரஸா மேயின் மடியில் வந்து தானாகவே விழுந்தது என்பதுதான் உண்மை. போட்டியில் இருப்பவர்கள் என்று கருதப்பட்ட அனைவரும் போட்டியிலிருந்து விலகி, அவர் தேர்ந்தெடுக்கப்படும் தவிர்க்க முடியாத சூழலை ஏற்படுத்திவிட்டனர்.

26 ஆண்டு இடைவெளியில் மார்கரெட் தாட்சருக்குப் பிறகு, தெரஸா பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராகப் பதவி ஏற்று இருக்கிறார். கருத்து வாக்கெடுப்பு தோல்வி அடைந்ததால், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். பிரிட்டன் ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து விலக வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்திய போரிஸ் ஜான்ஸன் பிரதமராவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்குவதற்கு முன்பே, தான் போட்டியில் இல்லை என்று அறிவித்து விட்டார். இன்னொரு "பிரெக்ஸிட்' ஆதரவாளரான மைக்கேல் கோவ், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களால் நிராகரிக்கப்பட்டார். விளைவு, தெரஸா மே பிரதமராக வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.

நீண்ட நாள் அரசியல் அனுபவமும், நிர்வாகத் திறமையும் கொண்ட தெரஸா மேயின் செயல்பாடுகளும், கொள்கை முடிவுகளும் பலராலும் அவரை முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சருடன் ஒப்பிட வைக்கின்றன. அவர் உள்துறை செயலராக இருந்த ஆறு ஆண்டுகள் மிகவும் சிறப்பானவை. அந்த காலகட்டத்தில் பிரிட்டனின் பாதுகாப்பு அமைப்புகள், எல்லைப் பிரச்னைகள், காவல் துறை சீரமைப்பு போன்றவை பரவலான பாராட்டைப் பெற்றன. வெளிநாட்டினர் பிரிட்டனில் குடியேறுவது குறித்த அவரது கடுமையான நிலைப்பாடு ஒருபுறம் இருந்தாலும், கருத்து வாக்கெடுப்பு நடந்தபோது, பிரதமர் கேமரூனைப் போலவே, தெரஸா மேயும் பிரிட்டன் ஐரோப்பியக் கூட்டமைப்பில் தொடர வேண்டும் என்கிற கருத்தை வற்புறுத்தினார் என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

கட்டுப்பாடற்ற குடியேற்றத்தை பிரிட்டன் அனுமதிக்கக் கூடாது என்கிற கருத்துடைய தெரஸா மே உள்துறைச் செயலாளராக இருந்தபோது, ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு மேல் வெளிநாட்டவரை அனுமதிக்கக் கூடாது என்கிற வரம்பை நிர்ணயிக்க முற்பட்டார் என்றாலும், பிறகு அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். அப்போது அவர் பிரிட்டனின் நுழைவு அனுமதி (விசா) கேட்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் குடிமக்கள் 3,000 பவுண்டு வைப்புத் தொகையாகக் கட்ட வேண்டும் என்றும், தங்களது கல்விக் கடனை அடைப்பதற்கு மாணவர்கள் படிப்பு முடிந்த பிறகும் தங்கி இருந்து வேலை பார்க்க அனுமதி கிடையாது என்றும்கூட உத்தரவு பிறப்பிக்க இருந்தார் என்பதை மறந்து விட முடியாது.

ஒருபுறம், ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர வேண்டும் என்றும், இன்னொரு புறம் பிற நாட்டவர் பிரிட்டனில் குடியேறுவதை முறைப்படுத்த வேண்டும் என்றும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தவர் தெரஸா மே என்பதால்தான் "பிரெக்ஸிட்' ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் ஒரு சேர இவருக்கு ஆதரவாக இருந்தனர். தாம் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்கிற சூழலில், பிரிட்டன் ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடருமா என்று பத்திரிகை நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில், "பிரெக்ஸிட் பிரெக்ஸிட்தான்' என்பது. அதேநேரத்தில், ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர வேண்டும் என்கிற கருத்தைக் கொண்டிருந்த தெரஸா மே தொடர்ந்து கூட்டமைப்புடன் ஏதாவது ஒரு வகையில் ஒத்துழைப்பும் நல்லுறவும் தொடர முயற்சி மேற்கொள்ள கூடும்.

இனிமேல்தான் பிரிட்டன், எப்படி அதிக பாதிப்பு இல்லாமலும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுடனான நட்புறவு பலவீனப்படாமலும், அடுத்த கட்டத்திற்கு நகரப் போகிறது என்பது தெரிய வரும். ஐரோப்பிய கூட்டமைப்புடனான பிரிட்டனின் நாற்பதாண்டு உறவைத் துண்டித்துக் கொள்வது என்பது அவ்வளவு சுலபமல்ல. இது பிரிட்டனின் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கக் கூடும். அப்படி பாதிக்குமானால், இப்போது வெளிநாட்டினரின் குடியேற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் சாமானிய பிரிட்டிஷ் குடிமக்கள் மேலும் பொருளாதார நெருக்கடிக்கும், வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும், பாதிப்புகளுக்கும் உள்ளாவார்கள். அதைப் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் தெரஸா மே எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.

இரண்டாவது உலக யுத்தம் தொடங்கியபோது, பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் எதிர்கொண்டது போன்ற மிகப்பெரிய சவால்கள், பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தெரஸா மேயையும் எதிர்கொள்கிறது. "பிரெக்ஸிட்' தீர்ப்பால் பிளவுபட்டுக் கிடக்கும் பிரிட்டனை ஒற்றுமைப்படுத்தும் பணி மிகப்பெரிய சவால். அதைவிடப் பெரிய சவால் பொருளாதார நெருக்கடியும், வேலையில்லாத் திண்டாட்டமும்.

கன்சர்வேடிவ் கட்சி ஒற்றுமையாக இருக்குமா, அவரது தலைமையை ஒருமனதாக ஏற்று நடக்குமா என்பதைப் பொருத்துத்தான், தெரஸா மேயின் எதிர்காலமும், பிரிட்டனின் வருங்காலமும் அமையும்!

SOURCE:DINAMANI

No comments:

Post a Comment