Saturday, July 23, 2016

விரிவான விவாதம் தேவை!


குழந்தைத் தொழிலாளர்முறை ஒழிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல் திருத்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. மக்களவையில் ஆளும் பா.ஜ.க. உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், இந்த மசோதா சட்டமாவதில் எந்த இடையூறும் இருக்கப்போவதில்லை.

இந்தச் சட்டத்தில் இரண்டு விஷயங்களில் எதிர்க்கட்சிகளும் குழந்தைகள் நல ஆர்வலர்களும் அதிக அக்கறை காட்டினார்கள். குடும்பத் தொழிலில் குழந்தைகளை ஈடுபடுத்தினாலும் குற்றமாக கருதப்பட வேண்டும் என்பது முதலாவது கருத்து. அதேபோன்று, 14 வயது வரை சிறார்கள் என்றும், 14 வயது முதல் 18 வயது வரையிலானவர்களை வளர் இளம் பருவத்தினர் (அடோலெசன்ட்) என்றும் இனம்பிரிக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தினர். அப்படி இருந்தும்கூட எதிர்க்கட்சிகள் அதிக பலம் பொருந்திய மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறி இருக்கிறது.

இந்த மசோதா குறித்து விளக்கம் அளித்த மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேய, "சிறார்கள் தங்கள் பள்ளி நேரத்துக்குப் பிறகு குடும்பத்துக்குள் பெற்றோருக்கு உதவியாக இருப்பதை இந்தச் சட்டம் தடைசெய்யவில்லை. ஏனென்றால், குடும்பத்துக்குள்ளான தொழில் உதவிகளைப் பொருத்தவரை - முதலாளி -தொழிலாளி என்ற நடைமுறை ஏதும் இல்லை. அதேசமயம், வளர் இளம் பருவத்தினரை ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்துதல் குற்றம்' என்று குறிப்பிட்டார்.

குடும்பத்துக்குள் பெற்றோருக்கு உதவுதல் என்பது குறித்தும் வரையறுக்கப்பட வேண்டும் என்பது குழந்தைகள் நல ஆர்வலர்களின் கோரிக்கை. அவர்களது வாதம் இதுதான். அந்தக் குழந்தையின் உதவி அல்லது உழைப்பு, தந்தைக்கான கூலியாக அமைந்தால், அத்தகைய தொழில்முறைகளும் குழந்தைத் தொழிலாளர் முறையாகவே கருதப்பட வேண்டும். பெற்றோர் பீடி சுற்றினால், குழந்தையும் அவர்களுக்கு உதவியாக பீடி சுற்றும்போது, அது தந்தைக்குக் கிடைக்கும் கூலியின் அளவை உயர்த்தவே உதவுகிறது. அதேவேளையில், சொந்த வயலில் நீர்ப்பாய்ச்ச உதவுதல், பூ அல்லது காய்கள் பறித்துக் கொடுத்தல் ஆகிய வேலைகளில் சிறார்கள் ஈடுபடும்போது, அதற்கான கூலி தந்தைக்கு கிடைப்பதாகக் கருத முடியாது. இதுபோன்று, எந்தெந்தக் குடும்பத் தொழில்களில் சிறார்களை ஈடுபடுத்துவது என்பதை மேலும் நுட்பமாக இச்சட்டம் ஆராய வேண்டும் என்பதே அவர்களது வாதம்.

ஆனால், தற்போது நிறைவேறியுள்ள மசோதாவில் அதற்கான திருத்தங்கள் இல்லை. குடும்பத் தொழில் என்றாலும் ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்துதல் குற்றம் என்பது மட்டுமே உள்ளது. திரைப்படம், டிவி நிகழ்ச்சிகளில் சிறார்கள் நடிக்கும்போது, பங்குகொள்ளும்போது அவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீர்மானிக்க வேண்டியது அந்தந்த மாநில அரசுகளின் பொறுப்பு என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. டிவி, சினிமா துறையில் வளர் இளம் பருவத்தினருக்கென தனியான விதிமுறைகளை உருவாக்கவும் இல்லை.

அதேபோன்று, வளர் இளம் பருவத்தினரை ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்தக் கூடாது என்று மட்டுமே சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், ஆபத்தான தொழில் என்கிற பட்டியல் மாறு

தலுக்கு இலக்காகிறது. மேலும், ஆபத்தில்லா தொழில்கள் என்

றாலும்கூட பின்னாளில் உடல்நலனை பாதிக்கும் தொழில்களிலும், நெறிப்பிறழ்வை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள தொழில்களிலும் வளர் இளம் பருவத்தினரை ஈடுபடுத்துதல் கூடாது என்கின்ற தெளிவான வரையறை இந்தச் சட்டத்தில் தேவை. ஏனென்றால், ஒரு மதுக்கூடத்தில் சிற்றேவலராக இருப்பது ஆபத்தில்லாத தொழில்தான். ஆனால் அது நெறிப்பிறழ்வை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.

வளர் இளம் பருவத்தினர் 14 வயதில் 9-ஆம் வகுப்பு படிக்கத் தொடங்கும்போதுதான் உண்மையான கல்வியைப் பெறுகின்றனர். அந்த நிலையில், அவர்களை ஆபத்தில்லா தொழிலில் பணிபுரிய அனுமதித்தால், படிப்பைத் தொடராமல், நடுநிலைப் பள்ளியுடன் நின்றுவிடுவார்கள். இதனால் அறிவான சமுதாயம் உருவாகாது. ஆகவே, வளர் இளம் பருவத்தினர் எனத் தனியாகப் பிரிக்கும்போது அவர்களுக்கான பணிநேரம், பணிசெய்ய அனுமதிக்கப்படும் தொழில்கள், அந்தப் பணிக்கான ஊதியம் ஆகியவற்றையும் நிர்ணயம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை நியாயமானது.

2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரத்தில் இந்தியா முழுவதிலும் 1.26 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தனர். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரத்தில் இந்த எண்ணிக்கை 43.5 லட்சமாக குறைந்தது. பத்து ஆண்டுகளில் 50 விழுக்காடு குழந்தைத் தொழிலாளர்கள் குறைந்திருப்பது தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் குழந்தைத் தொழிலாளர்முறை ஒழிப்பு சட்டத்தால்தான். "அனைவருக்கும் கல்வி' திட்டமும் ஒரு முக்கியக் காரணம்.

இருப்பினும், இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முற்றிலுமாக இல்லாத சூழலை உருவாக்குவதும், வளர் இளம் பருவத்தினர் உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளியில் கல்வியைத் தொடரும்வகையில், அவர்கள் பணியாற்றக்கூடிய தொழில்களை வரைமுறைப்படுத்துவதும் அவசியம்.

குழந்தைகள் டிவி, சினிமாவில் நடிப்பதை அனுமதிப்பது போலவே, குழந்தைகளை எந்தெந்த விளையாட்டில் ஈடுபடுத்துவது என்பதையும் நெறிப்படுத்த வேண்டும். விளையாட்டு என்ற பெயரில் சாதனை செய்து புகழ் பெறுவதற்காக பெற்றோரே தங்கள் குழந்தைகளை இம்சை செய்யும் சூழல்கள் உள்ளன.

மக்களவையில் இந்த மசோதா மீண்டும் அறிமுகமாகிறபோது, இத்தகைய குறைபாடுகள் குறித்து விரிவாக விவாதித்து, அதன் பிறகு நிறைவேற்றுவதே சரியாக இருக்கும்.

Source:Dinamani

No comments:

Post a Comment