Friday, February 3, 2017

மாநிலங்கள் விரும்பித் தருகின்ற அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்ளட்டும்!- அறிஞர் அண்ணா

பிப்ரவரி 3: அண்ணா நினைவு நாள்

நான் திராவிட நாடு கோரிக்கையை விட்டுவிட்டேன். ஆனால், திராவிட நாடு கேட்பதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ அவற்றில் ஒன்றைக்கூட விட்டுவிடவில்லை. அதில் ஒளிவு மறைவு இல்லை. அதைச் சொல்லிக்கொள்வதற்கும் வெட்கப்படுவதற்கும் ஒன்றும் இல்லை. திராவிட நாடு என்று தனியாக இருந்தால், நாம் தொழில் வளர்ச்சி பெற முடியும் என்று சொன்னோம்.

திராவிட நாடு வேண்டுமென்று கேட்டதற்குக் காரணமே, இங்கு தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும்; பிராந்திய சமநிலை ஏற்படுவதற்குப் புதுப்புதுத் தொழில்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதுதான். அதை நாங்கள் விட்டுவிடவில்லை. மத்திய சர்க்காரிடம் அதிகாரங்கள் குவியலாக இருக்கக் கூடாது என்பதற்காகக் கேட்டோம். அதை விட்டுவிடவில்லை.

மாநில சர்க்கார் பல அதிகாரங்களைப் பல துறைகளிலும் பெற வேண்டும் என்பதற்காகக் கேட்டோம். அதை விட்டுவிடவில்லை. அடுத்து, மொழி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக திராவிட நாடு கேட்டோம். அதை விட்டுவிடவில்லை. பண்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகக் கேட்டோம். அதை நாங்கள் விட்டுவிடவில்லை. ஆகவே, திராவிட நாடு நாங்கள் கேட்டதற்கான காரணங்களில் ஒன்றைக்கூட விட்டுவிடவில்லை. அதற்குக் காரணம் என்ன வென்றால், அவை நியாயமான காரணங்கள். மனமார்ந்து ஏற்றுக்கொண்ட காரணங்கள்.

நாங்கள் திராவிட நாட்டை விட்டுவிட்டோம். ‘திராவிட நாட்டைத் தான் விட்டுவிட்டீர்களே, ஏன் இந்தியை எதிர்க்கிறீர்கள்?’ என்று கேட்டால் ஒப்புக் கொள்ள முடியுமா? இந்த எதிர்ப்பை விட்டுவிட மாட்டோம். ‘திராவிட நாட்டை விட்டுவிட்டதால், எங்களுக்கு சேலம் இரும்பாலை வேண்டாம். ஜாம் ஷெட்பூரிலேயே வையுங்கள்’ என்று சொல்லிவிடுவோமா? நிச்சயமாகச் சொல்ல மாட்டோம். ‘தூத்துக்குடி வேண்டாம்.. இன்னொரு காண்ட்லா கட்டுங்கள்’ என்று சொல்வோமா? நிச்சயமாகச் சொல்ல மாட்டோம்.

திராவிட நாடு கிடைத்தால் என்னென்ன பெறுவோமோ அவை ஒவ்வொன்றையும் இந்திய யூனியனின் உள்ளே இருந்தே பெறலாம், பெற வேண்டும், பெற முடியும் என்ற நம்பிக்கையிலேதான் இருக்கிறோமே தவிர, திராவிட நாட்டுக்கான காரணங்கள் ஒன்றையும் நாங்கள் விட்டுவிடவில்லை.

மாநில சுயாட்சி வேண்டும் என்று நாம் கேட்கிறபோது, இப்படிப் பேசுவது மத்திய அரசைக் குலைப்பதாகும்; நாட்டுக்குப் பெருத்த ஆபத்து வரும் என்று கூறுகின்றனர். மக்களின் சுக துக்கத்தோடு பின்னிப் பிணைந்திருப்பது மாநில அரசுதானே தவிர, மத்திய அரசு அல்ல. மாநில அரசினர்தான் மக்களின் குறைகளை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியவர்கள். மத்திய அரசின் வலிவு அச்சத்தைத் தர, கலக்கத்தைத் தர என்றால், நமது கூட்டு சக்தியின் மூலம், நம்மில் ஒவ்வொருவருடைய வலுவையும் கொண்டு அந்த அக்ரம வலிவைச் சிறுகச் சிறுகக் குறைப்பதுதான் எங்கள் கடமையாக இருக்கும்.

மத்திய அரசு பலமாக இருந்தது குப்த சாம்ராஜ்யத்தில், மொகலாய சாம்ராஜ்யத்தில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில்! ஆனால், இன்று அந்த சாம்ராஜ்யங்கள் எங்கே? நாட்டுப் பாதுகாப்பு தவிர, மற்ற அதிகாரங்கள் அனைத்தையும் பற்றிச் சிந்திப்போம். மாநிலங்களுக்குத் தேவையான அதிகாரங்களை மாநிலங்கள் எடுத்துக்கொள்ளட்டும். பின்னர் மாநிலங்கள் விரும்பித் தருகின்ற அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்ளட்டும்!

Source:The Hindu

No comments:

Post a Comment