Friday, November 10, 2017

பொருளாதார மீட்சிக்கு புதிய உத்தி உதவுமா?



மந்த நிலையிலிருந்து பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு இருமுனை உத்தியை வகுத்திருக்கிறது. அரசுத் துறை வங்கிகளுக்குப் பெருமளவுக்கு முதலீட்டை வழங்கும் உத்தியுடன், மிகப் பெரிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தையும் அறிவித்திருக்கிறது. இவ்விரண்டும் அடித்தளக் கட்டமைப்புகளுக்கான செலவை அதிகப்படுத்தி வளர்ச்சியையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், வங்கித் துறையின் வாராக்கடன் பிரச்சினைக்குத் தீர்வு காண மத்திய அரசு ஏன் மூன்று ஆண்டுகள் காத்திருந்தது என்பது விளங்கவில்லை.

83,677 கிலோ மீட்டர் நீள நெடுஞ்சாலைகள் அமைக்க ரூ.7 லட்சம் கோடியைச் செலவிட மத்திய அரசு திட்டமிடப்பட்டிருக் கிறது. இந்தச் சாலை நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் எல்லைப்புறங்கள், பழங்குடிகள் – மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகள், இதுவரை சாலைப் போக்குவரத்துடன் இணைக்கப்படாத தொலைதூரப் பகுதிகளில் அமையவிருக்கிறது. 2022 மார்ச் வரையில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படும். ‘பாரத் மாலா பரியோஜனா’ என்ற இந்தத் திட்டம் மூலம், நேரடியாக 14.2 கோடி மனிதஉழைப்பு நாட்கள் உருவாக்கப்படும். இந்த திட்டம் உத்தேசிக்கப்பட்டபடி, கடலோரப் பகுதிகளையும் தேசிய நெடுஞ்சாலைகளையும், 550 மாவட்டங்களையும் இணைத் தால் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலாக அமையும். அதன் பலன்களை இவ்வளவென்று ரூபாயில் அளந்து சொல்ல முடியாவிட்டாலும், ஜிடிபிக்கு கணிசமான பங்களிப்பைச் செய்யும் என்கிறார் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி.

பாரத்மாலா திட்டத்துக்கு மொத்தம் ரூ.5.35 லட்சம் கோடி தேவை. அதில் ரூ.2.09 லட்சம் கோடி சந்தையில் கடன்கள் மூலம் திரட்டப்படும். ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் தனியார் முதலீடுகளிலிருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே அடித்தளக் கட்டமைப்புப் பணிகளை ஒப்பந்த முறையில் செய்யத் தொடங்கி, தொடர முடியாமல் திணறிவரும் தனியார் நிறுவனங்கள் புதிய சாலைத் திட்டத்தில் இறங்க அரசிடமிருந்து தெளிவான வழிகாட்டலைப் பெற விரும்பும். அரசும் தனியாரும் இணைந்து மேற்கொள்ளும் பொது திட்டங்களுக்கு (பிபிபி) எப்படிப் புத்துயிர் ஊட்டலாம் என்று பரிந்துரைக்க முன்னாள் நிதித்துறைச் செயலர் விஜய் கேல்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. கிடப்பில் உள்ள அந்தப் பரிந்துரைகளை தூசுதட்டி எடுத்து அமல்படுத்த வேண்டும்.

அரசு – தனியார் இணைந்து செயல்படுத்த வேண்டிய பிபிபி திட்டங்களுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்டிலேயே ரூ.500 கோடி ஒதுக்கியிருந்தும் அது பயன்படுத்தப்படவில்லை. பல திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் தனியார்கள் ஓடிவிட்டனர். அரசு இதற்காக ஏற்படுத்த உத்தேசித்த நிறுவனம் இன்னமும் உருவாகவில்லை. தொழில் திட்டங் களுக்காக நிலங்களைக் கையகப்படுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதலாண்டில் கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்குப் பெருமளவில் எதிர்ப்பு எழுந்த தால் அதுவும் கைவிடப்பட்டுவிட்டது. அடித்தளக் கட்டமைப்பு திட்டங்களுக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும் என்றால் இவ்விரண்டுக்கும் முக்கியத்துவம் அளித்தாக வேண்டும்.


Source:Tamil Hindu

No comments:

Post a Comment