Saturday, March 24, 2018

கவுரவமாக சாக அனுமதி...

மிகவும் கொடிய அளவில் நோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீள முடியாதவர்கள் இனி, 'கருணைக் கொலை' என்ற முறையில் உயிரை முடித்துக் கொள்ள, சுப்ரீம் கோர்ட் அனுமதித்திருக்கிறது.வாழ்வதை, 'ஒருவரது அடிப்படை உரிமை' என்று, அரசியல் சாசனம் சட்டப்பிரிவு, 21 வரையறை செய்திருப்பதுடன், அதை, 'கவுரவமாக வாழ்வது வாழ்க்கை' என, குறிப்பிட்டிருக்கிறது.
ஒரு நபர், நோய்வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு சென்றால், அவரை அந்நோயில் இருந்து மீட்டு, காப்பாற்ற வேண்டிய செயல், டாக்டர் உடையதாகிறது. டாக்டர்கள் படிப்பில் உள்ள உறுதி மொழியும் வலியுறுத்துகிறது.
'வாழும் உரிமை' ஒருவருக்கு இருப்பது போல, 'சாகும் உரிமை' ஒருவருக்கு உள்ளதா என்ற கேள்வி தொடர்கிறது.'எந்த முயற்சி செய்தாலும் காப்பாற்ற முடியாது' எனும் போது, நினைவிழந்த நிலையில், அந்த நோயாளிக்கு ஊசி செலுத்தி, முடிவை எட்டச் செய்யும் நடைமுறை, 'ஆக்டீவ் யுதேனிசியா' என்றும், மருத்துவ உபகரணங்கள் மூலம் மூச்சைக் காக்கும் போது, அந்த உபகரணங்களை பிடுங்கி உயிரற்றதாக்கும் முறைக்கு, 'பாசிவ் யுதேனிசியா' என்றும் விளக்கப்படுகிறது.
மரணதண்டனை பெற்றவர்களுக்கு கூட, விஷ ஊசி செலுத்தி, உயிரைப் பறிக்க அனுமதிக்காத நம்நாடு, 'ஆக்டீவ்' நடைமுறையை என்றுமே ஏற்கவில்லை. தற்போது, தலைமை நீதிபதி, தீபக் சர்மா தலைமையில் ஆன, ஐந்து நீதிபதிகள் தீர்ப்பு, வரலாற்று முக்கியத்துவம் பெற்றது.
தலைமை நீதிபதி தீபக் சர்மா தெளிவாக, 'சோதனைக் களத்திற்கு பாதிக்கப்பட்ட உடல் என்ன, 'கினியாபிக்' போன்ற சோதனைக்கான மிருகமா...' என்றிருக்கிறார். அது மட்டுமல்ல, வாழ்வில் எத்தனையோ தொழில்நுட்ப பாதிப்புகள், மற்ற பிரச்னைகள் வந்து ஊடாடுகின்றன. அதில் இருந்து ஒரு மனிதன் தன் முடிவை தேர்வு செய்வதற்கு, அவனுக்கு உரிமையில்லையா என்ற தத்துவ கேள்வி இத்தீர்ப்பில் அடங்கியிருக்கிறது.
பொதுவாக, இதிகாச புராணம் படித்தவர்கள், அம்பு படுக்கையில் படுத்த பீஷ்மர், அந்த தொந்தரவுகளுடன் தன் இறப்பு தேதியை முடிவு செய்தார். அதே போல, மார்க்கண்டேயன் தன் வாழ்வை, வேறுவிதமாக நீட்டித்துக் கொண்டார்.
இன்றும், ஜைனத் துறவிகள், உணவு அளவைப் படிப்படியாக குறைத்து, உண்ணாமல் இருந்து மரணத்தை தழுவுகின்றனர். இவை, இன்றைய வாழ்க்கை முறை, மருத்துவ வசதிகளுக்கு உகந்த கருத்தாகாது.ஆனால், அரசு இதற்கேற்ற சட்டம் இயற்றி அமல் ஆகும்போது, எப்படி இப்போது மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு பயன்பட்டு, அவர்கள் மீண்டு வரும் விஷயம் போல, பல விளக்கங்கள் வரலாம்.
கால் துண்டிக்கப்பட்ட நோயாளியின் வசதிக்கு, துண்டிக்கப்பட்ட காலே தலையணையாகவும், மருத்துவமனைகளில் சிகிச்சை தொடரும் போதே, பல்வேறு சிக்கல்கள் வந்து, மாரடைப்பு ஏற்பட்டு பலர் இறப்பதும் செய்தியாகிறது.பொதுவாக, மிகப்பெரிய வசதி வாய்ந்த நவீன மருத்துவமனைகளில், இந்த நடைமுறை எளிதாக வரலாம். அதுவும், தகுதிவாய்ந்த உடலியக்கத்துடன் வாழ முடியாமல், புற்றுநோயின் கடைசி கட்ட பாதிப்பு, மற்ற சில நோய்களில், வலி நிவாரணம் காண முடியாத, தவிப்பு போன்ற பாதிப்புகளில் உள்ள நோயாளிகள், 'வெண்டிலேட்டர்' மற்றும் சிறப்பு சிகிச்சை வார்டுகளில், எந்த நேரமும் உயிர் பிரியும் சூழ்நிலையில், நாள் பலவற்றை எண்ணும் துரதிர்ஷ்டம் ஏற்படுகிறது.
இப்படி அந்த குறிப்பிட்ட நோயாளியைக் காக்க, பணத்தை வாரியிறைக்க தகுதியும் தேவை. ஆனால், நாளுக்கு நாள் மருத்துவ வசதி அதிகரிக்கும், 21ம் நுாற்றாண்டுக்கு, ஏற்ற நல்ல துவக்கம் இத்தீர்ப்பு.அதுவும், தீர்க்க முடியாத நோய்களுக்கு, 'ஸ்டெம் செல்' சிகிச்சை போன்றவை அதிகரிக்கும் காலத்தில், டாக்டர்கள் எடுக்கும் கடைசி உத்திகளை புரிந்து கொள்ளும் வாய்ப்பும், அதற்கான மருந்து மற்றும் மருத்துவ சோதனைகள் ஏற்படுத்தும் செலவினம் ஆகியவற்றை கணக்கிடுவது, இனி முக்கியத்துவம் பெறும்; பல்வேறு விஷயங்களுக்கு, தீர்வாக உதவிடும்.
அதே போல சொத்துப் பங்கீடு அல்லது வேறு காரணங்களுக்காக இப்போது, உயிரை இழுத்து வைத்து, கடைசியில், 'வெண்டிலேட்டரை அகற்றி' மூச்சை நிறுத்துவதை, முடிவு செய்யும் உறவினர் சுபாவத்திலும் மாற்றம் வரலாம்.
ஏழு ஆண்டுகளாக விவாத களத்தில் இருந்த ஒரு விஷயம், முடிவுக்கு வந்தது, வரவேற்கத்தக்கது. போதிய மருத்துவ வசதிக்கான அதிக காப்பீடு பற்றி அரசு முயற்சிக்கும் காலத்தில், இத்தீர்ப்பு, நமது சமுதாயத்தில் சிலர், மேல்நாடுகளில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப எளிதான சட்ட நடைமுறைகளுடன் வாழலாம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

Source:Dinamalar

No comments:

Post a Comment