Saturday, March 24, 2018

நடந்தாய் வாழி காவிரி...

நீண்ட நாட்களாக நடந்த, காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் அளித்த தீர்ப்பு, பல்வேறு விவாதங்களுக்கு தீர்வாகும்.முதலாவதாக, இனி, காவிரி நீர்ப் பங்கீடு விஷயத்தில், 'காவிரி தேசிய நதி; இதில், எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாடுவதற்கு இல்லை' என்பது, சிலப்பதிகாரம் படைத்த இளங்கோ அடிகளின், 'நடந்தாய் வாழி காவிரி' என்ற, வாசகத்தை மெய்ப்பித்திருக்கிறது.ஏனெனில், முந்தைய கால மைசூர் மன்னருடன் மேற்கொண்ட ஒப்பந்தம், அதற்குப் பின், 1991ல், காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு, 2016ல், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட பின் எழுந்த அமளி, பதற்றம் ஆகியவை, இனி குறையலாம்.தவிரவும், காவிரியில், இனி புதிய அணைகள் கட்ட தடை வந்தது, தமிழகத்திற்கு நல்லது. இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, காவிரியில் வழக்கமாக வரும் தண்ணீர் அளவு, கர்நாடக மாநிலத்தின் தேவை, தமிழகத்தின் தேவை ஆகியவை முறையே நிபுணர்களால் பரிசீலிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் வழக்கறிஞர்கள் நடத்திய வாதங்கள் என்று, பல்வேறு ஆவணங்களுடன் கூடிய தகவல்கள் ஆதாரம் ஆக்கப்பட்டிருக்கின்றன.ஏற்கனவே அளித்த உத்தரவுப்படி, 10 மாதத்தில், ஆண்டு தோறும், 192 டி.எம்.சி., தண்ணீர் தமிழகத்திற்கு விட வேண்டும் என்பது, தற்போது, 177.25 டி.எம்.சி., என, அறிவிக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகத்திற்கு, 284.75 டி.எம்.சி.,யும், கேரளாவிற்கு, 30 டி.எம்.சி.,யும், புதுச்சேரிக்கு, 7 டி.எம்.சி.,யும் தண்ணீர் கிடைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை, லோக்சபா அனுமதி பெற்று அறிவிக்க வேண்டியதில்லை. இதற்கு சில முன்னுதாரணங்கள் உள்ளன. மத்திய அரசு, இம்மேலாண்மை வாரியத்தை விரைவில் அமைக்கும் பட்சத்தில், தமிழகத்திற்கு பலன் எளிதாக கிடைக்கும்.தமிழகத்தில் நிலத்தடி நீர் இருப்பதால், 10 டி.எம்.சி., அளவு குறைக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகத்தில், மாண்டியா உட்பட பல இடங்களில், இந்த வாய்ப்பு இல்லை. தவிரவும், பெங்களூரு நகருக்கு குடிநீராக, 4 டி.எம்.சி., காவிரி நீர் தரப்படுகிறது.பொதுவாக, காவிரி நீர், டெல்டா விவசாயத்திற்கு மட்டும் இன்றி, 10க்கும் மேற்பட்ட நம் மாவட்டங்களுக்கு, தாகம் தீர்க்கவும் பயன்படுகிறது. சென்ற ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டு, மேட்டூர் அணை வறண்டதும், டெல்டாவில் பசும்பயிர் இல்லாமல் தரிசாக இருந்ததும், அதை முன்னிட்டு, டில்லி வரை விவசாயிகள் சென்று போராடியதையும் அறிவோம்.இந்தத் தீர்ப்பை, காவிரி டெல்டா பற்றிய, அதிக விபரங்களை அறிந்த, விவசாயி ரெங்கநாதன் மற்றும் செல்லச்சாமி தலைமையிலான விவசாய சங்கம் வரவேற்றிருப்பது சிந்திக்கத்தக்கது.எப்படி , 20 ஆண்டுகளில் கர்நாடகம் காவிரிப் பகுதியில், அதிக பாசனப் பரப்பை ஏற்படுத்தியதோ, அந்த மாதிரி தமிழகத்தில் டெல்டா பகுதிகளில், ஓரளவு அதிகமாக பாசனப்பரப்பு ஏற்பட்டிருக்கிறது. நெல் பயிரிட்டால், ஒரு கிலோ விளைய, 70 லிட்டர் வரை தண்ணீர் தேவை. பம்புசெட்டுகள் பயன்பாடு மூலம், அதிக அளவு மேல்மட்ட தண்ணீரையும் உறிஞ்சி இருக்கிறோம். அதிக அளவு யூரியா போன்ற உர உப்புகள், மண்ணின் சத்துக்களை பாதித்திருக்கின்றன.காவிரி டெல்டா விவசாயத்தில் நீர் மேலாண்மை, அதிக அளவு விவசாயத் தொழிலாளர்கள் இல்லாத வழிமுறைகள் தேவை என்ற கருத்தை, வேளாண் விஞ்ஞானி, சுவாமிநாதன் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தவிரவும், 110 நாளுக்குள், கதிர் அறுவடை ஆகும் புதிய நெல் வகை, மாற்றுப் பயிர் விவசாயம் என்ற பல புதிய அணுகுமுறைகள்.இவற்றை அமல்படுத்தினால், பயிர்க் காப்பீட்டு திட்டம் மூலம் விவசாயிகள் அதிகம் பயனடையலாம். தவிரவும், மத்திய அரசின் அதிக பட்ச ஆதரவு விலை, நடைமுறைக்கு வந்தால், விவசாயிகள் துயர் குறையும்.இதுவரை, தி.மு.க., அரசு மேற்கொண்ட அணுகுமுறைகளைத் தாண்டி, அ.தி.மு.க., சில விஷயங்களை, நீதிமன்றம் வரை கொண்டு சென்றிருக்கிறது என்ற அரசின் கருத்தை மறுப்பதற்கு இல்லை. முதலில், தற்போது அறிவிக்கப்பட்ட தண்ணீர், தமிழகத்திற்கு முறையாக கிடைக்க வழி தேவை. சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள கர்நாடக அரசு, இத்தீர்ப்பை வரவேற்றிருப்பதும், பின்னணியாக குறிப்பிடத்தக்கது. ஆனால், மழை வஞ்சிக்கும் காலங்களில் எப்படி பகிர்ந்து கொள்வது, அதிக வெள்ளம் வரும் போது, அதை வீணாக்காமல் இருப்பதும் முக்கியமானது. தமிழக கட்சிகள், அரசியலில் முகம் காட்ட நினைக்கும் நடிகர்கள் ஆகியோர், தீர்ப்பை எதிர்த்துள்ளனர். இந்த வாதங்களில் ஏற்படும் தெளிவுகள், டெல்டா விவசாயிகளை காப்பாற்ற உதவட்டும்.


Source:Dinamalar

No comments:

Post a Comment