Tuesday, December 28, 2010

வருமுன் காப்போம்!

ஆண்டுதோறும் மழைக்காலத்தின்போது தமிழகம் வெள்ளக்காடாவதும், மழை வெள்ளத்தில் விவசாயப் பயிர்களும், வீடுகளும் மூழ்கிச் சேதமடைவதும் வாடிக்கையாகிவிட்டது. வழக்கம்போல இந்த ஆண்டும் மழை வெள்ளத்தால் தமிழகமே மிதந்தது.

குறிப்பாக, சென்னை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. லட்சக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் குழு கணக்கிட்டு, நிவாரண உதவி வழங்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

கோடைகாலத்தில் வறட்சியில் சிக்கித் தவிப்பதும், மழைக்காலத்தில் வெள்ளத்தில் மூழ்குவதுமான நிலைமை, தமிழகம் போன்ற அருமையான புவியமைப்பைக் கொண்டுள்ள மாநிலத்துக்குத் தகுமா? இயற்கையின் சீற்றத்தைத் தணிக்காமல் மேலும் சீண்டிப் பார்க்கும் வேலையைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

ஒவ்வோராண்டும் மழைக்காலத்துக்குப் பின்னர் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புப் பணிகள் குறித்து அக்கறை காட்டும் அரசு, அதற்கு முன்னரே மழை வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து போதிய அக்கறை காட்டுவதில்லை. அதன் விளைவுதான் இப்படி ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளச் சேதம்.

தமிழகத்தில் நீண்டகாலப் புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், பருவமழைக் காலங்களில் அப்படியொன்றும் அபரிமிதமாக மழை பெய்துவிடவில்லை. ஆண்டுக்கு ஆண்டு மழைப் பொழிவு குறைந்து கொண்டுதான் வருகிறது. இந்த ஆண்டு கொட்டித் தீர்த்த மழைகூட வங்கக்கடலில் ஏற்பட்ட புயல் சின்னத்தால்தானே தவிர, முற்றிலும் பருவமழையன்று.

ஒருசில நாள்களே பெய்தாலும், இந்த மழையால் ஊரே வெள்ளக்காடானது எப்படி? தொலைநோக்குப் பார்வையின்றி நீர்நிலைகளைக் கவனிக்காமல் விட்டதே இதற்குக் காரணம். எங்கு பார்த்தாலும் குளங்கள், கண்மாய்கள், ஏரிகளுக்குத் தண்ணீர் செல்லும் வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கிக் கிடக்கின்றன. ஒன்று அமலைச் செடிகள், முட்புதர்கள் என இயற்கையான ஆக்கிரமிப்பு; மற்றொன்று மனிதர்களால் ஏற்படுத்தப்படும் ஆக்கிரமிப்பு. இதனால், தண்ணீரின் போக்கில் தடை ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது.

மொத்தத்தில் ஆக்கிரமிப்பே மழைச்சேதத்தை அதிகமாக்கிவிட்டது. மழைச்சேதம் குறித்து ஆய்வு செய்ய வந்த மாநில மற்றும் மத்திய அதிகாரிகள் குழுவிடம் மக்கள் முறையிட்டதும் இதைப்பற்றித்தான்.

ஒருவழியாகத் தண்ணீர் வந்து சேர்ந்த குளங்களும் ஆண்டுக்கணக்கில் தூர்வாரப்படாமல், கரை பலப்படுத்தப்படாமல் இருந்ததால் மணல் மேடிட்டு, எளிதில் உடைப்பும் ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. கால்வாய்களின் நிலையும் இப்படித்தான். ஒருநாள் மழைக்குத் தாக்குப்பிடிக்காமல் கால்வாய்க் கரைகள் உடைந்ததால் வெள்ளம் வயல்களுக்குள் பாய்ந்து பயிர்களை மூழ்கடித்துவிட்டது.

நகர்ப்பகுதிகளில் இப்போதெல்லாம் அழகுக்குத்தானே முக்கியம் தரப்படுகிறது? சிங்காரச் சென்னை என்று இனிக்க இனிக்கச் சொன்னால் போதுமா? பாலங்களும், சாலைகளும் அழகாக இருந்தால் ஆயிற்றா? நகரில் மழைநீரை வெளியேற்றும் வடிகால்கள், ஓடைகள் சீராக இருந்தால்தான் அந்த நகரில் அடிப்படை உள்கட்டமைப்பு நன்றாக இருப்பதாக அர்த்தம். ஆனால், நகர்ப்பகுதியில் மழைநீர் வடிகால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, குப்பைகளைக் கொட்டும் கிடங்காக மாற்றப்பட்டு இருப்பதால், தண்ணீர் செல்ல வழியின்றி வீடுகளுக்குள் புகுந்தது.

இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? அந்தந்த நேரத்துக்குப் பிரச்னையைத் தீர்க்கும் வழியை மட்டும் பார்க்காமல், நிரந்தரமான தீர்வு குறித்து அரசு ஆலோசனை செய்ய வேண்டும். ஆண்டுதோறும் மழைச்சேதம் ஏற்படுவது இயல்புதானே என வாளாவிருக்காமல், நிரந்தர வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீவிரமாக முயற்சிக்க வேண்டும். மக்களுக்கு இலவசமாக என்னவெல்லாம் தரலாம் என்று யோசிப்பதைத் தவிர்த்துவிட்டு, தொலைநோக்குச் சிந்தனையுடன் நீண்டகாலப் பயன்தரும் திட்டங்கள் குறித்துப் பரிசீலிக்க வேண்டும்.

மழைச்சேதத்துக்கு நிவாரணம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யும்போதே, நிரந்தர வெள்ளத் தடுப்புத் திட்டத்துக்கும் ஓரளவு நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மழைச்சேதம் குறித்து இரண்டே நாளில் ஆய்வு செய்த "மின்னல் வேகத்தைப்'போல் அல்லாமல், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இதுகுறித்து ஆய்வு செய்யலாம்.

அரசு நிலங்கள்தான் இப்போது எளிதில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன. ஆற்றையே ஆக்கிரமித்துக் கரையில் விவசாயம் செய்பவர்கள் வாழும் காலமிது. இந்த ஆக்கிரமிப்பு குறித்து எங்கிருந்தோ ஆய்வுக்கு வரும் அதிகாரிகளைவிட, உள்ளாட்சி நிர்வாகங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை விடுங்கள், கால்வாய்களையும், குளங்களையும் ஆக்கிரமிக்கும் செயலையாவது தடுத்து நிறுத்தலாம் அல்லவா? வெள்ளம் வெளியேறும் வழியை அடைத்துவிட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது என்று சொல்வது என்ன நியாயம்?

இப்போது ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், பெரும்பாலும் குளங்களைத் தூர்வாரும் பணிதான் மேற்கொள்ளப்படுகிறது. அந்தத் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களைப் பயன்படுத்தி இதுபோன்று ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள நீர் வரத்துக் கால்வாய்களைக் கண்டறிந்து தூர்வாரினால் மழைக்காலத்தின்போது மிகுந்த பயனளிக்கும். வந்த பின் துயருருவதைவிட வருமுன் காப்பதுதானே நலம்!

No comments:

Post a Comment