Monday, December 27, 2010

கனிந்து வரும் "மா'

உலகிலேயே அதிகளவு மாம்பழம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா மட்டுமே. ஆண்டுக்கு 125 லட்சம் டன் மாம்பழம் உற்பத்தியானபோதிலும், ஏற்றுமதி செய்யப்படும் அளவு 1 விழுக்காட்டுக்கும் குறைவு. இப்போது 83 ஆயிரம் டன்களாக இருக்கும் ஏற்றுமதி அளவு அடுத்த நிதியாண்டில் (2010-11) 90 ஆயிரம் டன்களாக உயரும் (அதாவது 8 விழுக்காடு அதிகமாக இருக்கும்) என்று அபேடா (வேளாண் பொருள்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி ஆணையம்) எதிர்பார்க்கிறது.

தமிழ்நாட்டில் 2001-02-ம் ஆண்டில் 1.10 லட்சம் ஹெக்டேரில் மாம்பழம் சாகுபடி செய்யப்பட்டு, ஆண்டுக்கு 4.38 லட்சம் டன்கள்தான் உற்பத்தியானது. 2006-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி 1.62 லட்சம் ஹெக்டேரில் 9 லட்சம் டன்கள்தான் உற்பத்தி செய்கிறோம். ஆனால் ஆந்திரமும், உத்தரப் பிரதேசமும் நம்மைவிட நான்கு மடங்கு உற்பத்தி செய்கின்றன.

தமிழகத்தைப் பொருத்தவரை முக்கனி என்று சொன்னால் அவை மா, பலா, வாழை. அந்த அளவுக்கு மாம்பழத்தின் புகழ் இருந்தாலும், இந்திய அளவில் தமிழகத்தின் உற்பத்தி என்ன என்று பார்த்தோமேயானால், முதல் 5 இடத்தில்கூட தமிழகம் இடம்பெற முடியவில்லை. ஏன் இந்த நிலை? என்றால் நம் பலத்தை நாம் அறியவில்லை அல்லது நம் தமிழர்களுக்கு அறிவிப்பார் யாருமில்லை.

பொங்கினால் புளி, மங்கினால் மாங்காய் என்பது தமிழர் வழக்கம். அதாவது மழை மிக அதிகமாகப் பெய்தால் புளி அதிகமாகக் காய்க்கும். வெயில் அதிகமாக இருந்தால் மாங்காய் மற்றும் மாம்பழ விளைச்சல் அதிகமாக இருக்கும். இந்த அளவுக்கு அனுபவ ஞானம் இருந்தாலும்கூட, மாம்பழத்துக்கான சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தவும், தானே முன்னின்று செயல்படுத்தவும் தமிழக அரசு இத்தனை காலம் தயங்கி நின்றதால் தமிழகத்திலிருந்து மாம்பழ ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் எடுபடாமலேயே போய்விட்டன.

உலகச் சந்தையில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில். உணவு மேசையில் வைக்கக்கூடிய சுவையான பழங்களில் மாம்பழமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்போது தமிழக அரசு ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதாவது இஸ்ரேல் நாட்டின் வேளாண் துறையின் பழமரங்கள் துறை அதிகாரிகளை சேலத்துக்கு அழைத்து வந்து, அவர்களது தொழில்நுட்பத்தைச் சொல்லித் தரும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இப்போதாகிலும் இப்படியொரு முயற்சி செய்யப்பட்டுள்ளதே என்பதற்காக தமிழக அரசைப் பாராட்டத்தான் வேண்டும்.

இஸ்ரேல் நாட்டின் வல்லுநர்கள் சேலம் மட்டுமன்றி மாம்பழம் எங்கெல்லாம் தமிழகத்தில் சாகுபடி செய்யப்படுகிறதோ அந்த இடங்களுக்குச் சென்று, விவசாயிகளிடம் இஸ்ரேலிய தொழில்நுட்ப அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்கள். இதன் மூலம் ஒரு ஹெக்டேருக்கு விளையும் மாம்பழத்தின் டன் அளவு அதிகரிக்கும். இப்போது தமிழ்நாட்டில் ஒரு ஹெக்டேருக்கு 5.52 டன் மாம்பழ விளைச்சல்தான் உள்ளது. இது சராசரி இந்திய அளவான ஒரு ஹெக்டேருக்கு 6.2 டன் என்பதைவிட குறைவு. இதற்குக் காரணம், மாம்பழச் சாகுபடியில் நாம் புதிய சாகுபடி முறைகளைக் கையாளத் தவறிவிட்டோம் என்பதுதான்.

இஸ்ரேலில் மொத்தம் சுமார் 2,000 ஹெக்டேரில்தான் மாம்பழச் சாகுபடி நடைபெறுகிறது என்பதும், அங்கே ஒரு ஹெக்டேருக்கு 25 முதல் 30 டன்கள் வரை மாம்பழம் விளைகிறது என்பதையும் இஸ்ரேலிய நாட்டின் வேளாண் அலுவலர்கள் சொல்லும்போது நமக்கு வியப்பாக இருக்கிறது.

அதே அளவுக்கு உற்பத்தி தமிழ் மண்ணிலும் கிடைக்கும் என்பது உறுதியில்லை. ஆனால், ஒரு ஹெக்டேருக்கு சில டன்கள் விளைச்சல் அதிகரித்தாலும்கூட, மிகப்பெரும் பொருளாதார வளர்ச்சியை மாம்பழ வியாபாரிகள் பெற முடியும். மேலும், இந்த மண்ணில் விளையும் பழங்களுக்கு அரிய சுவையும் மணமும் உள்ளது என்பதுதான் சிறப்பு. இந்தச் சிறப்பை இழக்காமல், விளைச்சலை மட்டும் மேம்படுத்தும் தொழில்நுட்பத்தைத் தேர்வு செய்யவேண்டும். மேலை நாடுகளில் உரம்போடாத மரங்களில் விளையும் பழங்களுக்குக் கூடுதல் விலை கிடைக்கும் என்பதால் அத்தகைய பூச்சிமருந்து இல்லா மாம்பழ உற்பத்திக்கும் ஊக்கப்படுத்த வேண்டும்.

உத்தரப் பிரதேசத்தில் விளையும் துஷேரி ரக மாம்பழம் உலக அளவில் அங்கீகாரம் பெற்றிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் அத்தகைய ஓர் அடையாளத்தை ஏற்படுத்துவதில் நாம் பின்தங்கிவிட்டோமோ என்றே தோன்றுகிறது.

உ.பி., பிகார் மாநிலங்களில் சில கிராமங்களில் இப்போதும்கூட ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்தவுடன் ஒரு மா மரம் நடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். 15 ஆண்டுகளில் அந்த மரத்தில் மாம்பழம் கிடைக்கத் தொடங்கிவிடும். அந்தப் பணத்தை அப்படியே சேமிப்பாக வைத்து, அப்பெண் குழந்தையின் கல்யாணத்தை முடித்துவிடுவதால், அந்தக் கிராமங்களில் பெண்குழந்தைகள் பிறந்தால் யாரும் கவலைப்படுவதே இல்லை என்ற செய்தியைப் படிக்கும்போது, நம் கிராமங்களில்-ஏன் இந்த நிலைமை ஏற்படவில்லை என்று எண்ணத் தோன்றுகிறது.

மாங்காயை மிக மலிவாக வாங்கி அவற்றை ரசாயனக் கல் வைத்துப் பழுக்க வைத்து சந்தையில் விற்கும் பேராசை வியாபாரிகளிடம் சிக்கியுள்ள மா சாகுபடியாளர்களுக்கு, பழமாக விற்கவும், பிரத்யேகமான பழ மரங்களைச் சாகுபடி செய்யவும் ஊக்கப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. இப்போது புதிய தொழில்நுட்பத்தைக் கைக்கொள்ளும் விவசாயிகள் பலனைக் காண்பதற்கு 10 ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அதற்குள்ளாக மாம்பழ ஏற்றுமதி, மாம்பழக்கூழ் தொழில்கள் பற்றிய அறிவை நம் மா சாகுபடியாளர்களிடம் ஏற்படுத்தவும் வேண்டும்.

No comments:

Post a Comment