Tuesday, December 28, 2010

விளையாட்டுத் துறையின் எதிர்காலம்

ஒலிம்பிக் போட்டியானாலும், காமன்வெல்த் போட்டியென்றாலும் அல்லது ஆசிய விளையாட்டுகளானாலும் சரி, பதக்கப்பட்டியலில் முன்னணியில் வரும் நாடுகளை உலக அரங்கில் பிரமிப்போடு பார்ப்பது என்பது சகஜமான ஒன்றாகும். ஒரு நாட்டின் பொருளாதாரத் தகுதிநிலையை பதக்கங்களின் எண்ணிக்கை தீர்மானிப்பதில்லை என்றாலும்கூட, அந்த நாட்டின் கெüரவத்தை நிலைநிறுத்துகிற காரணியாக இது பார்க்கப்படுகிறது.

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் கிடைத்ததில் மகிழ்ச்சியும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆறாவது இடம் கிடைத்திருப்பதில் ஓரளவு மனநிறைவும் நமக்கு ஏற்பட்டுள்ளது.

இது 2012-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியை நம்பிக்கையோடு எதிர்நோக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.

ஒரு விளையாட்டு வீரனை உருவாக்குவதில் பல்வேறு காரணிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒரு குழந்தை வளரும் சூழலை சமூகமயமாதல் என்று சமூகவியலார் கூறுகின்றனர். ஓர் உயிரினமாக இவ்வுலகுக்கு வரும் மனிதனை மனிதனாக மாற்றுவது அவன் பிறந்து வளரும் குடும்பச் சூழலேயாகும். குடும்பம் எனும் சமூகநிறுவனத்தின் மூலமாகவே அவன் சில மனப்பான்மைகள், விழுமியங்கள், நம்பிக்கைகள் இவற்றைப் பெறுகிறான்.

தன்னம்பிக்கை, விடாமுயற்சி, அரவணைத்து அன்பு பாராட்டுதல், பெரியவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்தல் போன்ற தன்மைகள் குழந்தைகளுக்கு வளரும் பிராயத்தில் கிடைக்குமேயாயின் அவர்கள் சாதனையாளர்களாக மிளிர வாய்ப்புகள் அதிகம். தேவையற்ற பயஉணர்வு, எளிதில் மனந்தளர்தல், விரக்திமனப்பான்மை, எதிர்மறைச் சிந்தனைகள் போன்ற தன்மைகள் கொண்ட பெற்றோர்களின் குழந்தைகள் அவர்களைப் போலவே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சாதனை உணர்வு மற்றும் ஊக்கம் போன்றவை தன்னம்பிக்கைமிக்க குடும்பச் சூழலில் உருவாகும் ஒன்றாகும். இவ்வகைக் குடும்பங்களில் எப்படியாவது வென்றாக வேண்டும் எனும் உணர்வு குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்கப்படுகிறது. இந்த இயல்புகளின் பின்னணியில்தான் சிறந்த விளையாட்டு வீரர்கள் உருவாகிறார்கள். ஆண் குழந்தைகள் மட்டுமல்லாது பெண் குழந்தைகளும் விளையாட்டுப் போட்டிகளில் முழுமனதோடு பங்கேற்கும் நிலையை பள்ளிகள் உருவாக்க வேண்டும். பெண் குழந்தைகளைப் பொறுத்த அளவில் இந்த ஊக்குவிக்கும் முயற்சி மிகமிகக் குறைவாகவே உள்ளது.

சாதனையாளர் என்ற வகையில் ஒரு விளையாட்டு வீரனோ அல்லது வீராங்கனையோ வளரும் சூழலில் உளவியலின் பங்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பது புலனாகிறது. ஆங்கிலத்தில் இப்படியொரு பழமொழி உண்டு. Half the game is played in mind என்பதே அது. மனதளவில் ஒரு நிகழ்வுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதையும் வெற்றிக்குத் திட்டமிடுதலையுமே இப்பழமொழி உணர்த்துகிறது.

அடுத்ததாக ஒருவிளையாட்டு வீரனின் வாழ்க்கையில் ஊட்டச்சத்துள்ள உணவின் முக்கியத்துவத்தை யாரும் மறுக்க இயலாது. விளையாட்டில் வெல்வதற்கு மனவலிமை எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு உடல்வலிமையும் முக்கியமானது. திடகாத்திரமான உடல் இல்லாத மக்கள் எந்த அளவுக்கு, உடல்வலிமையைப் பயன்படுத்தி வெல்லவேண்டிய தடகளம், குத்துச்சண்டை, வட்டு எறிதல் போன்ற போட்டிகளில் துடிப்பாகப் பங்கேற்க இயலும்? உடல் வலிமைக்கு அடிப்படைக்காரணி ஊட்டச்சத்துமிக்க உணவாகும். இத்தகைய சூழலில் ஒரு நாளிதழில் வெளியான செய்தி நமது சிந்தனைக்கு உரிய ஒன்றாகிறது.

காமன்வெல்த் நாடுகளில் மிக அதிக எண்ணிக்கையில் எடை குறைந்த நிலையில் உள்ள குழந்தைகளைக் கொண்ட நாடு இந்தியா என்பதே அச்செய்தி. இந்தியக் குழந்தைகளில் 43 விழுக்காடு குழந்தைகள் குறைந்த எடையுடன் இருப்பதாகவும், 5 வயதுக்குள்பட்ட பல லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், எதிர்காலத்தில் காமன்வெல்த் விளையாட்டு போன்ற போட்டிகளில் பிரகாசிக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு எனவும் save the children எனும் அமைப்பின் தலைமை நிர்வாகி தாமஸ்சாண்டி கூறுவதாகச் செய்தியாளர் ஆர்த்தி தார் குறிப்பிடுகிறார்.

ஒரு விளையாட்டுப் போட்டியை உடல், உரம், திறமையின் வெளிப்பாடு என்று கொண்டாடுகிற அதேவேளையில் நம் குழந்தைகளின் இளம் பிராயத்தின் முதல் இரண்டு ஆண்டுகளில் சத்துள்ள உணவைக் கொடுக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் ஆர்த்தி தார். கரு உருவான காலத்திலிருந்து குழந்தையின் இரண்டாம் பிறந்தநாள் வரை ஏறத்தாழ முதல் 33 மாதங்கள்வரை சத்துக்குறைவான உணவு கொடுக்கப்படுமேயாயின் அது நிவர்த்திக்க இயலாத தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் இச்செய்தியாளர்.

கிராமப் பகுதிகளில் மட்டுமன்றி, நகரங்களிலும்கூட குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டிய சத்தான உணவு வகைகள், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள் அடங்கிய, குறைந்த விலையில் கிடைக்கும் உணவுப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நலிவுற்றோர் மற்றும் மத்தியதர வர்க்கத்தினரிடையே ஏற்படுத்தப்படும் இந்த விழிப்புணர்வு மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்தியாவில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பங்களிலிருந்துதான் பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் உருவாகின்றனர். நமது விளையாட்டு வீராங்கனைகள் குறித்து சமூக ஆராய்ச்சி மையத்தின் அஞ்சுதுபே பாண்டே என்பவர் வெளியிட்ட கருத்து குறிப்பிடத்தக்கது. ஆச்சரியப்படும் வகையில் பெரும்பாலான விளையாட்டு வீராங்கனைகள் மிகவும் சாதாரணமான பின்புலத்தைச் சார்ந்தவர்களென்றும், ஆனால் அவர்கள் பெற்ற வெற்றி அவர்களின் மனஉறுதி மற்றும் உண்மையான மகளிர் வலிமையின் வெளிப்பாடு எனவும் காமன்வெல்த் போட்டிகளில் வெற்றியடைந்த வீராங்கனைகளைப் பற்றி குறிப்பிடுகிறார் அஞ்சுதுபே பாண்டே. சர்வதேச அளவில் இந்தியப் பெண்கள் பெறும் வெற்றி, மீண்டும் மீண்டும் அவர்கள் வெளிப்படுத்தும் போட்டியுணர்வு ஆகியன மகளிர் மேம்பாட்டில் மூலதனம் செய்வதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது எனவும் கூறுகிறார். இச்சூழலில் பள்ளிகள் மற்றும் மாவட்ட, மாநில அளவில் விளையாட்டில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் உணவில் பெற்றோரும், வழிகாட்டிகளும், பயிற்றுநர்களும் கவனம் செலுத்தும்போது மிகப்பெரும் சாதனைகள் நம் வசப்படும் என்பது உறுதி.

மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் பேசக்கூடிய துறைசார்ந்த வல்லுநர்களை அழைத்து கருத்தரங்கங்கள், பயிலரங்கங்கள் இவற்றை நம்முடைய ஊரகங்களில் ஏற்பாடு செய்வதன் மூலமாகவும் நிச்சயமாக நல்ல விளைவுகளை எதிர்பார்க்க முடியும்.

பொதுமக்கள் கூடுமிடங்களான சமுதாயக் கூடங்கள் போன்றவற்றில் சத்துணவு உள்ளிட்ட செய்திகள் அடங்கிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம். நம்முடைய சூழலுக்கு ஏற்றவாறு கதையம்சத்துடன் கூடிய செய்திப்படங்கள், கேளிக்கைகளுடன்கூடிய செய்தி நாடகங்கள் இவைகள் மூலமாக ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவர இயலும். "மாதா ஊட்டாத சோற்றை மா ஊட்டும்' என்று சொல்வதைப்போல வார்த்தைகளால் மட்டுமே இயலாத ஒன்றைப் படங்களின் மூலமாகக் கொண்டு செல்ல இயலும். இதைத்தான் ஆங்கிலத்தில் A picture is worth thousand words என்று சொல்வார்கள். நம்பிக்கையோடு முயற்சிப்போம். விளையாட்டுத் துறையில் சாதிப்போம்!

No comments:

Post a Comment