Monday, January 3, 2011

சில்லறை வணிகம் - மாறுபட்ட கோணத்தில்!

உலகில் சந்தை வியாபார அமைப்பை உருவாக்கிய முன்னோடி சமூகங்களில் ஒன்று இந்திய சமூகம். நம்முடைய வர்த்தக அமைப்பு எல்லா காலகட்டங்களிலும் அமைப்புசாரா சில்லறை வியாபாரக் கட்டமைப்பாகவே இருந்திருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகத்தில் தொடங்கி வரலாற்றின் எந்தப் பகுதியிலும் இதற்கான சான்றுகளை நம்மால் பார்க்க முடியும். சங்க காலத் தமிழ் இலக்கியமான "மதுரைக்காஞ்சி'யில் வரும் ஒரு பாடல் வீதிகளில் பலவகைப் பொருள்கள் விற்போரும், ஒருவர் காலோடு ஒருவர் கால் பொருந்துமாறு நெருக்கமாக நின்று விற்பனையில் ஈடுபட்டிருந்ததைக் குறிப்பிடுகிறது. இன்றளவும் அந்த மரபு நீடிக்கிறது.

விவசாயத்துக்கு அடுத்த நிலையில் } ஏறத்தாழ 5 கோடிப் பேருக்கு } வேலை அளிக்கும் களமாக அமைப்புசாரா சில்லறை வியாபாரத் துறையே இருக்கிறது. சுமார் | 1.5 லட்சம் கோடி புரளும் இத்துறை, இந்திய வர்த்தகத்தில் 95 சதவீதத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதில் முறைசார் வியாபாரத்தின் பங்கு வெறும் 3 சதவீதம்தான். ஆனால், இந்த வரலாறு எல்லாம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும்?

நாம் இப்போது சில்லறை வியாபாரத்தில் வேர்விடும் பெருநிறுவனங்களை விமர்சிக்கிறோம். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்று புதிய பொருளாதாரக் கொள்கையின் கேடுகளைத் திரும்பத்திரும்பப் பேசுகிறோம். ஆனால், புதிய பொருளாதாரக் கொள்கை அமலாக்கப்பட்டதற்குப் பின் பிறந்த ஒரு தலைமுறை இப்போது வளர்ந்துவிட்டது. அடுத்த சில ஆண்டுகளில் நாட்டின் அடுத்தகட்டத்தைத் தீர்மானிக்கும் அளவுக்கு அது தயாராகிக் கொண்டிருக்கிறது. நாம் ஏன் இதைக் கவனிக்கவில்லை?

ஆமாம், நம்முடைய புதிய பொருளாதாரக் கொள்கைக்கு வயதாகிவிட்டது. இப்போது அது வெறும் கொள்கை அல்ல; அது ஒரு சமூக அறிவியலாக வளர்ந்து நிற்கிறது. இனியும் நாம் அதைப் "புதிய' என்று குறிப்பிடுவதும் "கொள்கை' என்ற அளவிலுமே பார்ப்பது அபத்தமானது. நாம் பின்தங்கிக் கொண்டிருக்கிறோம் அல்லது அது நம்மைக் கடந்து கொண்டிருக்கிறது. இனியும், நாம் நம்முடைய பாரம்பரிய வணிக அமைப்பையும் பொருளாதாரத்தையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் நாம் நம்மைத் தயாராக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

சுதேசி உணர்வுடைய நம்மில் பலர் பெருநிறுவனக் கடைகளை வெறும் கடைகளாகப் பார்ப்பதில்லை. நமக்குப் பிடிக்காத பொருளாதாரக் கொள்கையின் நேரடிச் சின்னங்களில் ஒன்றாகவே பார்க்கிறோம். அதனாலேயே அவற்றைப் புறக்கணிக்கிறோம். பொருள்களின் விலை கொஞ்சம் அதிகம் என்றாலும், சற்றுக் கூடுதல் தொலைவாக இருந்தாலும், பொருள்களின் தரம் முன்பின் இருந்தாலும் சிறு வியாபாரிகளைத் தேடுவதை நம்மில் பலர் ஓர் ஒழுக்கமாகவும் கடைப்பிடிக்கிறோம். சரி, நாம் இப்படி இருக்கிறோம்; நாளை நம் பிள்ளைகள்?

நம்முடைய பாரம்பரிய வணிக அமைப்பையும் பொருளாதாரத்தையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று பேசுவோர் யாவரும் ஒரு பெரிய தவறைச் செய்கிறோம்; நம்முடைய பழைய அமைப்பில் உள்ள பலகீனங்களைப் பேச மறுக்கிறோம். மறைமுகமாக தரத்தில் சமரசம் பேசும் உத்தி இது. நுகர்வோரின் தரப்பிலிருந்து பார்க்கும்போது இது அநீதியும்கூட.

யோசித்துப் பாருங்கள். சந்தையில் நிற்கும் சில்லறை வியாபாரிகள் எவரிடமாவது நம்மால் கால் கிலோவுக்குக் குறைந்து காய், கனிகளை வாங்க முடிகிறதா? அப்படிக் கேட்போருக்கு சில்லறை வியாபாரிகள் கொடுக்கும் மரியாதை எப்படி இருக்கிறது? சுத்தம், சுகாதாரத்தில் நம்முடைய சிறு வியாபாரிகளின் அக்கறை என்ன? தெருவோர உணவகங்களில் குடிக்கக் கொடுக்கப்படும் தண்ணீரின் தரம் எப்படி இருக்கிறது?

யோசித்துப் பாருங்கள், நீண்டகாலம் பால் வியாபாரம் சில்லறை வியாபாரிகளான பால்காரர்கள் கைகளில்தான் இருந்தது. இப்போதோ கிராமங்களில்கூட கறவைப் பால் அரிது. காரணம் என்ன? மக்கள் எல்லோரும் ஏன் "பாக்கெட்' பாலுக்கு மாறினார்கள்? காரணம் பொருளாதாரக் கொள்கையும் பெருநிறுவனங்களும் மட்டும்தானா? பால்காரர்களின் தண்ணீர் கலப்படமும் அதற்கு ஒரு காரணம் இல்லையா?

யோசித்துப் பாருங்கள். இன்றைக்கு மீன் வியாபாரம் முழுமையாக சில்லறை வியாபாரிகளிடமே இருக்கிறது. மீன் வாங்கத் தெரியாத ஒரு நுகர்வோர் நல்ல மீன்களை சந்தையில் வாங்கி வருவது சாத்தியமானதாகத்தான் இருக்கிறதா? முதல் நாள் பிடிக்கப்பட்டு மறுநாள் காலையில் கெட்டுவிடும் மீன்கள், திறந்த நிலையிலேயே சந்தையில் மாலை வரை விற்கப்படுகின்றனவே இது சரிதானா? நாளை மீன் வியாபாரத்தையும் பெருநிறுவனங்கள் சுருட்டினால் அதற்குப் பொருளாதாரக் கொள்கையும் பெருநிறுவனங்களும் மட்டுமே காரணமாக இருக்குமா?

இந்த நாட்டில் எந்தத் துறையினரிடமும் இன்றைக்கு அறவுணர்வு கிடையாது. விளிம்பு நிலையிலிருக்கும் சில்லறை வியாபாரிகளிடம் மட்டும் அதை எதிர்பார்ப்பது அநீதியாக இருக்கலாம். ஆனால், தரமும் வாடிக்கையாளர் அணுகுமுறையும் அப்படி அல்ல. அவை வியாபாரத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான காரணிகளாக மாறிக்கொண்டிருக்கின்றன.

சில்லறை வியாபாரத்தில் பெருநிறுவனங்கள் வளர்ந்தால், நாளை நாட்டின் வேளாண்மையையும் விலைவாசியையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக அந்நிறுவனங்கள் உருவெடுக்கும். சரிதான். ஆனால், மளிகைச் சாமான்கள் வாங்கச் செல்லும் ஒரு சாதாரண நுகர்வோர் இதையெல்லாம் யோசித்துப் பெருநிறுவனங்களைப் புறக்கணிப்பார் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். போட்டிக்கு நாமும் தயாராக வேண்டும்.

சரியாகச் சொல்வதானால், நம்முடைய பாரம்பரிய வணிக அமைப்பையும் பொருளாதாரத்தையும் தக்கவைத்துக்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதுவரை நாம் நுகர்வோரிடம் பேசிக்கொண்டிருந்தோம். இனி, வியாபாரிகளிடமும் பேசுவதே பொருத்தமானதாக இருக்கும்!

No comments:

Post a Comment