Wednesday, August 8, 2012

கயிற்றின் மேல் நடக்கும் ரிசர்வ் வங்கி!

            பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் டி. சுப்பாராவ் ஜூலை 31-ம் தேதி வெளியிட்ட நிதி, கடன் கொள்கை பரபரப்பானதாக இல்லாவிட்டாலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
ரிசர்வ் வங்கி கவர்னர் "ரெப்போ ரேட்'டையோ (வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகாலக் கடனுக்கான வட்டி விகிதம்) அல்லது சி.ஆர்.ஆர். (வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு) விகிதத்தையோ மாற்றவில்லை.
ஆனால், எவரும் எதிர்பார்க்காத ஒன்றைச் செய்திருக்கிறார் கவர்னர். எஸ்.எல்.ஆர். (வங்கிகள் திரட்டுகிற டெபாசிட் தொகையில் கட்டாயமாக அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டிய தொகை) ஒரு சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்திருக்கலாம். ரெப்போ ரேட், ரிவர்ஸ் ரெப்போ ரேட், சி.ஆர்.ஆர். ஆகியவற்றை ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றுவதுண்டு. ஆனால் எஸ்.எல்.ஆரை, அத்திப்பூ பூத்தாற்போல், எப்போதாவது ஒருமுறைதான் மாற்றும்.
ஆக, "ரெப்போ ரேட்' 8 சதவிகிதமாகத் தொடரும். வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய கையிருப்பு தொகை 4.75 சதவிகிதம் என்கிற அளவிலேயே நீடிக்கும். டெபாசிட் தொகையில் ஒரு பகுதியை வங்கிகள் அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டிய அளவு, 24 சதவிகிதத்திலிருந்து 23 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய நடவடிக்கைகளின் விளைவு: வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையாது. இதனால் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் கடன்களுக்கான வட்டியும் குறையாது.
அதேபோல், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய கையிருப்புத் தொகை (சி.ஆர்.ஆர்) 4.75 சதவிகிதமாகவே தொடருவதால், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்குவதற்காக உள்ள நிதி ஆதாரத்தில் மாற்றம் இருக்காது.
இந்த நடவடிக்கைக்கான பின்னணி என்னவெனில், இப்போதுள்ள பணவீக்கச் சூழலில் வட்டி விகிதத்தைக் குறைப்பதன் மூலம், குறிப்பிடும்படியான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
அதேநேரம், வட்டி குறைந்தால், மேலும் பணவீக்கம் அதிகரிக்கவே செய்யும். எனவே, நீண்டகால அளவில், பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, மேற்கூறிய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், அரசுப் பத்திரங்களில் வங்கிகள் முதலீடு செய்ய வேண்டிய அளவு ஓசைப்படாமல் 24 சதவிகிதத்திலிருந்து 23 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு சதவிகித குறைப்பின் பயனாக, வங்கிகளின் ஒட்டுமொத்த நிதி ஆதாரம், அதாவது கையிருப்பு, ரூ. 60,000 கோடி அளவுக்கு அதிகரிக்கும்.
இதன் பயனாக, பொதுமக்களுக்கு இரண்டு நன்மைகள் ஏற்படும். ஒன்று, வங்கிகளின் கையிருப்பு அதிகரிப்பதால், வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன், தொழில் கடன், சிறுதொழில் கடன், விவசாயக் கடன் ஆகிய அனைத்து வகை கடன்களையும் தங்கு தடையில்லாமல் கொடுப்பதற்கு வங்கிகள் முன்வரும்.
இரண்டாவதாக, வங்கிகள் அரசுப் பத்திரங்களில் ரூ. 60,000 கோடியை முதலீடு செய்திருந்தால் அவர்களுக்கு சராசரியாக 7.5 சதவிகித வட்டிதான் கிடைத்திருக்கும். அந்தப் பணத்தை இப்போது வாடிக்கையாளர்களுக்குக் கடனாகக் கொடுப்பதால், வழக்கத்தைவிட சற்று குறைவான வட்டி வசூலிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
இதை பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ஏற்கெனவே கோடிட்டுக் காட்டியுள்ளார். இதே கருத்தை இந்திய வங்கிகள் சங்கத் தலைவரும் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் ரிசர்வ் வங்கியின் புதிய கொள்கை, வங்கிக் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மறைமுகமாக உதவியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கைக்கு இரண்டு முக்கிய நோக்கங்கள் உண்டு. ஒன்று பணவீக்கத்தையும் விலைவாசியையும் கட்டுக்குள் வைத்திருப்பது. இரண்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான வங்கிக் கடன்கள் கிடைப்பதற்கு வழி வகுப்பது.
ஆக, இந்த இரண்டு நோக்கங்களும் ஓரளவேனும் நிறைவேறும் வகையில் புதிய கடன் கொள்கை அமைந்துள்ளது. எனினும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சற்று கூடுதல் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்படை.
ரெப்போ ரேட்டைக் குறைத்திருந்தால், வட்டி விகிதம் மேலும் குறைந்து, வளர்ச்சிக்கு உத்வேகம் கிடைத்திருக்குமே என்று பலர் கருதுகிறார்கள். அப்படி நிகழாமல் போனதற்குக் காரணம் இதுதான். எதிர்பார்த்த அளவு பணவீக்கம் குறையவில்லை. இந்நிலையில் வட்டி விகிதம் குறைந்தால், பணப்புழக்கம் அதிகரித்துவிடும். அதன் விளைவாக, பணவீக்கமும் அதிகரித்துவிடும். விலைவாசி மேலும் அதிகரிக்கும். அப்படி நிகழாமல் தடுப்பதற்காகவே, வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை.
இதில், ஒரு நல்ல செய்தி என்னவெனில், வங்கி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் குறையாமல், இப்போதுள்ள நிலையிலேயே நீடிக்கும். பணியிலிருந்து ஓய்வுபெற்ற மூத்த குடிமக்களுக்கும், சேமிப்பாளர்களுக்கும், குறிப்பாக இல்லத்தரசிகளுக்கும் இது ஆறுதல் அளிக்கும். நாட்டின் பொருளாதார நிலையை ஆய்வு செய்கையில் ரிசர்வ் வங்கி நான்கு முக்கிய விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது. ஒன்று, ஏற்கெனவே குறிப்பிட்டபடி பணவீக்கம் எதிர்பார்த்த அளவு குறையவில்லை. மாறாக, அது வளர்முகத்தில் இருக்கிறது.
இரண்டாவது, நடப்பாண்டில் பருவமழை சாதகமாக இல்லை. சராசரி அளவுக்குக் குறைவாகவே மழை பொழிந்துள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே சீராக மழை பொழியவில்லை.
மூன்றாவது, நிதிப் பற்றாக்குறை மற்றும் நடப்பு கணக்கு இடைவெளி அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும்.
நான்காவதாக, சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து, அந்நாடுகள் இன்னமும் மீட்சி அடையவில்லை. அதன் விளைவாக, அந்த நாடுகளுக்கு இந்தியாவின் ஏற்றுமதி சரிந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையையும் இது பாதித்துள்ளது.
இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இவ்வாண்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கு முந்தைய கணிப்பில் இவ்வாண்டின் பொருளாதார வளர்ச்சி, 7.3 சதவிகிதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.
தற்போதுள்ள பணவீக்க நிலையில் ரிசர்வ் வங்கி என்ன நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அதை எடுத்துள்ளது. அண்மைக்காலமாக, காலாண்டுக்கு ஒருமுறை கடன் மற்றும் நிதிக் கொள்கையை அறிவிப்பதோடு நின்றுவிடாமல், 6 வாரங்களுக்கு ஒருமுறை தனது கொள்கையை மறுபரிசீலனை செய்து உரிய முடிவுகளை மேற்கொள்கிறது.
அடுத்து வரும் வாரங்களில் பணவீக்க விகிதம் குறையுமானால், வட்டி விகிதத்தைக் குறைப்பது பற்றி நிச்சயமாக மறுபரிசீலனை செய்யும் என்று எதிர்பார்க்கலாம். இத்தருணத்தில் பணவீக்கம் குறிப்பாக உணவுப் பொருள்கள் சார்ந்த பணவீக்கம் குறைவதும், அதிகரிப்பதும் பருவமழையைப் பொருத்தே அமையும்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலையும் ஏறுமுகத்தில் உள்ளது. போதாக்குறைக்கு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்னமும் மீட்சி அடையவில்லை.
இதுவும் பணவீக்கத்துக்கு வழிவகுக்கக்கூடியதாகும். எனவேதான், மொத்த விலை அடிப்படையிலான பணவீக்க விகிதம் 2013 மார்ச் மாதம் 7 சதவிகிதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நிதிப் பற்றாக்குறை மற்றும் நடப்பு கணக்கில் விழுந்துள்ள துண்டு ஆகியவை உள்நாட்டு சேமிப்பிலிருந்து ஈடுகட்டக் கூடியதல்ல. அன்னிய நேரடி முதலீடுகள் மற்றும் அன்னிய நிறுவன முதலீடுகளின் வரத்தைப் பொறுத்தே நடப்புக் கணக்கில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைச் சரிசெய்திட முடியும்.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரச் சரிவு, உலக அளவில் முதலீட்டாளர்களிடையே உற்சாகமின்மையை அதிகரித்துள்ளது. இதனாலும், இந்தியாவுக்குள் வரவேண்டிய அன்னிய நேரடி முதலீடுகள் மற்றும் அன்னிய நிறுவன முதலீடுகளின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது.
இந்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் ரிசர்வ் வங்கியின் கடன் மற்றும் நிதிக் கொள்கையின் மூலம் தீர்வு காண்பது இயலாது. எந்த ஒரு நாட்டிலும் இது சாத்தியமல்ல என்பதை நாம் பார்க்கிறோம்.
எனவே, மத்திய அரசு தனது பங்கைச் செய்திட முன்வர வேண்டிய தருணம் வந்துவிட்டது. உதாரணமாக, கொள்கை முடிவுகள் மேற்கொள்வதில் விரைந்து செயல்படுதல், முட்டுக்கட்டைகளை அகற்றுதல், நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்தல், முதலீடு மற்றும் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தைப் போக்கி, உத்வேகம் அளிக்கும் வகையில் புத்துயிர் திட்டங்களை அறிவித்தல் ஆகியவற்றில் மத்திய அரசு, முன்னெப்போதும் இல்லாத அளவில், முனைப்பு காட்ட வேண்டும்.

No comments:

Post a Comment