Friday, August 17, 2012

சீனக் கடலில் தீவுச் சண்டை


கிழக்கு, தென்சீனக் கடல் பகுதியில் உள்ள தீவுகளுக்குப் பல்வேறு நாடுகள் உரிமை கொண்டாடி வருவதால் சமீபகாலமாக அக்கடல் பகுதியில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது.
கிழக்கு சீனக் கடல் பகுதியில் ஜப்பானுடன் சீனாவுக்கும், தென் கொரியாவுக்கும் ஏற்பட்டுள்ள தீவுச் சண்டைதான் பதற்றத்துக்குக் காரணம். தூதர்களைத் திரும்ப அழைப்பது, அதிபர்களின் வார்த்தைப் போர், போர்க் கப்பல்களை முன்னெடுத்துச் செல்வது, ராணுவத்தைத் தயார்படுத்துவது என்று கிழக்கு சீனக் கடல் பகுதியில் நாளுக்குநாள் பிரச்னை பெரிதாகிக் கொண்டிருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.
கிழக்கு சீனக் கடல்பகுதி, சிறு சிறு தீவுகள் நிறைந்த இடம். அங்குள்ள தீவுகளுக்கு வெவ்வேறு பெயர்களை வைத்துக் கொண்டு ஜப்பான், சீனா, தென் கொரியா ஆகிய நாடுகள் தங்களுக்கென்று உரிமை கொண்டாடி வருவது பல ஆண்டுக்காலமாகத் தொடர்ந்து வருகிறது.
இத்தீவுகளில் உள்ள தாது வளம், கடல் பகுதியில் காணப்படும் அபரிமிதமான மீன் வளம் உள்ளிட்டவையும், கிழக்கு சீனக் கடல்பகுதியில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கமுமே இந்தப் போட்டிகளுக்குக் காரணம்.
அதே நேரத்தில் தென் சீனக் கடல்பகுதியிலும் இதேபோன்ற பிரச்னைகள் உள்ளன. சர்வதேசக் கப்பல் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பகுதி இக்கடல் பகுதி வழியாகத்தான் நடைபெற்று வருகிறது என்பதும், இக்கடல் பகுதியில் புதைத்து கிடக்கும் அபரிமிதமான எண்ணெய் வளமுமே இப்பகுதியில் ஆதிக்கப் போட்டிக்கு முக்கியக் காரணம்.
சீனா, தைவான், பிலிப்பின்ஸ், வியத்நாம் போன்ற நாடுகளும் இப்பகுதியில் தீவுச் சண்டையில் ஈடுபட்டுள்ளன.
கிழக்கு சீனக் கடல் பகுதியில் தியாவு தீவுக் கூட்டம் யாருக்குச் சொந்தம் என்ற போட்டியால் சமீபகாலமாக ஜப்பான் - சீனா இடையிலான உறவு சீர்குலைந்து மோதல்போக்கு அதிகரித்துள்ளது. சீனாவுக்கான ஜப்பான் தூதர் யுச்சிரோ, தீவுகள் பிரச்னையில் தங்கள் நாட்டு அரசின் கொள்கைக்கு எதிராக சில கருத்துகளைத் தெரிவித்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சீனாவுக்கான தனது தூதரை ஜப்பான் திரும்ப அழைத்துக் கொண்டது.
தீவுக் கூட்டத்தின் மீதான தங்கள் உரிமையை நிலைநாட்ட அப்பகுதியில் உள்ள 3 முக்கியத் தீவுகளை விலை கொடுத்து வாங்கி, ராணுவத்தை நிறுத்த முடிவு செய்தது ஜப்பான். இதையடுத்து உடனடியாக தனது சண்டித்தனத்தைக் காட்டியது சீனா. தனது இரு போர்க்கப்பலை பிரச்னைக்குரிய பகுதியில் நிறுத்தி வைத்து பதற்றத்தை மேலும் அதிகரித்தது. இதற்கு பதிலடியாக, "அப்பகுதியில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று ஜப்பான் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
தென் சீனக் கடலில் சீனாவுக்குப் போட்டியாக இருக்கும் நாடுகளான பிலிப்பின்ஸ், வியத்நாம், தைவான் போன்றவை சற்று பலவீனமானவை என்பதால் அங்கு தங்கள் ஆதிக்கத்தை எளிதில் நிலைநாட்டி விடலாம் என்ற நோக்கில் சீனா செயலில் இறங்கியுள்ளது. தென் சீனக் கடல் பகுதியின் பெரும்பகுதி தங்களுக்கே உரியவை என்று வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரத்தால் இந்தியாவுக்கு இப்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்திய பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி, வியத்நாம் அருகே தென் சீனக் கடல் பகுதியில் அந்நாட்டு ஒத்துழைப்புடன் எண்ணெய் துரப்பணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தப் பணிகளை உடனடியாக நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமென இந்தியாவுக்கு சீனா நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், சீனாவின் எச்சரிக்கையைப் புறக்கணித்துவிட்டு தொடர்ந்து பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அப்பகுதியில் மேலும் பல துரப்பணப் பணிகளை மேற்கொள்ள வியத்நாமுடன் இந்தியா ஒப்பந்தமும் செய்து கொண்டுள்ளது.
தொடக்கத்தில் இருந்தே இந்தியாவை வேண்டாத நாடாகக் கருதும் சீனாவால், தாங்கள் ஆதிக்கம் செலுத்த விரும்பும் தென் சீனக் கடல் பகுதியில் இந்தியா நிலைகொண்டுள்ளதை முற்றிலுமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிரச்னை உச்சத்தை எட்டி சர்வதேச தலையீடுகள் ஏற்படும்போது வியத்நாமுக்கு ஆதரவான நிலைப்பாட்டைத்தான் இந்தியா எடுக்கும் என்பதுவே இதற்குக் காரணம்.
அதே நேரத்தில் கிழக்கு சீனக் கடல் பகுதியில் நிலைமை முற்றிலும் வேறு. விடாக்கொண்டனாக ஜப்பானும், கொடாக்கண்டனாக சீனாவும் மோதலில் இறங்கியுள்ளன. இதனால் கிழக்கு சீனக் கடல் பகுதியில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தென் கொரியாவும் சில தீவுகளுக்கு உரிமை கொண்டாடி போட்டியில் இறங்கியுள்ளது.
ஜப்பானால் தகிஷிமா என்றும், தென் கொரியாவால் டோக்டோ என்றும் உரிமை கொண்டாடப்படும் பிரச்னைக்குரிய தீவுக்கு சமீபத்தில் பயணம் மேற்கொண்டார் தென் கொரிய அதிபர் லீ மயூங்-பாக். இதனால் கடும் அதிருப்தியடைந்த ஜப்பான், தென்கொரியாவுக்கான தனது தூதரை உடனடியாகத் திரும்ப அழைத்துக் கொண்டது.
ஒலிம்பிக் போட்டியிலும் இந்தப் பிரச்னை எதிரொலித்தது. ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் ஜப்பானை தென் கொரியா வீழ்த்தியது. அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக, இத்தீவு பிரச்னையில் ஜப்பானைக் கண்டிக்கும் வாசக அட்டையுடன் மைதானத்துக்குள் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார் தென்கொரிய வீரர் பார்க் ஜோங்வூ.
அடுத்த சில நாள்களிலேயே தென்கொரியாவைச் சேர்ந்த 40 பேர் அடங்கிய குழு பிரச்னைக்குரிய தீவுக்கு தங்கள் நாட்டு தேசியக் கொடியுடன் நீந்திச் சென்று தீவு தங்களுக்குத்தான் என்று உரிமை கொண்டாடியது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக யோசித்து வருகிறது ஜப்பான்.
இந்தப் பிரச்னை குறித்து பேசித் தீர்வுகாண வாய்ப்பே இல்லை என்று ஜப்பான், சீனா, தென்கொரியா ஆகியவை பகிரங்கமாகவே அறிவித்துவிட்டன. எனவே நிலைமை மேலும் மோசமானால் சீனக் கடல் பகுதியில் போர் வெடிக்கும் அபாயம் உள்ளது.

No comments:

Post a Comment