Friday, August 17, 2012

கிரீடமா, முள் கிரீடமா?

இந்தியப் பொருளாதாரம் ஓர் இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்து கீழ்நோக்கிப் பயணிக்கும் காலம் இது. 1991-ம் ஆண்டு முதல் நமது பொருளாதாரம் சீர்திருத்தப் பாதையில் பயணித்து அதனால் எல்லோரும் பாராட்டும் வகையில் வளர்ந்து வந்தது; படிப்படியாகத் தொய்வு ஏற்பட்டு 2010-11-ம் ஆண்டுகளுக்கான கணக்கீட்டின்படி முந்தைய ஆண்டில் 8.4% ஆக இருந்த ஜி.டி.பி. எனப்படும் மொத்த உற்பத்தி மதிப்பு 6.5% ஆகக் குறைந்துள்ளது.
உலகெங்கிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையால்தான் இந்த வீழ்ச்சி எனவும் இந்த நிலைமையிலும்கூட 6.5% ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி என்பது தலைசிறந்த வளர்ச்சி எனவும் தற்போது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள "முந்தைய நிதி அமைச்சர்' பிரணாப் முகர்ஜி கூறினார்.
ஆனால் முகர்ஜி கவனிக்க மறந்த ஒரு விஷயம் 2010-11-ம் ஆண்டில் 8.2 சதவிகிதமாக இருந்த தொழில்களின் வளர்ச்சி 2011--12-ம் ஆண்டில் 2.8 சதவிகிதமாகக் குறைந்ததையும், தொழிற்சாலைகளின் உற்பத்தியளவு 3.2 சதவிகிதம் இதே சமயத்தில் குறைந்ததையும்தான்.
இந்தியப் பொருளாதாரத்தின் மற்ற பல அம்சங்களிலும் வீழ்ச்சி ஏற்பட்டது. நமது ஏற்றுமதி சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு 10 சதவிகிதம் குறைந்தது. இதே காலகட்டத்தில் நமது இறக்குமதி அதிகரித்துள்ளது.
ஒரு நாட்டின் ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகமானால் வெளிவர்த்தகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது என்று பொருள். தற்சமயம் இந்தப் பற்றாக்குறை நமது நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 4 சதவிகிதம் என்பது, நமது பொருளாதாரம் 1989-92-ம் ஆண்டுகளில் இருந்த மோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
சென்ற ஆண்டில் நமது ரூபாயின் மதிப்பு 27 சதவிகிதம் குறைந்துள்ளது. ஒரு நாட்டில் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரிக்கும்போது அந்த நாடே முன்வந்து தனது நாணயத்தின் மதிப்பைக் குறைப்பது வழக்கம். காரணம், இதுபோல் குறைக்கப்பட்ட நாணய மதிப்பினால் வெளிநாட்டவர் அவர்கள் இறக்குமதி செய்யும் வெளிநாட்டுப் பொருள்களுக்குக் குறைந்தவிலை என்பதால் நிறைய இறக்குமதிப் பொருள்களை வாங்குவார்கள். இதனால் நாணய மதிப்பைக் குறைத்த நாட்டின் ஏற்றுமதி அதிகமாகும்.
உதாரணமாக, இந்தியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் நிறைய ஜவுளிகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகின்றன. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு துணி 100 டாலர்கள் என இருந்து சீனாவிலிருந்து இறக்குமதியாகும் அதேபோன்ற துணி 90 டாலர்கள் என இருந்தால் சீனாவின் துணியைத்தான் அதிகம் வாங்குவார்கள். இந்த நிலைமையில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு 45 ரூபாய் என்று இருந்தது வீழ்ச்சியடைந்து 55 ரூபாய் என ஆகிவிட்டால் அதே இந்திய துணியின் விலை 81 டாலர்கள் ஆகிவிடும். 90 டாலர் சீனாவின் துணியைவிட 81 டாலர் இந்தியத் துணி குறைந்த விலை என்பதால் அதை அதிகம் விரும்பி வாங்கி அதனால் நமது ஜவுளி ஏற்றுமதி அதிகமாகும். இது இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் எல்லாப் பொருள்களுக்கும் பொருந்தும்.
மத்திய ரிசர்வ் வங்கியே முன்வந்து நமது ரூபாயின் மதிப்பைக் குறைக்காமல், வேறு பல காரணங்களுக்காக ரூபாயின் விலை அதுவாகவே குறைந்துள்ளது. ஆனால், அதன் பலனாக நமது ஏற்றுமதி அதிகரிக்காமல் போனது அடிப்படை பொருளாதார விதிமுறைகளில் எங்கேயோ இடிக்கிறது. இதை நுணுக்கமாக ஆராய்ந்தால் நமது நாட்டில் ஏற்றுமதியாகும் பொருள்களின் உற்பத்தி குறைந்ததுதான் காரணம் என்பது விளங்கும்.
இதுபோன்ற பொருளாதாரப் பிரச்னைகளைச் சரிசெய்யும் திறமை நமது புதிய நிதியமைச்சருக்கு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. நமது நாட்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்குக் காரணம் மூலப்பொருள்களின் உற்பத்தி குறைந்து, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டிருப்பதுதான் என்கிறார் நமது பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சி. ரங்கராஜன். இவற்றைச் சரிசெய்ய தொழில்துறையில் புதிய முதலீடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.
புதிய முதலீடுகள் ஏற்பட நமது வங்கிகள் மூலதனத்திற்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும். ஆனால் ரங்கராஜன் அக்கருத்தை ஏற்கவில்லை. ""ஐரோப்பாவில் பொருளாதார வளர்ச்சி குறைந்தாலும் பணவீக்கம் குறைந்ததாகவே இருந்தது. ஆனால், இந்தியாவில் வளர்ச்சி குறைந்து பணவீக்கம் அதிகமாயிருக்கும் காரணத்தால் வட்டி விகிதத்தைக் குறைக்க முடியாது. ஏனென்றால், வட்டி விகிதம் குறைந்தால் பணவீக்கம் மேலும் அதிகமாகும்'' என பதிலளித்துள்ளார்.
பிரதமரின் பொருளாதார ஆலோசகர் இவ்வாறு கூறும்போது, ரிசர்வ் வங்கியின் கவர்னரும் இதே கருத்தைப் பிரதிபலிக்கிறார். ""நமது நாட்டில் 9 சதவிகிதம் பணவீக்கம் உருவாகியிருப்பதை நம்மால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை'' என்பது அவரது வாதம்.
ஆனால், இந்த இரண்டு பொருளாதார மேதைகளும் மறந்த விஷயம் பணவீக்கம் இரண்டு வகைப்படும் எனும் அடிப்படைப் பொருளாதாரத் தத்துவத்தைத்தான். அதாவது பொருள்களின் தேவை அதிகரித்தாலும், பொருள்களின் உற்பத்திச் செலவு அதிகரித்தாலும் பணவீக்கம் உருவாகும்.
முதல் வகையான பணவீக்கத்தின்படி தேவை அதிகரித்து பொருள்களின் விலை அதிகமானால், உற்பத்தி பெருகி பொருளாதாரம் முன்னேறும். எனவேதான் வளர்ந்துவரும் ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்குப் பணவீக்கம் நல்லது எனக் கூறப்படும். இரண்டாவது வகையான பணவீக்கம் உற்பத்தியாகும் பொருள்களின் மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பதால் ஏற்படுவது. இது ஏற்பட்டால் பொருள்களின் விற்பனை பாதிக்கப்பட்டு தொழில்களின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு தொழிற்சாலைகள் மூடப்படும்.
ரூபாய் மதிப்பு குறைந்ததால் நாம் இறக்குமதி செய்யும் பல இடுபொருள்களின் விலை ஏறி உற்பத்தி பாதித்துள்ளது. பெட்ரோலியப் பொருள்களின் விலை ஏற்றம் இதற்கு அடிப்படையான காரணம் எனலாம். இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாத ரிசர்வ் வங்கி தொழிற் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்காதது ஒரு பெரிய குறை.
இந்தியப் பொருளாதாரத்தை 1947-லிருந்து கூர்ந்து கவனிக்கும் பலருக்கும் ஆரம்ப காலங்களில் நமது நாட்டில் பண்டித ஜவாஹர்லால் நேருவால் பின்பற்றப்பட்ட சோஷலிசம் சார்ந்த கலப்புப் பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட பணவீக்கம் நினைவுக்கு வரலாம். அது பொருள்களுக்கான தேவை, மக்களுக்குக் கிடைப்பதைவிட அதிகமாக இருந்தது என்பதால் ஏற்பட்டது. அதாவது ஒரு பொருளுக்கு மக்களிடையே தேவை இருந்தது, ஆனால் சந்தை வரவு (சப்ளை) குறைவாக இருந்தது.
ஆனால், 1991-ல் நாம் பொருளாதார தாராளமயமாக்கல் எனும் சீர்திருத்தத்தைப் பின்பற்ற ஆரம்பித்த பின் ஏற்பட்ட பணவீக்கம் உற்பத்திச் செலவுகள் அதிகரித்ததால் உருவானது.
உதாரணமாக, 2006-ல் ஏற்பட்ட வறட்சியால் பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவுப் பொருள்கள் உற்பத்தி பாதித்ததனால் பணவீக்கம் உருவானது. இப்பொழுது நாடெங்கிலும் பல மாநிலங்களில் போதிய அளவு மழை இல்லாததால் வறட்சி நிச்சயம் என்பது தெரிய வருகிறது. இதனால் பணவீக்கம் உயரலாம். விலைவாசி ஏறலாம்.
2008-09-ம் ஆண்டு வங்கிகளின் வட்டிவிகிதம் குறைக்கப்பட்டதால் அன்று பாதிக்கப்பட்டிருந்த பொருளாதாரம் சீராகி வளர்ச்சிப் பாதையில் சென்றது. அன்று இதைச் செய்த ரிசர்வ் வங்கி, இன்று அதை மறந்தது ஏன் எனத் தெரியவில்லை.
அடுத்து, அரசு செய்ய வேண்டிய முக்கியமான ஒரு காரியம் நிதிநிலையில் வரவைவிட அதிகமாக இருக்கும் செலவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது. இதில் மத்திய அரசு மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும்.
மாநில அரசுகள் தெரிந்தே ஓட்டு வங்கி அரசியலுக்காக அதிக செலவுகளை இலவசங்களுக்குச் செலவிடுவது பழைய காலங்களில் நடந்தது. ஆனால் இப்போது மத்திய அரசும் ஓட்டு வங்கி அரசியலைக் கருத்தில்கொண்டு இலவசங்களை அள்ளித் தெளிக்கிறது.
இதனால் இந்த ஆண்டு பற்றாக்குறை நமது மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) 8 சதவிகிதமாகியுள்ளது. இது 4 சதவிகிதத்திற்கு மேல் செல்லக்கூடாது என்பதற்காக ""நிதிநிலை நிர்வாகத்தில் பொறுப்பான வரவு - செலவு கட்டுப்பாடு சட்டம்'' என்ற ஒரு சட்டத்தை இயற்றியது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான்.

மேலே கூறிய எல்லா பிரச்னைகளையும் நன்கு உணர்ந்தவர்தான் நமது பொருளாதார மேதையான பிரதமர் மன்மோகன் சிங். நிதியமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ப. சிதம்பரமும் இத்துறையில் அனுபவப்பட்டவர்தான்; அவர்கள் இப்பிரச்னைகளை எதிர்கொண்டு பொருளாதாரத்தை எப்படிச் சீரமைக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருப்பதில் வியப்பில்லை.
இன்றைய பொருளாதாரப் பிரச்னைகளுக்கு விலைவாசி உயர்வு, நாணய மதிப்புக் குறைவு, குறைந்து வரும் ஏற்றுமதி, பாதிக்கப்பட்டிருக்கும் உற்பத்தி போன்ற பிரச்னைகளுக்கு நிதியமைச்சர் தீர்வுகாணும் விதத்தில்தான் அரசின் தலையெழுத்தே நிர்ணயிக்கப்படும். ப.சிதம்பரத்திற்குச் சூட்டப்பட்டிருப்பது கிரீடமா இல்லை முள் கிரீடமா என்பது அவர் நிலைமையை எதிர்கொள்வதன் மூலம்தான் முடிவு செய்யப்படும்.

No comments:

Post a Comment