Wednesday, October 3, 2012

இனியும் வேண்டாம் தாமதம்!


கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அண்மையில் அடிக்கல் நாட்டிய மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கமல்நாத், 20 லட்சம் மக்கள் தொகை உள்ள அனைத்து நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு உதவிக்கரம் நீட்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் நகர்ப்புற வளர்ச்சி என்பது 31 சதவீதம் என்றாலும், பெருவாரியான நகரங்களில் மக்கள் நெரிசல் கட்டுக்கடங்காமல் போயிருக்கிறது. புறநகர் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதும், நகரின் மத்திய பகுதிகளில் வேலை பார்ப்பதற்கு வந்து செல்ல போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாததும்தான் இதற்குக் காரணம். எல்லோரும் நகரத்துக்குள்ளேயே வாழ விரும்புவதால் நகர்ப்புறங்களில் மக்கள் நெரிசல் அதிகரித்திருப்பதில் வியப்பொன்றும் இல்லை.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 20 லட்சம் மக்கள் தொகை உள்ள நகரங்கள் சென்னை, கோவை மட்டுமே. இதற்கு அடுத்த நிலையில் மதுரையில் 14 லட்சம் மக்களும், திருச்சியில் 10 லட்சம் பேரும் வாழ்கிறார்கள். நகர வளர்ச்சியைக் காணும்போது, மதுரை, திருச்சி இரு நகரங்களும் விரைவில் 20 லட்சம் மக்களைக் கொண்ட நகரங்களாக மாறிவிடும்.

தமிழ்நாட்டில் தற்போது சென்னை நகரத்தில் மட்டுமே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசின் நிபந்தனைப்படி இத்தகைய மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட வேண்டுமானால், இப்போதைக்கு அது கோவையில் மட்டுமே சாத்தியம்.

இத்தகைய திட்டங்களுக்கு மிகப்பெரும் மூலதனம் தேவை என்பதாலும், உலக வங்கி போன்ற நிறுவனங்களிடம் கடன் வாங்கித்தான் திட்டங்களை மேற்கொள்ள முடியும் என்பதாலும் மத்திய அரசின் அனுமதி அவசியமாகிறது. இந்நிலையில், 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு மட்டுமே மெட்ரோ ரயில் என்பது, அந்த வசதியுள்ள நகரங்களின் எண்ணிக்கையைக் குறைக்க உதவுமே தவிர, மக்கள் நெரிசல் பிரச்னையையோ போக்குவரத்து வசதி பிரச்னையையோ தீர்க்க உதவாது.

பத்து லட்சம் மக்கள் வசிக்கும் நகரங்கள் தமிழ்நாட்டில் மட்டும் 24 ஆக உள்ளன. திருப்பூர், ஒசூர், வேலூர் ஆகிய நகரங்கள் இதில் குறிப்பிடத் தக்கவை. இந்நகரங்களில் இப்போதே ஏன் மெட்ரோ ரயில் அமைக்க வேண்டும்? அதற்குத் தேவை என்ன என்று கேட்கலாம். இந்த நகரங்கள் முறையே கோவை, பெங்களூர், சென்னை ஆகிய நகரங்களுடன் தொடர்புடையவை. கோவை-திருப்பூர், பெங்களூர்-ஒசூர், சென்னை-வேலூர் இடையே அன்றாடம் பல லட்சம் பேர் பணியின் நிமித்தமாகப் பயணம் செய்கின்றனர்.

மெட்ரோ ரயில் திட்டத்தை இந்த நகரங்களில் அமல்படுத்தி புறநகர் பகுதிகளை விரிவுபடுத்தினால், கோவை, பெங்களூர், சென்னை போன்ற நகரங்களின் மக்கள் நெரிசலையும் கணிசமாகக் குறைக்கும் வாய்ப்பு ஏற்படும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நகரங்களில் போக்குவரத்து நெரிசலுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பவை கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் பெருக்கம்தான். ஆண்டுதோறும் கார்களின் விலை கூடினாலும், இரு சக்கர வாகனங்களின் விலை ஒரு பழைய காரின் விலை அளவுக்கு இருந்தாலும்கூட, அவற்றின் விற்பனையில் சரிவுகள் இல்லை.

எந்த அளவுக்கு கார்களும் இரு சக்கர வாகனங்களும் விரைந்து செல்லப் பயன்படுகிறது என்பது விவாதப் பொருள். அதிகரித்த வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் அவர்களது எதிர்பார்ப்பைப் பொய்த்துவிடுகிறது என்பதை அனைவரும் உணர்ந்தாலும் சொந்த வாகன மாயையில் கட்டுப்பட்டு பொது போக்குவரத்தைத் தவிர்க்கிறார்கள். பொது போக்குவரத்தும் சரி, தேவைக்கு ஏற்றபடியும், வசதியுடனும் இல்லாமல் இருப்பதும் இன்னொரு காரணம்.

பொதுமக்கள் விரைவாகத் தங்கள் இடத்துக்குப் போக முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே, தங்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு, பொது வாகனங்களைப் பயன்படுத்தும் கலாசாரத்துக்கு மாறுவார்கள். இத்தகைய மாற்றம் நிகழ வேண்டுமானால் அதற்கு மெட்ரோ ரயில் பேருதவியாக இருக்கிறது. இதைத்தான் தில்லி மெட்ரோ ரயில் திட்டம் உறுதிப்படுத்தி இருக்கிறது. நாளொன்றுக்கு சுமார் 20 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். இவர்களில் பாதிப்பேர் தங்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்தியவர்கள். தற்போது மெட்ரோ ரயிலுக்கு மாறியுள்ளனர்.

ஆகவே, 10 லட்சம் மக்கள் தொகை உள்ள நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்தினால், பொதுமக்கள் இதனைப் பயன்படுத்தவும், நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையவும் உதவும். பெரு நகரங்களிலும் சரி, சிறு நகரங்களிலும் சரி, புறநகர் பகுதிகளில் மக்கள் அதிகமாகக் குடியேறி நகரின் மத்திய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறைய மெட்ரோ ரயில் ஒரு வரப்பிரசாதமாக அமையும். இதைத்தான் லண்டன், பாரீஸ், நியூயார்க், டோக்கியோ, சிங்கப்பூர், நமது இந்தியத் தலைநகர் தில்லி போன்றவை உணர்த்துகின்றன.

ஒரு திட்டத்தைத் தொடங்கி, அதற்குத் தேவைப்படும் இடங்களைக் கையகப்படுத்தி, கட்டுமான வேலைகளைத் தொடங்க, 20 லட்சம் மக்கள் தொகை பெருக்கத்துக்காக காத்திருந்தால், புதிய கட்டடங்கள், ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிடும். இந்த இடங்களை அரசு கையகப்படுத்தும் நடவடிக்கைகள் முடியவும் நாளாகும். ஆகவே, இப்போதே அதற்கான பணிகளைத் தொடங்கி விடுவதுதான் அறிவுடைமை.

Source: Dinamani

No comments:

Post a Comment