Wednesday, October 3, 2012

திட்டமும் கமிஷனும்!

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் சனிக்கிழமை தில்லியில் கூடிய முழு திட்டக் கமிஷன் பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-17) இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் 8.2 சதவீதம் என்ற அளவை எட்ட இலக்கு நிர்ணயித்திருக்கிறது. இனி மத்திய அமைச்சரவை கூடி, திட்ட அறிக்கை, இலக்கு, வழிமுறை ஆகியவற்றைப் பரிசீலித்து தேவைப்பட்டால் சில மாற்றங்களைச் செய்து தன்னுடைய ஒப்புதலைத் தெரிவிக்கும். அதன் பிறகு அனைத்து மாநில முதலமைச்சர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட "தேசிய வளர்ச்சிமன்றக் கூட்டம்' (என்.டி.சி.) கூடி இந்த ஐந்தாண்டு திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் தர வேண்டும்.

ஐந்தாண்டு திட்டங்களுக்கு ஜவாஹர்லால் நேரு காலத்தில் இருந்த முக்கியத்துவம் இப்போது இல்லை. முதல் காரணம் போடப்படும் திட்டங்கள் எதுவும் உரிய காலத்தில் உரிய வகையில் நிறைவேற்றப்படுவதில்லை. அதுமட்டுமல்ல. நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான திட்டங்களையும், நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளையும் வகுத்து நிபந்தனைகளையும் விதிப்பதால் பல திட்டங்கள் அமலாகாமல் நீடிக்கின்றன.

உதாரணமாக, தமிழ்நாட்டில் "கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுக்கு மத்திய அரசு ஒதுக்கிய 3,000 கோடி ரூபாய் நிதியைத் தமிழக அரசு பயன்படுத்தவே இல்லை'. அதற்கு காரணம், "இதுவரை போக்குவரத்து வசதியையே பார்த்திராத கிராமமாக இருக்க வேண்டும், அந்த கிராமம் குறிப்பிட்ட எண்ணிக்கைக்குக் குறைவான மக்கள் தொகையையே கொண்டிருக்க வேண்டும்' போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்ததுதான்.

÷வடகிழக்கு மாநிலங்களையும் ராஜஸ்தான், உத்தரகண்ட் மாநிலங்களின் நிலையையும் மனதில் கொண்டு திட்டமிடுவது என்பது தமிழ்நாட்டிற்கு எப்படிப் பொருந்தும்? சாலை இல்லாத கிராமங்களே தமிழ்நாட்டில் இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டு ஆண்டுகள் பலவாகிவிட்டிருக்கிறதே!

நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன பிறகும்கூட மாநிலங்களுக்காக மத்திய அரசின் திட்டமிடல் இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது.

தென் மாநிலங்களுக்கான ரயில்பாதைகளை இரட்டிப்பாக்குவது, மேலும் பல நகரங்களுக்கு நீட்டிப்பது போன்ற சாதாரண பணிகள் கூட உரிய காலத்தில் நிறைவேற்றப்படுவதில்லை. அவ்வளவு ஏன், ரயில் பாதைகளின் கீழே கட்டப்படும் சுரங்கப் பாதைகளை முடிக்கக்கூட பல மாமாங்கங்கள் பிடிக்கின்றன.

11 ஐந்தாண்டு திட்டங்கள் முடிந்த பிறகும்கூட மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரியும் மாநிலத்துக்கு ஒரு ஐ.ஐ.டி.யும் ஏற்படுத்தப்படவில்லை. கல்வி, சுகாதாரத்துறையில் நம்முடைய திட்டமிடலும் செயலாற்றலும் எப்படி இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.

மத்திய திட்டக்குழு ஒப்புதல் வழங்கிய பல திட்டங்கள் முழுமை பெறாமல் இருப்பதற்கு, மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பதும், அனுமதி தரப்படுவதில் உள்ள காலதாமதமும் முக்கிய காரணங்கள்.

இதற்கு நிதியமைச்சர் புதிய யோசனையைத் தெரிவித்திருக்கிறார். ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கு அதிகமான திட்டங்களைப் பரிசீலித்து ஒப்புதல் அளிக்க பிரதமர் தலைமையில் தேசிய முதலீட்டு வாரியம் (என்.ஐ.பி.) அமைக்க வேண்டும் என்று யோசனை கூறியிருக்கிறார்.

மத்திய அமைச்சரவை, மத்திய திட்டக்குழு இரண்டுமே பிரதமர் தலைமையில்தான் இயங்குகின்றன. இந்த இரண்டிலும் பேசி முடிவு செய்தவற்றுக்கு செயல்வேகம் கூட்ட இன்னொரு அமைப்புக்கு என்ன தேவை.

திட்டக்குழு தொடங்கிய இடத்துக்கே செல்லவேண்டும் என்பதுதான் நம்முடைய கருத்து. அதாவது இரண்டாவது ஐந்தாண்டு திட்டகாலத்தில் விவசாயத்துக்கும், நீர்ப்பாசன திட்டங்களுக்கும், மின்னுற்பத்தி திட்டங்களுக்கும் அளித்த அதே முக்கியத்துவத்தை நாம் மீண்டும் அளித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாள் வேலைவாய்ப்பு திட்டமாக்கி, விவசாய நிலங்களை தரிசு பூமியாக்கும் நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலே, பல்லாயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும்

மத்திய திட்டக்குழு என்பது மாநில திட்டக்குழுக்களின் பிரதிநிதிகளும் அடங்கிய அமைப்பாக இருந்தால் மட்டுமே, அல்லது, மத்திய திட்டக்குழுவுக்கு ஆலோசனைகள் வழங்கவும், திட்டமிடுவதை நெறிப்படுத்தவும், மாநிலத்தின் பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனைக் குழு இருந்தால் மட்டுமே, முறையாக திட்டமிடவும், திட்டமிட்ட இலக்கை எட்டவும் முடியும்.

புள்ளிவிவரங்களால் எந்தவிதப் பயனும் இருக்கப் போவதில்லை. அன்னிய முதலீட்டாளர்களையும், சர்வதேச நிதி நிறுவனங்களையும் திருப்திப்படுத்த வேண்டுமானால் இந்த புள்ளிவிவரங்கள் பயன்படுமே தவிர சராசரி இந்தியனின் அடிப்படை எதிர்பார்ப்புகளை இந்தப் புள்ளி விவரங்கள் எந்தவிதத்திலும் நிறைவேற்றப் போவதில்லை.

Source: Dinamani

No comments:

Post a Comment