Wednesday, October 3, 2012

இணையதளத்தின் இன்னொரு தளம்

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரிப்பதைப் போலவே, இணையதள மோசடிகள் (சைபர் கிரைம்) எண்ணிக்கையும் அதிகரிக்கவே செய்கின்றன. விதவிதமான அறிவுநுட்பத்துடன் இந்தக் குற்றங்கள் நடைபெறுகின்றன.

கடந்த 12 மாதங்களில் இணையதளம் பயன்படுத்தும் இளைஞர்களில் 56% பேர் ஏதோ ஒருவகையில் இணையதள மோசடிக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்கிறது நார்டன் சைபர்கிரைம் அறிக்கை. சுமார் ரூ.800 கோடி அளவுக்கு மோசடி நடந்திருக்கலாம் என்கிறது இந்த அறிக்கை. உலக அளவில் 11,000 கோடி ரூபாய் ஏமாற்றுவேலை நடந்திருக்கிறது என்கிறார்கள்.

உலக அளவில் இணையதளத்தைப் பயன்படுத்தும் முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. சீனாவில் 51.3 கோடி பேர் இணைய தளத்தைப் பயன்படுத்துகின்றனர். அடுத்து அமெரிக்காவில் 24.5 கோடி பேர். மூன்றாவதாக, இந்தியாவில் 12.1 கோடி பேர் இணையதளத்தைப் பயன்படுத்துகிறார்கள். எண்ணிக்கையில் அதிகரித்தாலும், பயன்படுத்துவோரின் எச்சரிக்கை உணர்வு அதிகரித்துள்ளதா என்றால், இல்லை என்றே சொல்லிவிடலாம்.

தேவையில்லாத மின்னஞ்சலுக்குப் பதில் அளிப்பதன் மூலம் அல்லது இணைய தளத்தின் வழியாக, அறிமுகம் இல்லாத நிறுவனங்களில் பொருள்கள் வாங்கும்போது தேவையில்லாத தகவல்களை, விவரங்களைத் தாராளமாகத் தெரிவிப்பதன் மூலமும் தங்கள் ரகசியக் குறியீடுகளை வெளிப்படுத்திக் கொள்வதாலும் பல இழப்புகளைச் சந்திக்க நேர்கிறது. குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் எதைப் பகிர்ந்துகொள்வது என்ற கட்டுப்பாடே இல்லாத நிலை உள்ளது.

தற்போது ஆன்ட்ராய்டு செல்போன் மிகக் குறைவான விலையில் கிடைக்கத் தொடங்கிவிட்டதால், இணையதளத்தில் பெறக்கூடிய அனைத்துச் சேவைகளையும் செல்போனிலேயே செய்துவிட முடியும். அதிக அளவில் திருடுபோகும் பொருள் செல்போன் என்பதாலும், இணையவழி மோசடியில் ஈடுபடுவோர் இத்தகைய செல்போன் பயன்பாட்டைக் குறிவைத்து தங்கள் மோசடி வலைகளை விரிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அண்மையில் வெளியான புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் 13.12 கோடி பேர் "இணையதள செல்போன்' பயன்படுத்துகின்றனர்.

ரூ.4,000 முதல் ரூ.40,000 வரை ஆன்ட்ராய்டு செல்போன்கள் இந்தியாவில் கிடைக்கின்றன. ஆகவே, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் செல்போன் மூலம் இணையதள சேவைகளைப் பெற முடியும் என்ற நிலை இருக்கிறது.

அனைத்து வங்கிகளுமே செல்போன்மூலம் பணப் பரிமாற்றுப் பணிகளை நிகழ்த்திட ஊக்கப்படுத்துகின்றன. இதற்காக தனிக்கட்டணம் இல்லை. வெறும் குறுந்தகவல் அனுப்பும் அதே செலவுதான். ஆகவே ரூ.50,000 வரை பணப் பரிமாற்றத்தை செல்போன் மூலம் (மொபைல் பேங்கிங்) நிகழ்த்தலாம் என்று அழைப்பு விடுக்கிறார்கள். ஆனால், பயன்பாடு அதிகரித்த அளவுக்கு, அதன் மூலம் வரக்கூடிய ஆபத்து குறித்த எச்சரிக்கை உணர்வு அதிகரிக்கவில்லை. குறிப்பாக இளைஞர்கள் இதை விளையாட்டுப் பொருள்போலவே பயன்படுத்துகின்றனர்.

அதுமட்டுமல்ல, உடல்பாதிப்பு குறித்தும் இளைஞர்கள் கவலைப்படுவதில்லை. செப்டம்பர் மாதம் முதலாக, செல்போனில் ஏற்படும் கதிர்வீச்சு அளவு எவ்வளவாக இருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. உடலில் ஒரு கிலோ தசையின் திசுக்களில் அதிகபட்சம் 1.6 வாட் அளவுக்குத்தான் கதிர்வீச்சு இருக்க வேண்டும் என்று நிபந்தனையை விதித்துள்ளது. செப்டம்பருக்கு முன்பு வரை வாங்கப்பட்ட செல்போன்களில் கதிர்வீச்சு அளவு என்ன என்பதும், இப்போது உள்ள அளவு குறித்தும்கூட இளைஞர்களிடம் விழிப்புணர்வு இல்லை என்பதுதான் வேதனைக்குரியது.

இணையதள மோசடிகள் ஒருபுறம் இருக்க, சாதாரண ஏடிஎம் இழப்புகள் இன்னொரு பக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. ஏடிஎம் மையங்கள் மூலம் பணஇழப்பு நேரிட்டதாக வரும் புகார்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடிக்கொண்டே போகிறது. 2008-ம் ஆண்டு 153 பேர் புகார் தந்தார்கள். இவர்கள் இழந்த தொகை ரூ.246 லட்சம். 2011-ம் ஆண்டில் 487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இழந்த தொகை ரூ. 706 கோடி!

இதற்குக் காரணம் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தும் முறைகளில் உள்ள கவனக்குறைவுதான் என்கின்றன ஆய்வுகள். அட்டை காணாமல் போனால் உடனடியாக அதை முடக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அல்லது அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாதது, மோசடி செய்வோருக்குச் சாதகமாக அமைந்துவிடுகிறது.

பணம் எடுப்பதற்கான "கடவு எண்' தனக்கு மட்டுமே தெரியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அதைக் கண்டுபிடிக்க மோசடி செய்வோருக்கு சில நிமிடங்களே போதுமானது. பணஇயந்திரத்தில் ஏடிஎம் அட்டையின் கடவு எண்களை எந்தத் தொழில்நுட்பம் உணர்ந்து கட்டளையை ஏற்கிறதோ அதே தொழில்நுட்பத்தை மோசடிக்காரர்கள் கையாளுகிறார்கள். ஏடிஎம் அட்டைகள் கைக்குக் கிடைத்தவுடன், இதற்கான பிரத்யேக கருவியில் அட்டையைப் பொருத்தி கடவு எண்களைக் கண்டுபிடித்து, உடனடியாகப் பணத்தை அட்டையால் உறிஞ்சிவிடுவார்கள். அவ்வளவு வேகமாக தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

இணையதளத்தின் மூலம் மாப்பிள்ளை அல்லது பெண் பார்க்கும் படலங்களும், அதன் மூலம் நடைபெற்ற திருமணங்களும், அதன் பிறகான ஏமாற்றங்களும் மோசடிகளும்... சொல்லி மாளாத கதைகள் தொடருகின்றன.

ஒரு இணையதளம், ஆனால் பல தளங்களில் பிரச்னைகள்!

Source: Dinamani

No comments:

Post a Comment