Tuesday, October 13, 2015

மரபுசாரா எரிசக்தி: தேவையும் அவசியமும்

ஜெர்மனியின் பான் நகரில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா. மாநாட்டில், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தனது செயல்திட்டத்தை, இந்தியா சமர்ப்பித்துள்ளது. இதில் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியின், மாசு வெளியேற்ற அளவு 2030-க்குள் 33 முதல் 35 சதவீதம் வரை குறைக்கப்படும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. மாசு இல்லாத எரிசக்தியின் அளவை 40% உயர்த்துவது எனவும், இந்த இலக்கை அடைய வளர்ந்த நாடுகள் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில் 175 கிகா வாட் (1 கிகா வாட்=1000 மெகா வாட்) அளவுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்தச் செயல்திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் மக்கள் தங்களின் வசதி வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்வதால் மின் சாதனப் பொருள்களின் தேவையும் அதிகரித்து வருகின்றன. இதனால் மின்சாரத்தின் தேவையும், எரிபொருளின் தேவையும் அதிகரித்து வருகிறது. மின் தேவையைப் நிறைவு செய்வதில் அனல் மின் உற்பத்தி முறையே முதலிடம் வகிக்கிறது. அனல் மின் உற்பத்திக்கு மூலப்பொருளாக நிலக்கரி உள்ளதால், அவற்றை எரிக்கும்போது பெருமளவு கரியமில வாயு வெளியேறி காற்றில் கலக்கின்றது. அதுபோல் வாகனப் பயன்பாட்டுக்கு பெட்ரோலியத்திலிருந்து பெட்ரோல், டீசல் உற்பத்தி செய்யப்படுகின்றது. இவற்றை வாகனங்களில் பயன்படுத்தும் போது அவற்றிலிருந்து கரியமில வாயு, நைட்ரஸ் ஆக்ûஸடு, கார்பன் மோனாக்ûஸடு உள்ளிட்ட வாயுக்கள் வெளியேறி காற்றில் கலக்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில் கச்சா எண்ணெய், நிலக்கரி உள்ளிட்டவை தீர்ந்து விடும் நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் தேவையில் இந்தியா 80 % இறக்குமதி செய்கிறது. இதனால் ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் கோடி அன்னியச் செலாவணி இழப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், மின் தேவையை நிறைவு செய்து கொள்ள மரபு சாரா ஆதாரங்களிலிருந்து எரிசக்தி முறைகளைக் கண்டறிந்து பயன்படுத்துவது ஒன்றே சரியான தீர்வாக அமையும். இந்தியாவில் மாற்று எரிசக்தியைத் தயாரிக்க ஏராளமான வளங்கள் உள்ள நிலையில், அதை முழுமையாகப் பயன்படுத்த உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
பொதுவாக, மரபு சார்ந்த எரிசக்தி முறைகளிலேயே அதிக அளவு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. நீர்மின் சக்தி, அனல் மின் சக்தி, அணு மின்சக்தி ஆகியவை மரபு சார்ந்த மின் உற்பத்தி முறைகளாகும். காற்றாலை மின் உற்பத்தி, சூரிய சக்தி, கடலலை மின் உற்பத்தி, பயோகேஸ் மின் உற்பத்தி, சாண எரிவாயு மின் உற்பத்தி, பயோமாஸ் மின் உற்பத்தி உள்ளிட்டவை மரபு சாரா மின் உற்பத்தி முறைகளாகும். இயற்கையாக வீசும் காற்றின் திசைக்கு ஏற்ப காற்றாலை இயந்திரங்களை அமைத்து அவை சுழலுவதிலிருந்து கிடைக்கும் இயந்திர ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுவது காற்றாலை மின் உற்பத்தி முறையாகும்.
சூரிய சக்தியிலிருந்து பெறப்படும் பயன்கள் இருவகையானவை. 1. சூரிய வெப்ப சக்தி சாதனங்கள், 2. சூரிய ஒளி மின் அமைப்புகள். இதில் சூரிய வெப்பச் சாதனங்களாக சூரிய அடுப்பு, சுடுநீர் சாதனங்கள், உலர்த்திகள் போன்றவற்றைக் கூறலாம். சூரிய ஒளி மின்சக்தியானது, சூரிய ஒளி மின் செல்கள் மூலமாக மின்சாரமாக மாற்றப்பட்டு பல்வேறு மின் சாதனங்களை இயக்கப் பயன்படுத்தப்படுகிறது. கடலலை மின் உற்பத்தியானது கடலில் ஏற்படும் அலையினால் உண்டாகும் அழுத்தத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் முறையாகும்.
பயோகேஸ் மின் உற்பத்தி முறையில், வீணாகும் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களின் கழிவுகளை நொதிக்கச் செய்து, கிடைக்கும் உயிரி வாயு (பயோகேஸ்) மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
மரக் கழிவுகள், தாவரக் கழிவுகளை உலர்த்தி, அவற்றை எரித்துக் கிடைக்கும் வெப்ப ஆற்றலிலிருந்து பயோ மாஸ் மின் உற்பத்தி முறை மேற்கொள்ளப்படுகிறது. மின் உற்பத்திக்கு மரபு சாரா முறைகள் உள்ளதுபோல், பெட்ரோலுக்கு மாற்றாக எத்தனாலும், டீசலுக்கு மாற்றாக பயோ டீசலும் பயன்படுத்தலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை பெட்ரோல், டீசலுடன் கலந்தும் பயன்படுத்தலாம். இதனால் அதற்கான செலவு குறைவதுடன், சூழல் சீர்கேடும் குறையும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதிகளவில் எத்தனால் உற்பத்தி செய்ய முயற்சித்தால் பெட்ரோலை எரித்து வெளியேறும் மாசு உள்ளிட்ட பாதிப்புகள் நேராமல் தடுக்கலாம்.
பயோ டீசலானது காட்டாமணக்கு, புங்கன் உள்ளிட்ட விதைகளிலிருந்தும், சமையல் எண்ணெய்யிலிருந்தும் உற்பத்தி செய்யலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
சோளம், உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றை எத்தனால், பயோ டீசல் உற்பத்திக்கு பயன்படுத்தினால் அதுசார்ந்த உணவுத் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. வேளாண் நிலப்பரப்பு குறைந்து வரும் நிலையில் பயோ டீசலுக்கு விளைச்சல் நிலம் ஒதுக்குவது உணவு உற்பத்தியை பாதிக்கும் என்ற நிலை உள்ளது. உணவு உற்பத்தியைப் பாதிக்காத வகையில், அதேசமயம், அதிகளவு எண்ணெய் கிடைக்கும் வகையில் காட்டாமணக்கை கண்டறிய முயற்சிக்கலாம்.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் அதிகளவில் எண்ணெய் தரக்கூடிய சத்ரபதி என்ற காட்டாமணக்கை உருவாக்கியது. இந்த விதைகளிலிருந்து 49.2% எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் பயிரிட ஏற்றது என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2030-க்குள் மாசு வெளியேற்ற அளவு 35 சதவீதம் வரை குறைக்கப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மரபு சாரா எரிசக்தி மூலமான பயன்பாட்டை படிப்படியாக அதிகரிக்க முயற்சிக்க வேண்டியது அவசியமாகும்.

Courtesy:Dinamani

No comments:

Post a Comment