Saturday, October 31, 2015

அமெரிக்காவை ரஷ்யர்கள் வெறுப்பது ஏன்?

ஆகஸ்ட் மாதத்தின் வெதுவெதுப்பான மாலை நேரத்தில், மாஸ்கோவின் ‘பெவெர்லி ஹில்ஸ் டைனர்’ உணவகத்தில், மூன்று இளம் ரஷ்யர்களுடன் அமர்ந்திருந்தேன். ‘போர்க்கி தி பிக்’ மற்றும் மர்லின் மன்றோவின் ஆளுயர உருவங்கள் போன்ற அற்புதமான அலங்காரப் பொருட்கள் நிறைந்த உணவகம் அது.

“அமெரிக்கா எங்களை வளைக்கப் பார்க்கிறது” என்றார் 29 வயதான கிறிஸ்டினா டோனெட்ஸ், டெஸ்ஸெர்ட் வேஃபில் துண்டு ஒன்றில் வாழைப்பழ கலவையைப் பரப்பியபடி. “பல பிரச்சினைகளைத் தாண்டி நாங்கள் எழுந்து நிற்கிறோம். உங்களுக்கு (அமெரிக்காவுக்கு) அது பிடிக்கவில்லை” என்றார் அப்பெண்.

பத்தாண்டுகளுக்கும் அதிகமான இடைவெளிக்குப் பிறகு, ரஷ்யாவில் செய்தி சேகரிப்பது என்பது பழைய நண்பரை மீண்டும் சந்திப்பது போல் இருந்தது. ஆனால், அந்த ‘பழைய நண்பர்’ நிறையவே மாறியிருந்தார்.

சில வகைகளில், நல்ல விதமான மாற்றங்கள்! சமீபத்தில் ரூபிளில் ஏற்பட்டிருந்த சரிவு மற்றும் பண வீக்கம் போன்ற பிரச்சினைகள் இருந்தாலும், ரஷ்யர்கள் வளம் மிக்கவர்களாகியிருக்கிறார்கள். நிறைய பயணம்செய்கிறார்கள். 1997-ல் முதன்முதலாக நான் மாஸ்கோ சென்றபோது என்னை உபசரித்த அன்பான அந்த ரஷ்யப் பெண், ‘இனிமேல், பிளாஸ்டிக் பைகளைக் கழுவ வேண்டியிருக்காது’ என்று இம்முறை சொன்னார். நான் கடைசியாக அவரைப் பார்த்ததற்குப் பிறகு, அவரது சம்பளம் 4 மடங்கு உயர்ந்திருக்கிறது. முதன்முதலாக வெளிநாட்டுக்கும் சுற்றுலா சென்றுவந்தார் துனீசியாவுக்கு!

வெறுப்புப் பட்டியல்

அதேசமயம், இருண்ட பக்கங்களும் உண்டு. ரஷ்ய சமுதாயம் முன்பை விட தற்காப்பு கொண்டதாகவும், அதீத சுய பிரக்ஞை கொண்டதாகவும் மாறியிருக்கிறது. அரசியல் தொடர்புள்ள ரஷ்ய செல்வந்தர்களில் பலர் லண்டனில் ஒரு வீடும், இரண்டாவது பாஸ்போர்ட்டும் வைத்திருந்தார்கள். ஆனால், தற்போது என் ரஷ்ய நண்பர்கள் பலர் வெளியேறும் வழியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தற்போது ரஷ்யாவில் பல வெறுப்பு இலக்குகள் கட்டமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. உக்ரைன்கார்கள், தன்பாலின உறவாளர்கள், ஐரோப்பாவின் பால் பொருட்கள், எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்கா!

“தனது ஜனநாயகத்தை எங்கள் முகத்தில் அப்புகிறது” என்று கோபமாகச் சொன்னார் நிஸ்னி நோவ்கோரட் நகரைச் சேர்ந்த கோஸ்த்யா எனும் டாக்ஸி ஓட்டுநர். தன்பாலின திருமணத்துக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்ததால் அதிருப்தியடைந்த ரஷ்யர்களில் ஒருவர் அவர். “எதற்கெடுத்தாலும் ‘சரி!’ ‘சரி!’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். எல்லாவற்றுக்கும் தலையாட்டுகிறீர்கள். சில சமயங்களில் ‘இல்லை’ என்றும் சொல்ல வேண்டும்” என்று சொன்ன நிஸ்னி, அமெரிக்காவை எதிர்க்கும் நிலைப்பாட்டை இறுதியாக ரஷ்யா எடுத்திருக்கிறது என்று விளக்கினார்.

பழைய பகை

இதுபோன்ற கருத்தாக்கங்களுக்குப் பின்னால் ஏகப்பட்ட வரலாறு இருக்கிறது என்பது உண்மைதான். 19-ம் நூற்றாண்டில் ரஷ்யாவின் சரியான பாதை எது என்பதில் ஸ்லாவோபைல்களும் வெஸ்டர்னைஸர்களும் மோதிக்கொண்டனர். சோவியத் ஒன்றியம் இருந்த காலகட்டத்தில், அமெரிக்காவுக்கு எதிரான கடுமையான பகை இருந்ததில் வியப்பில்லை. அப்போதிலிருந்து, அமெரிக்காவின் உலக நடவடிக்கைகளின் அடிப்படையில் அதன் மீது பல எதிர்மறைக் கருத்துகள் நிலவுகின்றன. 1999-ல் செர்பியா மீது நேட்டோ படைகள் குண்டு வீசிய சம்பவம், இராக்கில் அமெரிக்கப் படைகள் ஊடுருவிய சம்பவம் போன்றவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம். ஆனால் இவை எல்லாவற்றையும் விட, அமெரிக்காவைப் பற்றிய ரஷ்யர்களின் தற்போதைய கருத்து, 24 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் ஒன்றியம் சிதறுண்டதற்குப் பிறகு மேலும் மோசமடைந்திருக்கிறது என்று மாஸ்கோவின் ‘லெவாடா அனல்ட்டிக்கல் சென்டர்’ தெரிவிக்கிறது.

அமெரிக்காவுக்கு எதிரான மனப்பான்மை தற்போது மேலும் வலுவடைந்திருக்கிறது. ஏனெனில், பல வகைகளில் ரஷ்ய அரசே இதை ஆதரிக்கிறது. இவ்விஷயத்தைப் பற்றிய சுதந்திரமான குரல்கள் எல்லாம் ரஷ்யத் தொலைக்காட்சி சேனல்களில் காணாமல் போய்விட்டன. ரூபிளில் ஏற்பட்டிருக்கும் சரிவு, பொதுப் போக்குவரத்தில் முதியோருக்கான மானியம் ரத்து என்று உள்நாட்டுப் பிரச்சினை எதுவானாலும், அதற்கு அமெரிக்கா - ரஷ்யா இடையிலான மோதல்தான் காரணம் என்று நம்பப்படுகிறது. எங்கு அரசியல் ஸ்திரத்தின்மை ஏற்பட்டாலும் அதன் பின்னணியில் அமெரிக்க அதிகாரிகள் இருக்கிறார்கள் என்றும் சித்தரிக்கப்படுகிறது.

மாபெரும் மாற்றம்!

“நாம் எல்லோரும் எப்படி வாழ்கிறோம் என்று அவளிடம் எடுத்துச் சொல். ஐரோப்பாவை விட சிறப்பாக நாம் வாழ்வதையும், க்ரீமியா இப்போது எத்தனை அற்புதமாக இருக்கிறது என்றும் அவளுக்குச் சொல்” என்று நான் பேட்டி எடுத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் ஒரு பெண் முணுமுணுத்தார். கடந்த ஆண்டு ரஷ்யாவால் இணைக்கப்பட்ட க்ரீமியா தீபகற்பத்தைக் குறிப்பிடுகிறார் அப்பெண். ரஷ்யாவில் நான் எதிர்கொண்ட மற்றொரு மாபெரும் மாற்றம் அது.

க்ரீமியா தொடர்பான புதினின் நடவடிக்கைகளால் ரஷ்யாவுக்குள்ளேயே பல குடும்பங்கள் பிரிந்துவிட்டன. பல உறவுகள் முறிந்துவிட்டன. சோவியத் ஒன்றியம் சிதறுண்ட நிகழ்வுக்குப் பின்னர், மேற்குலக நாடுகளு டனான உறவில் பெரும் விரிசல் விழுந்ததற்கும் க்ரீமியா விவகாரம் ஒரு காரணமாகிவிட்டது.

ரஷ்யாவின் மிகப் பெரிய திட்டம் என்ன? அப்படி எதுவும் இல்லை என்று முற்போக்கான ரஷ்யர்களில் பலர் என்னிடம் தெரிவித்தார்கள். அடுத்தடுத்த பிரச்சினைகளால் புதினும் அவரது நெருங்கிய வட்டாரத்தினரும் சோர்வடைந்திருக்கிறார்கள். இறக்குமதி உணவுகளுக்கு ரஷ்யா விதித்த தடையால் பணவீக்கம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. அத்துடன் க்ரீமியாவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் குறைந்திருக்கிறது. புதிய சமூகப் பொறுப்புகளால் ரஷ்யா சோர்வடைந்திருக்கிறது.

உள்ளூர் விமர்சனக் குரல்கள்

அரசு மோசமாகிக்கொண்டிருக்கிறது என்றும் தேசிய வாத முழக்கங்கள் ஒரு கெட்ட சகுனத்தைக் காட்டுகின்றன என்றும் சிலர் கருதுகிறார்கள். புதினின் ஆதரவாளர்களைச் செழிப்பூட்டிக்கொண்டிருந்த எண்ணெயின் விலை சரிந்திருக்கிறது.

“ரஷ்ய நிலம் தகித்துக்கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார் முன்னாள் பத்திரிகையாளரும், அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்துவருபவருமான எனது நண்பர் ஒருவர். “ரோமானிய நகரமான போம்பேயி எரிமலைச் சீற்றத்தில் அழிவதற்கு முன்னர், அனைத்து வளங்களும் வறண்டுவிட்டதைப் போன்ற நிலைமை இது” என்றார் அவர்.

அமெரிக்காவைப் பற்றிய மோசமான மதிப்பீடு நிரந்தரமான ஒன்றல்ல என்று சொன்னார் ‘லெவாடா அனல்ட்டிக்கல் சென்டர்’ கருத்துக் கணிப்பு மையத்தின் இயக்குநர் லெவ் குட்கோவ். ரஷ்யர்களின் தற்போதைய கோபம் கூட அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிரானது அல்ல என்றும், தங்கள் மீதே தங்களுக்கு இருக்கும் கோபம் என்றே தோன்றுகிறது.

இதெல்லாம் எந்த திசையை நோக்கிச் செல்கிறது என்று ஒரு முக்கியக் கேள்வி எழுகிறது. ரஷ்யாவை விட்டு வெளியேறிவிடலாம் என்று நினைப்பதாகச் சொல்கிறார் அலெக்சாண்டர் யெரெமெயேவ். “ரஷ்யாவில் தொழில் செய்வது நல்ல விஷயம் என்கிறார்கள் என் நண்பர்கள். ஆனால், அவர்களிடம் இருக்கும் பொதுவான விஷயம் என்ன தெரியுமா? வெளிநாட்டு பாஸ்போர்ட்டுகள்!”

Source:The Hindu Tamil

No comments:

Post a Comment