Wednesday, October 6, 2010

"ஆதார்' எனும் ஆதாரம்!

இந்தியாவின் முதல் தேசிய அடையாள அட்டை (ஆதார்) மகாராஷ்டிர மாநிலத்தில் ஓர் ஆதிவாசி குடியிருப்பில், ரஜ்னா சோனாவாணே என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த முதல் தேசிய அடையாள அட்டையை யாரோ ஒரு பெருநகரவாசிக்கு அளிக்காமல், கடைக்கோடியில் உள்ள ஆதிவாசி குடியிருப்பில் தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியதுதான்.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது, முதல் ஆதார அட்டை ஆகஸ்ட் 2010 முதல் பிப்ரவரி 2011-க்குள் வழங்கப்பட்டுவிடும் என்று இந்திய தேசிய அடையாள அட்டை ஆணையம் அறிவித்த திட்டத்தின்படியே இது நடந்துள்ளது என்பதும்கூட, இவர்கள் சொன்னபடி 2014-ம் ஆண்டுக்குள் 60 கோடி மக்களுக்கும் ஆதார அட்டைகளை வழங்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கை தருகிறது.

நகரவாசிகளைவிடவும் மிகவும் முக்கியமாக கிராம மக்களுக்குத்தான் இத்தகைய அடையாள அட்டை தேவையாக இருக்கிறது. ஆதார அட்டையைப் பெற்றுக்கொண்ட முதல் பெண் தனது நன்றி தெரிவிப்பில்கூட, "ஆதாரம் இனி என் வாழ்வின் ஆதாரம்' என்று கூறியிருப்பது மிகமிக உண்மை.

தற்போதைய சூழ்நிலையில் குடும்ப அட்டையை வங்கிகள்கூட ஓர் அடையாளமாக ஏற்கத் தயங்கும் அளவுக்குப் போலி குடும்ப அட்டைகள் மலிந்துவிட்ட நிலையில், எல்லா பயன்பாட்டுக்கும் பொருந்துகின்ற ஆதாரம் போன்ற அடையாள அட்டைகள் மிகமிக அவசியமாகின்றன. பன்னிரண்டு இலக்கங்கள் கொண்ட ஆதார அட்டை எண்ணைப் பயன்படுத்திக்கொண்டு, அனைத்து செல்போன் நிறுவனங்களும் இணைப்பை வழங்க முடியும். ஒருவேளை, ஆதார அட்டை எண்ணும் செல்போன் எண்ணும் ஒன்றாக இருக்கும் நிலைமை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த ஆதார அட்டை உண்மையிலேயே ஏழைகளுக்குத்தான் அடிப்படையான விஷயங்களில் தேவையாக இருக்கிறது. முதலாவதாக உணவு, இரண்டாவதாக மருத்துவம், மூன்றாவதாகக் கல்வி. இந்த அட்டையை வழங்கிப் பேசியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், ஆதாரம் இல்லாத காரணத்தால் ஏழைகளால் வங்கிக் கணக்கு தொடங்க முடியவில்லை, குடும்ப அட்டை பெற முடியவில்லை. அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற முடியவில்லை. இந்த ஆதார அட்டை அத்தகைய நிலையைப் போக்கும் என்று கூறியுள்ளார். அது உண்மைதான். இருப்பினும், இந்த ஆதார அட்டை வெறும் ஆதாரமாக இல்லாமல், எல்லா பயன்பாட்டுக்கும் தொடர்புடைய ஆவணமாக மாற்றப்பட்டாக வேண்டும்.

இந்த ஆதார அட்டைகளை அடிப்படையாக வைத்து பொருள் விநியோகத்தைத் தொடங்கும்போது, ஏழையின் பெயரைச் சொல்லி உணவு தானியங்களை வேறு இடங்களுக்குக் கடத்தவும், பொது விநியோக மையங்களில் கொடுக்காமல் தவிர்க்கப்படுவதுமான நிலையைத் தவிர்த்துவிட முடியும். மேலும், இந்த ஆதார அட்டையில் இருப்பவர் எத்தகைய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், எந்தெந்தத் தடுப்பூசிகள் அரசால் போடப்பட்டன, இவர் எந்தெந்தத் திட்டத்தில் பயனடைந்தார் என்கிற அனைத்துத் தகவல்களும் - இந்த ஆதார எண்ணைத் தட்டினாலே கணினியில் பார்க்க வகைசெய்ய முடியும். ஆதார அட்டையால் பயன்பெறப் போகிறவர்கள் முழுக்க முழுக்க ஏழைகளும், நடுத்தர மக்களும்தான் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த அட்டை ஒவ்வொரு இந்தியனின் பிறந்த தேதி, தாய் தந்தை, ஊர், மாவட்டம், மாநிலம், ரத்த வகை ஆகியவற்றோடு, ரேகைப்பதிவு அடையாளங்களையும் கொண்டிருக்கும் என்பதால் இதன் பயன்பாடு பலவகைப்பட்டதாக இருக்கிறது.

பெருவிரல் ரேகைப் பதிவு இருப்பதால் இதில் போலிகள் வராது என்றாலும்கூட, நம் அரசு ஊழியர்கள் செய்யும் குளறுபடிகளால் இத்திட்டம் அர்த்தமற்றதாக மாற்றப்படும் அபாயங்கள் உள்ளன. கைரேகைப் பதிவு சரியாக இருந்தாலும் பெயர் மாறுதல், தவறாக அச்சிடுதல், பிறந்த தேதியைத் தவறாகக் குறிப்பிடுதல் என்று எல்லா குளறுபடிகளையும் செய்யும் துணிவும் ஆற்றலும் கொண்டவர்கள் நம் அரசு இயந்திரத்தின் உறுப்புகளாக இருக்கிறார்கள். தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை இதற்கு ஒரு சான்று.

வாக்காளர் அடையாள அட்டைகளுக்காகப் புகைப்படம் எடுத்து, நேரடி சரிபார்ப்பு முடித்தும் பலருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படவே இல்லை. தேர்தல் நேரத்தில் வழங்கப்படாமல், எங்கோ ஒளித்து வைக்கப்பட்டு, பிறகு குப்பையில் கொட்டப்பட்ட வாக்காளர் அட்டைகள் பற்றி நிறையச் செய்திகள் வந்தும், எந்தவொரு அதிகாரி, ஊழியர் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.

வாக்காளர் பதிவேட்டில் உள்ளவருக்கு எப்படி அடையாள அட்டை மட்டும் இல்லாமல் போகும்? அதற்குப் பொறுப்பானவர் யார்? என்கிற விசாரணைகூட இல்லையென்றால், இதற்குக் காரணம் அலுவலர்களின் சோம்பேறித்தனமா அல்லது அரசியல்வாதிகளின் சதியா? எது உண்மை?

வாக்காளர் அடையாள அட்டை வழங்கவில்லை அல்லது தவறான புகைப்படம், பிழையான பெயரில் வழங்கப்பட்டது என்று சொன்னால், வருவாய்த் துறை அதிகாரிகள் ஒப்புக்கொள்வதில்லை.

தொலைந்துபோனதால் வேறு அடையாள அட்டை வழங்கக் கோரும் மனுவைக் கொடுத்து, வாக்காளரைக் குற்றவாளியாக்கும் நடைமுறைதான் தற்போது அமலில் இருக்கிறது.

இதே நிலைமை ஆதார அட்டைக்கும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தவறுக்குக் காரணமான ஊழியர், அதைச் சரிபார்க்கத் தவறிய அலுவலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாத்தியம். அதைச் செய்ய அரசு தயங்குமானால், வாக்காளர் அடையாள அட்டை குழப்பம் போலவே, ஆதார அட்டை அர்த்தமிழக்கும்.

நல்லதொரு தொடக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, குளறுபடிகளோ, குறைபாடுகளோ இல்லாத, எல்லா விவரங்களையும் உள்ளடக்கிய, எல்லா பயன்பாட்டுக்கும் உதவக்கூடிய அடையாள அட்டை ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம், ஊடுருவல்கள் தவிர்க்கப்படுவது மட்டுமல்ல, சலுகைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதும் தடுக்கப்படும்.

No comments:

Post a Comment