Wednesday, October 6, 2010

நம் கௌரவப் பிரச்னை...

சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது என்பது ஒரு கௌரவப் பிரச்னை மட்டுமல்ல, உலகத் தரத்திலான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இந்த விளையாட்டுப் போட்டிகள் வாய்ப்பளிக்கின்றன. அதுமட்டுமல்ல, எந்தவொரு விளையாட்டுப் போட்டி ஒரு நாட்டில் நடைபெறும்போதும், அந்த விளையாட்டுப் போட்டியில் தங்கள் நாட்டு வீரர்கள் உலக சாதனையாளர்களுடன் பங்கு பெறுவதன் மூலம் தேர்ச்சி அடையவும், முடிந்தால் உலக சாதனைகளைப் படைக்கவும்கூட இந்த விளையாட்டுப் போட்டிகள் உதவும் என்பதும் ஒரு காரணம்.

ஏனைய நாடுகள் இதுபோன்ற சர்வதேச உலகப் போட்டிகளை நடத்த முன்வரும்போது, முதல் கட்டமாகத் தங்களது நாட்டில் அந்த விளையாட்டுகளில் வெற்றி வாய்ப்புடைய இளைஞர்களைத் தேடிப் பிடித்துப் பயிற்சி அளிக்கிறார்கள். ஓரளவுக்கு, உலக அரங்கில் போட்டியிடுமளவு தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் தயாரான பிறகுதான் இதுபோன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்தப் பல வளர்ச்சியடையும் நாடுகள் முன்வருகின்றன.

கடந்த முறை சீனாவில் ஒலிம்பிக் பந்தயங்கள் நடந்தபோது, அதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஒவ்வொரு விளையாட்டுக்கும் பத்து முதல் பதினைந்து வயதுவரை உள்ள இளைய தலைமுறையினரை அடையாளம் கண்டு பயிற்சி அளிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதனால்தான் பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பல தங்கப் பதக்கங்களை வென்று சீனா உலகையே பிரமிப்பில் ஆழ்த்த முடிந்தது.

இதெல்லாம் நமக்குத் தெரியாததல்ல. நம்மிடம் மனிதவளத்துக்கும் பஞ்சமில்லை. திறமைக்கும் பஞ்சமில்லை. ஆனால், திறமைசாலிகளை முறையாக அடையாளம் கண்டு, கிராம அளவிலிருந்து தொடங்கி போட்டிகள், பயிற்சிகள் என்று முனைப்புடன் செயல்பட இந்தியாவில் நிர்வாக இயந்திரம் தயாராக இல்லாததுதான் நமது குறை.

இந்திய ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் சுரேஷ் கல்மாதியின் தன்னிலை விளக்கம் முற்றிலும் நிராகரிக்கப்படக்கூடியதல்ல. விளையாட்டு கிராமத்திலுள்ள மொத்தம் 36 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் 18 குடியிருப்புகளைத்தான் கட்டி முடித்து ஒப்படைத்திருக்கிறார்கள். இப்போதுதான் அவசரக் கோலத்தில் மீதமுள்ள 18 குடியிருப்புகள் ஒப்படைக்கப்படுகின்றன. குடியிருப்புகளில் வசதி ஏற்படுத்திக் கொடுப்பதுதான் ஒலிம்பிக் கமிட்டியின் வேலையாக இருக்க முடியுமே தவிர, குறித்த நேரத்தில் கட்டி முடிப்பது அவர்கள் வேலை இல்லையே. இதற்கான பழியை தில்லி அரசும், மத்திய நகர்ப்புற அமைச்சகமும்தானே ஏற்றுக்கொள்ள வேண்டும்!

சர்வதேச அளவிலான போட்டிகள் நடக்கும்போது, அதன் செயல்பாடுகளை பிரதமர் அலுவலகமும், மத்திய விளையாட்டு அமைச்சகமும் தொடர்ந்து கண்காணித்து வந்திருக்க வேண்டும். காமன்வெல்த் போட்டிகள் விஷயத்தில் மட்டுமல்ல, எல்லா விஷயங்களிலும் தன்மீது எந்தப் பொறுப்பும் சுமத்தப்படக்கூடாது என்பதில் எல்லா பிரிவினரும் உஷாராக இருப்பதன் விளைவுதான், இதுபோன்ற குளறுபடிகளுக்குக் காரணம். தவறுக்குப் பொறுப்பேற்காமல் தட்டிக் கழிக்கும் இந்திய சுபாவத்தின் அடையாளத்துக்குக் காமன்வெல்த் போட்டிகள் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டன.

விளையாட்டு வீரர்கள் வரத் தொடங்கிவிட்டனர். இங்கிலாந்திலிருந்து வீரர்கள் வருவதற்கு முன்பே அவர்களுக்குப் பணிவிடை செய்வதற்காக 20 உதவியாளர்கள் வந்துவிட்டனர். கென்யாவிலிருந்து 112 பேர், நைஜீரியாவிலிருந்து 69 பேர், ஸ்காட்லாந்திலிருந்து 60 பேர் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் தில்லி வந்து சேர்ந்துவிட்டனர்.

மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் ஜெய்பால் ரெட்டியின் கூற்று பொறுப்பின்மையின் உச்சகட்டம் என்றாலும்கூட, கல்யாண முகூர்த்தம் நெருங்க நெருங்க, நாம் குறைகளைக் குத்தித் தோண்டி நாமே நம்மீது சேற்றை வாரி இறைத்துக் கொள்வதைவிட, மணப்பந்தலில் கவனம் செலுத்துவதுதானே நியாயம்? கடைசி நிமிடத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்று விட்டேற்றித்தனமாக இருக்கக்கூடாதுதான். ஆனால், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நெருங்கிவிட்ட நிலையில், இனி நாம் சுறுசுறுப்பாக இயங்கி, முடிந்தவரை இந்தியாவின் கௌரவம் சர்வதேச அளவில் பாதிக்கப்படாமல் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

கடைசி நிமிடத்திலும் நம்மவர்கள் ஏதாவது தேவையில்லாத சர்ச்சையைக் கிளப்புகிறார்கள். இங்கிலாந்து மகாராணி தனது வயோதிகம் காரணமாகப் போட்டிக்கு வர இயலாததால் இளவரசர் சார்லûஸ அனுப்பி வைத்திருக்கிறார். மகாராணி வராததால் போட்டிகளை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்தான் தொடங்கி வைக்க வேண்டும் என்று நமது அதிகார வர்க்கம் குரலெழுப்பி வீண் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த காலனிகள் சுதந்திரம் அடைந்த பிறகும், பிரிட்டனுடனான தொடர்பை முற்றிலுமாகத் துண்டித்துக் கொள்ளாமல் இருப்பதற்காக ஏற்பட்டதுதான் "காமன்வெல்த்' என்கிற அமைப்பு. இந்த அமைப்பில் தலைமை வகிப்பது பிரிட்டிஷ் ராஜகுடும்பம். நாம் "காமன்வெல்த்' அமைப்பில் இருந்தாக வேண்டும் என்கிற நிர்பந்தம் எதுவும் இல்லை. ஆனால், அந்த அமைப்பில் அங்கம் வகித்து, அதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தவும் முற்பட்ட பிறகு, பிரிட்டிஷ் இளவரசர் போட்டிகளைத் தொடங்கி வைக்கக் கூடாது என்று முரண்டு பிடிப்பது அநாகரிகம்.

இதுவரை செய்துவிட்ட குளறுபடிகள் போதுமே. இனிமேலாவது, இதுபோன்ற தேவையில்லாத சர்ச்சைகளைக் கிளப்பி, கீழ்த்தரமான அரசியலை காமன்வெல்த் போட்டிகளில் அரங்கேற்றாமல், இந்தியாவின் கௌரவத்தையும், காமன்வெல்த் போட்டிகளின் வெற்றியையும் கருத்தில்கொண்டு செயல்படுவதுதான் புத்திசாலித்தனம்.

ஊடகங்களும் சரி, சற்று அடக்கி வாசித்தால் நல்லது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க இன்னும் ஒருசில நாள்களே உள்ள நிலையில், நடந்துவிட்டிருக்கும் தவறுகளைப் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பதைவிட, தவறுகளை எப்படி எல்லாம் திருத்துவது என்பதிலும், கூடியவரை உலக அரங்கில் இந்தியாவின் கௌரவம் காப்பாற்றப்படுவதிலும் கவனம் செலுத்துவதுதான் புத்திசாலித்தனம்.

No comments:

Post a Comment