Monday, August 9, 2010

விளையாட்டல்ல தேச கௌரவம்!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடக்காமல் போனால் நான் மகிழ்ச்சி அடைவேன்' என்று முன்னாள் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் சொல்லி இருப்பது பலரது கோபத்தைக் கிளறி இருக்கிறது. மணிசங்கர் அய்யர் பொறாமையால் பிதற்றுகிறார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாதியும், பொறுப்பற்றத்தனம் என்று பாரதீய ஜனதா கட்சியும் அவரது பேச்சை வர்ணித்திருக்கிறார்கள்.

மணிசங்கர் அய்யர் அப்படிப் பேசியிருக்க வேண்டாம்தான். ஒரு நாட்டின் கெüரவப் பிரச்னையாக மாறிவிட்டிருக்கும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை வேண்டாம் என்று ஒதுக்கிவிடவோ, நடத்தாமல் போவதோ இன்றைய உலகச் சூழலில் இந்தியாவின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் உகந்ததாக இருக்காது.

இந்த விளையாட்டுப் போட்டிகளுக்காக ஒதுக்கப்பட்ட 16 ஆயிரம் கோடி ரூபாயை கிராமப்புறங்களில் வாழும் ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்க பயன்படுத்தியிருக்க வேண்டும் என்கிற மணிசங்கர் அய்யரின் கருத்து, அவரது சமதர்ம சிந்தனையையும், மனிதாபிமான கண்ணோட்டத்தையும் காட்டுகிறதே தவிர, தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தவில்லை.

மணிசங்கர் அய்யர் சொன்னது ஒருபுறம் இருக்கட்டும். நமது இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் கையாலாகாத்தனம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறதே அதற்கு என்ன செய்யப் போகிறோம்? இப்படியே போனால், இந்தியா சர்வதேச அரங்கில் ஏளனத்துக்கும், அவமானத்துக்கும் உள்ளாகப் போகிறதே, இதைப்பற்றி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரோ, பிரதமர் மன்மோகன்சிங்கோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லையே ஏன்?

கடந்த 2003-ம் ஆண்டு, முந்தைய தேசிய ஜனநாயக முன்னணி அரசு ஆட்சியில் இருக்கும்போது, பல நாடுகளின் போட்டியை எதிர்கொண்டு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை தில்லியில் நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றது. இதற்காக 16 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு செலவாகியும் இருக்கிறது. ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்னும் சரியாக ஒரு மாத இடைவெளிதான் இருக்கிறது போட்டிகள் தொடங்க. இன்னும் கட்டமைப்பு வசதிகள் செய்து முடிக்கப்படவில்லை. விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணி முக்கால்வாசிதான் முடிந்திருக்கிறது. விளையாட்டு வீரர்கள் வந்தால் தங்கும் வசதிகள் முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை. சர்வதேசத் தரத்துக்கு தில்லி விமான நிலையம் உயர்த்தப்பட்டிருப்பது மட்டும்தான், முழுமையாகச் செய்து முடிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை எந்த ஒரு பணியும் திட்டமிட்டதுபோல நடக்கவில்லை, முடிக்கப்படவும் இல்லை என்பதை வெட்டவெளிச்சமாக்கியது. அப்போதாவது மத்திய அரசும் ஆட்சியாளர்களும் சுதாரித்துக் கொண்டிருக்க வேண்டாமா? ஒதுக்கப்பட்ட தொகையைவிட பல மடங்கு அதிகமாக ஒப்பந்தக்காரர்கள் செலவழித்து, அதற்காகப் பணமும் பெற்றிருக்கிறார்கள். வேலை முடிந்ததா என்றால் அதுவும் இல்லை. ஏறத்தாழ 14 முக்கியமான வேலைகள் முடியவில்லை என்பது மட்டுமல்ல, அதற்குப் பின்னால் நடந்திருக்கும் ஊழல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்திய விளையாட்டு ஆணையம், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், தில்லி அரசு என மூன்று அரசு இயந்திரங்கள் கைகோத்துச் செயல்படும் இந்த சர்வதேச விளையாட்டுப் போட்டிக்கான வேலைகளில், சுணக்கம் ஏற்பட்டிருப்பதற்கும், தரம் குறைந்திருப்பதற்கும் அடிப்படைக் காரணம், தில்லியில் கோலோச்சிவரும் கட்டட கான்ட்ராக்டர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என்கிற மூவர் அணியின் கூட்டுக்கொள்ளைதான் என்பதை மத்திய ஊழல் கண்காணிப்புக் கமிஷன் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

கடந்த 1982-ல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தபோது, புதுதில்லி சர்வதேச மரியாதையை அடைந்தது. புதுதில்லியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, ஆசிய விளையாட்டுப் போட்டி தந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டது அன்றைய இந்திராகாந்தி அரசு. கடந்த 2008-ல் தனக்கு சர்வதேச அந்தஸ்தை சீனா ஏற்படுத்திக்கொண்டது, பீஜிங்கில் ஒலிம்பிக் போட்டியை நடத்தியதன் மூலம்தான். கம்யூனிச நாடான சீனாவைப் பற்றி உலக அரங்கில் இருந்த தவறான கண்ணோட்டத்தை மாற்றி எழுதவும், சர்வதேசத் தரத்தினாலான கட்டமைப்பு வசதிகளை பீஜிங்கிற்கு ஏற்படுத்திக்கொள்ளவும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சீனாவுக்கு உதவின.

சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியைத் தென்னாப்பிரிக்கா நடத்த முன்வந்தபோது, பல உலக நாடுகள் மிகவும் பின்தங்கிய அந்த நாட்டை சந்தேகத்துடன்தான் பார்த்தன. ஜோகன்னஸ்பர்க்கில் வெற்றிகரமாக ஜூன் 11 முதல் ஜூலை 11 வரை கால்பந்துப் போட்டியை நடத்திய தென்னாப்பிரிக்கா தற்போது உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறது.

சர்வதேசப் போட்டிகளை நடத்துவது விளையாட்டுக்காக மட்டுமல்ல. அந்த நிகழ்வைக் காரணம் காட்டி, கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கிக்கொள்ளவும், சுற்றுலா வளர்ச்சியை அதிகரிக்கவும், அந்த தேசத்தில் குறிப்பிட்ட விளையாட்டுக்கு ஊக்கமளித்து, உலக சாம்பியன்களை உருவாக்கவும், எல்லாவற்றுக்கும் மேலாக, நாட்டின் கெüரவத்தை சர்வதேச அரங்கில் நிலைநாட்டவும்தான்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா வந்து ஏற்பாடுகளைப் பார்வையிட்ட சர்வதேச காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி கூட்டமைப்புத் தலைவர் மைக் பென்னல், ஏற்பாடுகள் மிகவும் ஆமை வேகத்தில் நகர்வதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம் என்றும் அப்போதே ஐயப்பாட்டை எழுப்பினார். மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கையும் சந்தேகங்களை ஓராண்டுக்கு முன்பே எழுப்பியது. அப்படியிருந்தும் இன்னும் வேலைகள் முடிந்தபாடில்லை. ஆத்திர அவசரத்தில் அக்டோபர் 3-ம் தேதிக்குள் எதையோ செய்து முடித்து, நாங்களும் காமன்வெல்த் போட்டிகளை நடத்தினோம் என்று சொல்வோமேயானால்,உலக அரங்கில் இந்தியாவின் மானம் கப்பலேறும்!

16 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் விரயமாகி இருக்கிறது என்று மணிசங்கர் அய்யர் கூறியிருப்பதில் ஏதோ உண்மையும் இருக்கத்தானே செய்கிறது. பீஜிங் ஒலிம்பிக் போட்டியோடும், ஜோகன்னஸ்பர்க் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியோடும், தில்லியில் நடக்க இருக்கும் காமன்வெல்த் போட்டியை உலகம் ஒப்பிட்டுப் பார்க்கும் என்பதை நினைத்தால் வயிற்றில் புளியைக் கரைக்கிறது!

No comments:

Post a Comment